எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (55) : ‘வைக்கம் வீரர்’ என்று பெரியார் போற்றப்படக் காரணங்கள்

மார்ச் 1-15, 2020

நேயன்

யோக அமைப்பின் 18ஆம் ஆண்டு பொதுக்குழுவில், கள் இறக்குவதையும், போதைப் பொருள் விற்பதையும் தடுக்கும் தீர்மானத்தை டி.கே.மாதவன் கொண்டு வந்தார். ஈழவமக்கள் போதை மயக்கத்திலிருந்து மீளவேண்டும் என்பதற்காக இதைச் செய்தார். இதன் பிறகுதான் காந்தியாரே தன் கொள்கையில் கள் எதிர்ப்பைச் சேர்த்துக் கொண்டார்.

டி.கே.மாதவன் முயற்சியில் போராட்டம் வலுப்பெற்றுவரும்போது, திருவாங்கூர் திவானாக இருந்தவர் சர்.சி.பி.இராமசாமி அய்யர். இவர் எதேச்சாதிகாரியாகச் செயல்பட்டார். எனவே, யோக அமைப்பு இவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது. இதற்கு சி.கேசவன் தலைமை தாங்கினார்.

சகோதரன் அய்யப்பன் கூட்டிய அனைத்துக் கேரள சகோதரர் மாநாடு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. படித்தவர்களும், பல்வேறு மதத்தவரும் அய்யப்பனுக்கு ஆதரவு அளித்தனர். அய்யப்பன் கடவுள் மறுப்பாளர் என்றாலும் அவரது முயற்சிகள் அனைத்தையும் நாராயணகுரு ஆதரித்தார்.

இத்தனைச் செய்திகளையும் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், டி.கே.மாதவன் உள்பட இந்தப் போராளிகள் அனைவரும் நாராயணகுருவால் விழிப்புப் பெற்று, மக்களின் இழிவு நீங்கவும், அவர்களுக்குக் கல்வி கிடைக்கவும், அரசு அதிகாரம் கிடைக்கவும், அவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டவும் கேரளா தழுவிய அளவில் போராடிய பெரும் போராளிகள்; அவர்கள் வைக்கத்திற்கென்று மட்டும் வந்த போராளிகள் அல்லர்.

தாங்கள் பிறந்த மண்ணின் மக்கள் உயர்வை நோக்கமாகக் கொண்டவர்கள், போராடியவர்கள்.

விடுதலை பெற கல்வி கொடு

ஒன்று கூடி வலிமை பெறு

தொழில் மூலம் வளம்பெறு

என்னும் நாராயணகுருவின் கொள்கையை வென்றெடுக்கப் பாடுபட்டவர்கள்.

இவர்களின் போராட்டங்களில் வைக்கம் போராட்டமும் ஒன்று. எனவே, இவர்களை வைக்கம் போராட்டத்தோடு ஒடுக்குவது உண்மையறியா நிலையாகும்; அவர்களின் சிறப்பைக் குறைப்பதாகும். ஆனால், பெரியாரின் வைக்கம் போராட்டம் என்பது கேரள மண்ணில் தனித்தன்மை வாய்ந்தது. டி.கே.மாதவனுக்கு கேரளா தழுவிய போராட்டங்களில் பெரும்பங்கு உண்டு என்றாலும், வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் என்றாலும், வைக்கம் வீரர் என்று பெரியாரைப் போற்றியதற்குக் காரணம் என்ன? அதை இனி காண்போம்.

வைக்கம் மகாதேவர் (வைக்கத்தப்பன்) கோயிலைச் சுற்றி ஒரு கொடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூடாது என்று தடை செய்தனர். மீறினால் கடுமையாகத் தண்டித்தனர்.

இக்கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற எண்ணம் டி.கே.மாதவனுக்குத் தோன்ற, தமது கருத்தைக் காந்தியாரிடம் தெரிவித்து அவரது அனுமதியைப் பெற்றார். நாராயணகுருவின் நல்லாதரவும் அதற்குக் கிடைத்தது. கோயிலுக்கு அருகிலிருந்த வெள்ளூர் மடத்தை வைக்கம் போராளிகள் தங்குவதற்குத் தந்தார். சிவகிரியில் இப்போராட்டத்திற்கு நிதிதிரட்ட ஒரு தனி அமைப்பைத் தோற்றுவித்தார். போராட்டக்காரர்களைச் சந்தித்து ஊக்கமும் அளித்தார் நாராயணகுரு.

இவ்வாறு காந்தியார், நாராயணகுரு மற்றும் ஜாதி இந்துக்களின் ஆதரவோடு வைக்கம் போராட்டம் தொடங்கியது. வைக்கம் போராட்டம் என்பது அன்றைய கட்டாயம். அதைத் தொடங்கி வைத்தவர் டி.கே.மாதவன்.

ஜார்ஜ் ஜோசப், டி.கே.மாதவன் உள்ளிட்ட 19 பேர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். போராட்டம் தொடங்கியபின் வழக்கறிஞர் மாதவன், பாரிஸ்டரும் கேரள காங்கிரசுக் கமிட்டித் தலைவருமான கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்றோர் தினம் ஒருவராகப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர்.

வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட நிலையில், போராட்டக்குழு உறுப்பினரான குரூர் நீலகண்ட நம்பூதிரி அவர்களும், திரு.ஜார்ஜ் ஜோசப் அவர்களும், கேசவமேனனும் சேர்ந்து, இனிப் போராட்டத்தை மேற்கொண்டு நடத்தி வெற்றி காண்பது எப்படி என்று சிந்தித்தனர்.

இறுதியில் இதற்கு ஒரே தீர்வு ஈ.வெ.ரா மட்டுமே என்று முடிவு செய்தனர். எனவே, ஈ.வெ.ரா.வுக்கு ஒரு கடிதம் எழுதினர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராய் இருந்தார் பெரியார்.

“வைக்கம் போராட்டத்துக்கு நீங்கள் வந்துதான் உயிர்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டக்காரர்கள் எல்லோரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போராட்டத்தைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச் செய்தால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. இந்தப் போராட்டம் கெட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றே பெருங்கவலை அடைகிறோம். எனவே, நீங்கள் வந்து உடனே பொறுப்பேற்று போராட்டத்தை நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டு எழுதிய கடிதம் ஈரோட்டுக்கு வந்த நேரத்தில் பெரியார் மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். கடிதம் பெரியார் கையில் கிடைத்தபோது அவர் பண்ணைபுரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். கடிதத்தைப் படித்த பெரியார் தன் பிரச்சாரப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு உடனே ஈரோட்டுக்குத் திரும்பினார். தான் வைக்கம் சென்று திரும்பிவரும் வரை, தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி இராஜாஜிக்கு ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு, கோவை அய்யாமுத்துவையும், இன்னும் ஒரு தோழரையும் அழைத்துக் கொண்டு, நாகம்மையாரிடம் விடைபெற்று, மறுநாள் பகல் 2:00 மணிக்கு வைக்கம் வந்து சேர்ந்தார். வந்து சேர்ந்தவுடனே வைக்கம் போராட்டத்திற்குத் தலைமையேற்றார். போராட்டத்தைத் தீவிரமாக நடத்தினார். இச்செய்தி திருவாங்கூர் அரசருக்கு எட்டிற்று. போலீஸ் கமிஷனரை அரசர் அழைத்து, ஈ.வெ.ரா.வைக் கைது செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு, திவான் பேஷ்காரை அழைத்து ஈ.வெ.ரா.விற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும்படி பணித்தார். அரசு விருந்தினரைப் போல் ஈ.வெ.ரா.வைக் கவனிக்கும்படி உத்தரவிட்டார்.

அரசரின் உத்தரவு திவான் ராகவய்யாவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அரசர் ஆணையை நிறைவேற்ற போலீஸ் கமிஷனர் பிட் என்பவரும், திவான் பேஷ்கார் சுப்பிரமணிய அய்யரும் போராட்டக் களத்திற்கு வந்தனர். இவர்களைப் பார்த்த பொதுமக்கள் ஈ.வெ.ரா.வும் கைது செய்யப்படப் போகிறார் என்று எண்ணினர். பெரியாரும் அப்படியே எண்ணினார்.

ஆனால், வந்த அதிகாரிகள் பெரியாரிடம் மரியாதையுடன் சென்று அவரை வணங்கினர், உங்களுக்குரிய எல்லா வசதிகளையும் செய்து தர அரசர் உத்தரவிட்டுள்ளார். உங்களை அரசு விருந்தினராக நடத்தச் சொல்லியுள்ளார். “உங்களுக்கு என்ன தேவை?’’யென்று கேட்டனர்.

அதற்கு பெரியார், “நான் போராட்டம் செய்ய வந்துள்ளேனே தவிர, அரசு விருந்தினராகவோ அரசு மரியாதையைப் பெறவோ வரவில்லை. ஆதலால், சட்டப்படி உங்கள் கடமையைச் செய்யலாம்’’ என்றார். இக்காட்சியைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர். இவரல்லவா தலைவர்; இவரல்லவா போராளி என்று வியந்து பாராட்டினர். திருவாங்கூர் மன்னர் பெரியாரின் குடும்ப நண்பர்.  ஈரோட்டில் பெரியார் வீட்டில் தங்கி விருந்துண்பது வழக்கம். அந்தப் பற்றுதலோடு மன்னர் பெரியாருக்குச் சிறப்புச் செய்ய விரும்பினார்.

நட்பு வேறு; போராட்டம் வேறு என்பதை நன்குணர்ந்தவரல்லவா பெரியார்! அதனால்தான் அந்த மரியாதைகளை மறுத்தார்.

ஒரு வார காலம் பெரியார் வைக்கத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்பூட்டினார். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியார் பேச்சை ஆர்வத்துடன் கேட்க பெருமளவில் கூடினர். போராட்டம் தீவிரமானது. மக்கள் ஆதரவு பெருகியது.

அரசர் ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தார். அதன்பின், தடை உத்தரவு பிறப்பித்தார். தடையை மீறுவோரைக் கைது செய்யக் கட்டளையிட்டார்.

பெரியார் அஞ்சுபவர் அல்லவே! தடையை மீறிப் போராட்டத்தில் இறங்கினார். பெரியாரும் அவருடன் சென்ற தோழர் அய்யாமுத்துவும் கைது செய்யப்பட்டு 22.4.1924இல் ஒரு மாத சிறைத் தண்டனை பெற்று, சிறையிலடைக்கப்பட்டனர்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *