டெங்கு கொசுக்களை விரட்டும் புதிய ஆடை!

மார்ச் 1-15, 2020

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 16 வயது மாணவி சுனிதா மூர்ஜ் பிரபு என்பவர் மலிவு விலையில் டெங்கு கொசுக்களை விரட்டும் ஆடையை உருவாக்கியதற்காக 2020ஆம் ஆண்டுக்கான ‘பாலசக்தி புரஸ்கார்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். அச்சாதனையைப் பற்றிப் பேசுகையில்,

“கொசுக்கள் கொல்லப்படுவதாகக் கூறும் சாதனங்கள் தொடக்கத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கொசுக்கள் உருவாக்கிக் கொள்ளும்வரைதான். எனவே, நான் மிகவும் பயனுள்ள, ஆனால் மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க விரும்பினேன்’’ என்கிறார் சுனிதா. அந்த எண்ணத்தை புனேவைச் சேர்ந்த சஞ்சீவ் ஹோதாவுடன் இணைந்து செயலாக்க விரும்பினார்.

“கைத்தறித் துணியில் எந்தச் சாயம் அழுத்தமாகப் பதியும் என்பது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டோம். அதே சமயம் கொசு விரட்டிகளுடன் ஒரு பிணைப்பையும் உருவாக்குவதாக இருக்க வேண்டும். இந்த சாயம் ஏற்றப்பட்ட துணிகளால் கொசுக்களை விரட்ட முடியுமா என்கிற ஆய்வில் ஈடுபட்டோம்’’ என்கிறார் சஞ்சீவ்.

இருவரும் தங்களுடைய ஆய்வின் முடிவை புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். கொசு விரட்டும் துணியை டெல்லியில் நடந்த புதுமை அறிவியல் படைப்புகளுக்கான கண்காட்சியில் வைத்தார்கள். அதற்கு மிகப் பெரிய பரிசு கிடைத்தது. அது அடுத்தகட்ட நகர்வுக்கான உற்சாகத்தை அளித்தது. பின்னர் நிபுணர்கள், நண்பர்களின் ஆலோசனையுடன் தங்களுடைய கண்டுபிடிப்பை சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் காட்சியகத்தில் சமர்ப்பித்தார்கள்.

கொசுவை விரட்டும் சாயத்தை கைத்தறி துணிகளில் மட்டுமே செய்திருக்கிறார்கள். அதில் மட்டுமே நாற்பது முறை துவைத்த பிறகும் நீடித்திருக்கிறது. தற்போது மற்ற துணிகளிலும் சாயமேற்றும் ஆய்வில் சுனிதா ஈடுபட்டுள்ளார். இவர்கள் உருவாக்கும் ஒரு கொசு விரட்டும் துணியின் விலை 14 ரூபாய்தானாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *