பெரியார் பேசுகிறார் : எது கடவுள்? எது மதம்?

மார்ச் 16-31 2020

தந்தை பெரியார்

தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும் அவற்றின் அவதாரமென்றும், ரூபமென்றும் அதற்காக மதமென்றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியார்கள் என்றும், அதற்கு சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்பு புரட்டர்களாயிருக்க வேண்டும், அல்லது பகுத்தறிவில்லாதவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பதே நம் அபிப்பிராயம் என்பதாக பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ சொல்லப்படுபவையும் ஒரு சாமி என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும், ஞானமற்றவர்களின் கொள்கையென்றே சொல்லுவோம்.

உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மைகளையும், சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும், விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படிஅல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன்  என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று; தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும், மற்றும் இவ் வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ, அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே எனவும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.

ஆனால், அந்தக் கடவுளுக்குக் கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்_பெண் தன்மை, பெண் ஜாதி_புருஷன், குழந்தை_குட்டி, தாய்_தகப்பன் முதலியவற்றைக் கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அதற்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பூஜை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்கு கல்யாணம் முதலியவற்றைச் செய்வதோ அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவற்றைச் செய்து காட்டி, வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும், திருவிளையாடல்களைப் பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக, திருமுறையாக, பிரபந்தமாக கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களைச் சமயாச்சாரியார்களாக, ஆழ்வார்களாக, சமயக் குரவர்களாக, நாயன்மார்களாக பல அற்புதங்கள் செய்தவர்களாகக் கொள்ள வேண்டும் என்றும்,  இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த – செய்கின்ற – செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத் தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் கொல்லப்படுபவைகளான மூடநம்பிக்கையும், வயிற்றுப் பிழைப்பு, சுயநலப் பிரச்சாரமும் ஒழிய வேண்டுமென்பது தான் நம் கவலை. எனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள் போல நம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்ப முடியாமல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கையும் சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமே தான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம். நாமும், நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்ப தற்கும், ஒருவரையொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல்  செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும், மேல்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே முக்கிய காரணம் என்பதைத் தூக்கு மேடையில் இருந்தும் சொல்லத் தயாராக இருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும் இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புஸ்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறை வில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால், நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக்கூடாத _ நெருங்கக் கூடாத – பார்க்கக் கூடாத – மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100க்கு  மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள், மற்ற 100க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக் கொண்டும், நம்மையும், நம் நாட்டையும் அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம். நமக்கு கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமே யல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும், நம் செல்வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றாமோ? என்று கேட்கின்றோம்.

நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக் குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழிய, வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.

– ‘குடிஅரசு’ 9.6.1945

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *