நூல்: இராவண காவியமும் கம்ப இராமாயணமும் – ஓர் ஒப்பீடு
ஆசிரியர்: :பரமத்தி சண்முகம்
வெளியீடு :சன்முரசுப் பதிப்பகம்,
19, வேலம்மாள் ‘லே அவுட்’,
செங்குந்தபுரம்,
கரூர்-639002.
விலை: ரூ100. பக்கங்கள்: – 224
கம்பனின் பொய்களும் முரண்பாடுகளும்
தாடகை, தென்னிலங்கைப் பெருவேந்தனின் தங்கை! வீரத்தமிழச்சி. திராவிட மண் காக்கும் சிற்றரசி! பெண்ணரசியைத்தான் ஆரியத்தின் கைக்கூலிக் கவிஞனான கம்பன் கற்பனைகளில் எல்லாம் அடங்காத உவமைகளால் கொச்சைப்படுத்துகிறான். இன உணர்வோ, தன்மானமோ, பொது அறிவோ துளியும் இன்றி, நம் இனத்தின் நலங்காக்கும் நங்கையை மோசமான தன்மையில் நாசமாக்கிக் காட்டுகிறான் கம்பன்.
வடக்கே இருந்து தென்புலத்தில் நுழைந்து பிழைப்புத் தேடி அலைந்த ஆரியக்கூட்டம் யாகம், தவம் என்கிற பெயரால் வளம் மிகுந்த காடுகளில் புகுந்து ஆடு, மாடு, குதிரை, பன்றி போன்ற உயிரினங்களைக் கொன்று, அவற்றை வேக வைப்பதற்காக, அழகிய நந்தவனங்களையும் மலர்ச் செடிகளையும் அழித்து நாசப்படுத்தியதோடல்லாமல், சுரா போன்ற மதுபானங்களைக் கொண்டு வந்து மாமிசங்களைத் தின்று மது வகைகளைக் குடித்து, நெறி கெட்ட தன்மையில் யாகம் என்கிற பெயரால் அடிக்கும் கொட்டத்தையும் கூத்துகளையும் கண்டு, அவர்களை விரட்டியடிப்பதும், தங்கள் தாய் மண்ணில் தகாதவர்களான ஆரியர் புகுந்து அட்டகாசம் செய்வதைத் தடுப்பதும் அந்தப் பகுதியின் அரசியான தாடகையின் கடமைதானே! அதனைக் கம்பன் மறைத்தே விடுகிறான். அந்தப் பகுதி முழுதும் தமிழர் பகுதி! மாமன்னன் இராவணனின் ஆளுகைக்குட்பட்ட பகுதி, அதன் அழகையும் வனப்பையும் கண்டு இராமனும் இலக்குவனும் வியப்படைகிறார்கள். ஆனால், கம்பனோ,
அந்த நிலம் அழிந்து பாழாகிக் கிடப்பதுபோலச் சித்தரிக்கிறான். அந்த நிலத்தினைக் கம்பன் தனது 12 பாடல்களைக் கொண்டு பழிக்கிறான். பாலைவனத்தினும் மோசமானதாக இகழ்ந்துரைக்கிறான்! என்னே கொடுமை!
பாரும் ஓடாது நீடாது எனும்பாலதே
சூரும் ஓடாது கூடாது அரோ¢; சூரியன்
தேரும் ஓடாது மாமாகம் மீதேரின்நேர்
காரும் ஓடாது நீள்காலும் ஓடாது அரோ
பாலகாண்டம் தாடகை வதைப்படலம் (கம்பராமாயணம் பாடல் 348)
நிலமகள் அப்பாலையை விட்டு ஓடி விட விரும்பினாலும் அவளும் அங்கிருந்து அகல முடியாத நிலை பெற்றிருந்ததாம்!
காளி தேவியும் அந்நிலத்தை விட்டு ஓட விரும்பினாலும் ஓட நினைக்கக்கூட முடியவில்லையாம்!
இன்னும் ஆராய்ந்து பார்த்தால் அந்நிலத்துக்குமேலே ஓடுகின்ற மேகங்கள் கூட அங்கு வந்தவுடன் ஓடாது ஒதுங்கியதாம்! வீசுகின்ற காற்றுக்கூட அந்நிலத்தின் பக்கம் வீசாதாம்!
இது திராவிட அரசியின் பூமியின் விந்தமலைச்சாரலின் விபரீதக் காட்சியாம்! கம்பன் புளுகுகிறான். கற்பனை வளம் என்பார் புராண விரும்பிகள். காவியப் புலவர்களோ இலக்கிய மேதைகளோ சூரியன் தேரேறிச் சென்றான். அந்தத் தேர் விந்தமலைச் சாரலின் ஒரு பகுதியில் தகித்த வெப்பத்தால் சோர்வுற்று ஓடாது நின்றது என்கிற அளவுக்கு, கம்பன் கூறும் கூற்றைக் கற்பனை என்று ஏற்றுக் கொள்வார்களா? அறிவுலகம் அதனை ஒப்புக் கொள்ளுமா? சரி, அது போகட்டும், அடுத்து, தாடகையின் தோற்றம் பற்றிக் கூற வந்த கம்பன்,
சிலம்புகள், சிலம்பிடை செறித்தகழ லோடும்
நிலம்புக மிதித்தனள் நெளித்தகுழி வேலைச்
சலம்புக அனல்தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள்.
(பாடல் 369 தாடகை வதைப்படலம், கம்பராமாயணம்)
மலைகளைப் பரல்களாய்ப் பெற்றுள்ள சிலம்புகளை அணிந்த கால்களினால் தரையே கீழே போகும்படி மிதித்துக் கொண்டு வந்தாளாம், அதனால் தரைகளில் பெரும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டதாம். அந்தப் பள்ளங்களில் கடல்நீர் வந்து பாய்ந்ததாம். எமன்கூட அந்தப் பாதாளத்தில் போய் ஒளிந்து கொண்டானாம். அசையாத மலைகளெல்லாம் அசைந்து இடம் பெயர்ந்தனவாம்!
அக்கினிதேவனே அந்த இடத்தை நினைத்து விட்டால் நெஞ்சு வெந்து போகுமளவும், அவனுடைய கண்களும் கருகிப் போகும் கொடுமையான வெம்மை மிகுந்த இடம் என 344-ஆம் பாடலில் விவரிக்கும் கம்பன்,
தாடகை வரும்போது அவள் பாதம் பட்ட இடம் பள்ளத்தாக்குகளாகி, அந்தப் பள்ளத்திலே கடல்நீர் வந்து தேங்கியது என்கிறானே, இங்கே எப்படிக் கடல் நீர் வந்தது? அவ்வாறானால் வெம்மையின் கொடுமை எப்படி இருக்க முடியும்?
அப்படி வருவதானால் தாடகையின் சொந்த நிலமான அவ்விடத்தில் தாடகை கால் பதித்த இடமெல்லாம் சிறுசிறு குளங்களாக, நீர் நிலைகளாக அல்லவா இருக்க முடியும்? பிறகேன் சூரியனும் காணக் கண் கூசும் அளவு அங்கு அனல் வீசுகிறது? மூடனும் கைகொட்டி நகைக்கக்கூடிய முரண்பாடல்லவா? இதோ இன்னும்!
393ஆம் பாடலில் இராமனை, கம்பன் கரியவனான இராமன் என்கிறான்.
394ஆம் பாடலில் அதே இராமனைப் பொன்மயமான மேருமலையைப் போல நின்றான் என்கிறான். எத்துணைக் குழப்பம்! முன்னுக்குப் பின் மோதல்! உண்மைக்கு மாறாகப் பொய்யையே மய்யாகக் கொண்டு எழுதும்போது மோதல்தான் வரும். உண்மையை அப்படியே மறைத்துப் பொய்யாகக் கதை பண்ணுவோரின் எழுத்தில் மெய்யின் ஒளி மறைந்து பொய்யின் மாயத்தோற்றம்தான் தெரியும். ஆனால், நமது புலவர் பெருமான் குழந்தை அவர்களும் தாடகையின் வரலாற்றையும் அவளது ஆட்சியின் அதிகாரத்துக்குட்பட்ட விந்த மலைச்சாரலின் வளத்தையும், வனப்பையும் எழில் மிகுந்த காட்சியையும் தமிழ் உணர்வோடும், தன்மானச் சிந்தனையோடும் பாடுகிறார் பாருங்கள்.
தாடகை பற்றி விசுவாமித்திரன் இராமலக்குவர்களிடம் கூறுகிறாராம்:
“தாடகை நம்மவர்களை இங்கே வருவதையே அனுமதிப்பதில்லை. ஏன் என்னையே கூட விடாமல் அடித்துத் துரத்துகிறாள். இது அவளது தாயகம்! இங்கு அந்நியர்க்கிடமில்லை. இங்கு நம்மவர் (ஆரியர்) அண்டவே விடாமல் துரத்துகிறாள். எதிர்ப்பவர்களைக் கொன்று குவிக்கிறாள். நான் செய்யும் யாகாதி கருமங்கள் நடைபெற விடாமல் தடுக்கிறாள். ஆகையினால் தான் இராமா, உன்னை இங்கு நான் அழைத்து வந்தேன்’’ என்று புறங்கூறுகிறான்.
அன்னவள் நம்மோ ரிங்கண்
அடைதரப் பொறாதா ளாகி
இன்னல்கள் பலவும் செய்தே
எதிர்ப்பவர் தம்மைக் கொன்றும்
தன்னல முடையாள் தங்கள்
தாயக மெனவே நம்மோர்
துன்னுதல் கூடா தென்று
துரத்தினா ளெனையும் கூட
(தாடகை கொலைப்படலம், பாடல் 24, இராவண காவியம்)
என்ன திமிர் விசுவாமித்திரனுக்கு! வடக்கே இருந்து தெற்கு நோக்கி மேய்ச்சல் தேடி வந்த மனித மிருகங்களான ஆரியக் கூட்டம் அல்லவா? எனவே, தனது மண்ணில் தகாதவர்கள் வரக்கூடாது என்று தடுப்பது அவள் கடமையல்லவா?
எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் யார்? ஆரியர் கூட்டம்தானே!
எல்லை காக்கும் கடமையின்போது எல்லை தாண்டி எதிர் வருவோரை எதிர்த்தழிப்பதுதானே ஆள்வோரின் கடமை? அப்படி எதிர்ப்படுவோரை அழிப்பது போர்முறைகளில் ஒன்றுதானே! அதைப் பழிப்பது எப்படி நியாயமாகும்? தர்மமாகும்?
ஆனால், அது அதர்மமாம்! இவர்கள் செய்யும் யாகங்களை அழிப்பதைப் பொறுக்க முடியவில்லையாம்!
கூறுகிறான், விசுவாமித்திரன். அப்படிப்பட்ட பெண்ணரசியை, வீரத் தமிழரசியைக் கொல்லவே இராமனையும் அவன் தம்பி இலக்குமணனையும் அங்கு கூட்டி வந்தானாம். தாடகை எப்படிப்பட்டவள்!
இதோ! அவள் உலா வருகிறாள் தன் தோழியரோடு!
ஆயிடை யவர்கள் இவ்வாறாளவளாவி யிருக்கப் பெற்ற
தாயினும் மிகுந்த வன்பிற் றமிழரைக் கண்போல் காக்கும்
சேயுளம் படைத்த செல்வத் தேவியு மந்நாள் மாலை
கோயிலை நீங்கி மின்னார் குலவிட உலவச் சென்றாள்.
(இராவண காவியம்: தாடகை கொலைப்படலம் பாடல்: 25)
தமிழர்களைத் தாயினும் மிகுந்த அன்பைச் சொரிந்து காப்பவள். தன்னில் குழந்தையுள்ளம் கொண்டவள். உலா வருகிறாள். தோழியரோடு எப்படி?
முயற்கையி லிருந்து கீழ்வாய் முந்திரியேனும் தப்பா
அயிற்கைய ரருகி லாம லரசியும் அருமை யான
இயற்கையி னியல்புதன்னை இருகணும் குளிரக்கண்டே
செயற்கையி னியலார் சூழச் சென்றன ளவர்கள் பக்கம்.
(பாடல்: 27, தாடகை கொலைப் படலம், இராவண காவியம்)
தாடகை தன் தோழிகளுடன், இயல்பாக அந்த எழில்மிகு சோலையின் அழகைக் கண்டும் தோழிகளோடு கொஞ்சி மகிழ்ந்தும் வருகிறாள். அவளுக்கு இமைப்பொழுதும் கண் துஞ்சாது, எள்ளின் மூக்களவு கூடக் கவனம் திரும்பாது கையில் வேலும் வாளும் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புக்கு இருந்தும் தன்னுடைய சோலைதானே! என்று தனியே உலா வந்து கொண்டிருந்தாள்.
அவ்வாறு உலவிவரும் அத்தமிழரசியை நம்புலவர் பெருமாள் தேனும் பாலும் சேர்ந்தால் கூட ஈடில்லாச் சுவை மிகுந்த தமிழ்ப் பெண்ணாள் என்று புகழ்கிறார். புலவர் பெருமானின் தமிழ்ப்பற்றை என்னென்று புகழ்வது! தனியாக தாடகை வருவதைக் கண்ட விசுவாமித்திரன்,
இதைவிட அவளைக் கொல்லற்
கேற்றதோர் காலம் வாய்த்தல்
மதிவலி மிக்கோய் இல்லை
பெண்ணென்று மயங்கல் வேண்டா
எதிரிக டம்மில் ஆண்பெண்
என்றவேற் றுமையொன் றில்லை
அதிர்குர லிடியே றன்னாள்
அதோபெயர் கின்றாள் பாரும்
(பாடல் 31, தாடகை கொலைப்படலம், இராவண காவியம்)
தாடகை தமிழ்ப் பெண்ணாக, தான் தனது ஆளுகைக்குட்பட்ட சோலையில் உலா வரும்போது, ஒரு தமிழ்ப் பெண் தனியாக வருவதுதான் தக்க தருணம் என்கிறான் _ எல்லாம் வல்ல முனிவன், அவளைக் கொல்வதற்கு _ யாரிடம்? அவதார புருஷரான இராமனிடம்! பெண்ணென்று பார்க்காதே. போரில் ஆண் என்றும் பெண்ணென்றும் பார்க்கலாமா? அவள் இடியோசை போன்ற அதிரும் குரலுடையவள்! ஆயுதம் ஏந்தினால் ஆபத்து!
எனவே, இப்போதுதான் அவளைக் கொல்வதற்குச் சரியான தருணமென்று இராம, இலக்குவர்களிடம் கூறி ஏவி விடுகிறான். இதைக் கேட்ட இராமனும் இலக்குவனும் தமிழ்ப் பெண்ணாகிய தாடகையை _ தனிமையான, நிராயுத பாணியான அவளைக் கொலை செய்யப் புறப்பட்டு விட்டனர்.