– மீனாட்சி
அன்னம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றி வந்தாள். அவளுடைய அப்பா பாண்டியன் ஒரு வழக்குரைஞரிடம் கணக்கராக வேலை செய்து வந்தார். அவளுடைய அண்ணன் மாணிக்கம் அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவளுடைய அம்மா இலட்சுமி வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.
அன்னம் தன்னுடைய வேலையைச் செம்மையாகச் செய்வதில் திறமைமிக்கவளாய்த் திகழ்ந்தாள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இன்று புதிய நிர்வாக அதிகாரி திடீரென்று வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அன்று தன் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய வேலையைத் தொடங்கினாள்.
அப்பொழுது பியூன் மணி அவளிடம் வந்து, எம்.டி. உங்களைக் கூப்பிடுகிறார் என்றான்.
எதற்கு என்றதும், எனக்கென்ன தெரியும்! என்றான்.
மேனேஜர் இராமுவைத்தானே கூப்பிடுவார்!என்று அன்னம் தயங்கிக் கூறியதும், அவர் இன்று லீவு என்றான்.
அப்படியா!…. இதோ வர்றேன் என்று சொன்ன அன்னம் எம்.டி. அறைக்குச் சென்றாள்.
வணக்கம் சார்.
அவளை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, வணக்கம் என்றார்.
உட்காருங்க… இந்த பைலில் உள்ள கடிதங்கள் அனைத்திலும் ஒவ்வொரு பிரதி எடுத்து வாருங்கள்.
சரி சார்… இப்பவே கொண்டு வருகிறேன் என்றாள்.
செல்லதுரை அவளின் அழகை ரசித்தான். அடுத்த சிறிது நேரத்தில் அவளிடம் கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்.
வெரிகுட்…. சீக்கிரம் வேலையை முடித்துவிட்டீர்களே அன்னம் என்றதும் அன்னம் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
தன்னுடைய இருக்கைக்கு வந்த அன்னம் புது எம்.டி. பரவாயில்லையே, பாராட்டெல்லாம் சொல்லுகிறாரே… என்று நினைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு வந்ததும், செல்லதுரை அன்னத்தை அழைத்து இந்த வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என்றார். அவளும் கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுத்ததனால் அன்னத்தின் மீது செல்லதுரைக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.
ஒரு நாள் கடைவீதியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அன்னம். அந்தப் பக்கம் மகிழுந்தில் வந்த செல்லதுரை அன்னத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்தி, எங்கே இந்தப் பக்கம் என்றார்.
வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்க வந்தேன் என்றாள்.
நல்லது. வீடு எங்கிருக்கிறது? காரில் ஏறுங்கள்…. நான் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் செல்லதுரை.
தேங்க்ஸ்! சில சாமான்கள் இன்னும் வாங்க வேண்டும் என்ற பதிலைக் கேட்ட செல்லதுரைக்கு, அவள் காரில் வராதது ஏமாற்றமாக இருந்தாலும், காரில் வரமாட்டேன் என்று சொல்லாமல் நாசூக்காகத் தவிர்த்தது மிகவும் பிடித்திருந்தது. மேலும், யாரிடமும் அதிகமாகப் பேசாத தன்மை, வேலையில் காட்டும் வேகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட செல்லதுரை அன்றுமுதல் அன்னத்தைக் காதலிக்க ஆரம்பித்தார். தன்னுடைய காதலை அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பின் ஒரு சமயத்தில் அவளிடம் தன்னுடைய காதலைக் கூறினார்.
அன்னம் சிரித்துக் கொண்டே, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது எனச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்தாள்.
செல்லதுரைக்கு வியப்பாக இருந்தது. திருமணம் ஆனதற்கான அடையாளங்களான கழுத்தில் தாலியோ, காலில் மெட்டியோ காணப்படவில்லை.
உடனே அவளிடம் கேட்க நினைத்தபோது அவள் அலுவலகத்தைவிட்டுப் போய்விட்டதாக பியூன் கூறினான். அன்று இரவு முழுவதும் செல்லதுரைக்குத் தூக்கமே வரவில்லை. அன்னத்தின் கணவன் எங்கே? அவள் வாழ்க்கை என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ள மறுநாள் மாலை அன்னத்தின் வீட்டிற்குச் சென்றான்.
அன்னத்தின் அப்பா, அம்மா, அண்ணன் ஆகிய அனைவரும் வீட்டில் இருந்தனர். அன்னத்தின் அம்மா, இந்தாங்க அய்யா… பலகாரம் சாப்பிடுங்க என்று கூறி தட்டில் பலகாரமும், குடிக்க டீயும் வைத்தாள். செல்லதுரை டீயை அருந்திவிட்டு, தயங்கியபடி, அன்னத்தின் திருமணம்…. என்று இழுத்தான். அவளின் அண்ணன் மாணிக்கம், எல்லாம் முடிந்துவிட்டது…. என்று சோகத்துடன் கூறினார். இலட்சுமி, அது ஒரு பெரிய கதை… என்று கூறித் தொடர்ந்தாள். அவளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்திலே விவாகரத்து ஆகிவிட்டது.
அவ காதல் கலியாணம் செஞ்சுக்கிட்டா. இப்ப துன்பத்தை அனுபவிக்கிறா… என்றார் மாணிக்கம் வெறுப்புடன்.
அதிலென்ன தவறு….
அவன் பணத்தாசை பிடித்தவன். எங்கள் யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை. அன்னம்தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது அவனுடைய சுயரூபம். அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், திருமணம் ஆகாமல் இருந்தால் மட்டுமே அந்த வேலை கிடைக்கும். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டதால் அவனுக்குக் கட்டினவளைவிட பணம்தான் பெரிசுன்னுட்டான். வெளிநாடும் போயிட்டான். இவளையும் கைகழுவிட்டான். அவன் வேலைக்குப் போகும் கம்பெனியின் விலாசமும் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஏதாவது செஞ்சிருக்கலாம்.
எல்லாவற்றையும் கேட்ட செல்லதுரையின் மனதில் ஓர் இறுக்கம் ஏற்பட்டது. தான் காதலித்த அன்னத்திற்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
இவ்வளவு நடந்துவிட்டதா! சரி… நடந்தது நடந்துவிட்டது. நான் ஒன்று சொல்றேன். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றார்.
சொல்லுங்கள் என்றார் மாணிக்கம்.
எனக்கு அன்னத்தை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுடைய கடந்தகால வாழ்க்கையினைப் பற்றிக் கவலையில்லை என்றார்.
அன்னத்தின் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் செல்லதுரையின் நன்னடத்தையைப் பற்றி அன்னம் கூறியிருந்ததாலும் அன்னத்திற்கு ஒரு வாழ்க்கை கிடைக்கட்டும் என்று எண்ணிச் சம்மதித்தனர். என்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார் செல்லதுரை.
மறுமணம் வேண்டாம் என்று எண்ணியிருந்தாள் அன்னம். ஆனால் செல்லதுரையின் பழக்கவழக்கங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை அவளுக்குப் பிடித்துப்போனதால் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் புதுப்பொலிவுடன் வந்தாள். அலுவலகத்தில் இதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால், அன்று காலை செல்லதுரை அலவலகத்திற்கு வரவில்லை. அன்னம் அவர் ஏன் வரவில்லை என யோசித்தாள்.
திருமணத் தேதியுடன் வருவாரென்று அனைவரும் பேசிக் கொண்டனர். அன்று மதியம் செல்லதுரை வந்தார். ஒருவரையும் அழைத்து எந்தப் பணியும் கொடுக்கவில்லை. என்ன ஆயிற்று இவருக்கு என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் பியூன் மணி. பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு எம்.டி. அழைப்பதாகக் கூறினான் மணி. அன்னத்தின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றிருந்தது. ஒரு பூங்காவின் பெயரைச் சொல்லி மாலை அலுவலகம் முடிந்தவுடன் அங்கு வருமாறு கூறிவிட்டு உடனே புறப்பட்டுவிட்டான்.
மாலை அய்ந்து மணி எப்போது வரும் என்று காத்திருந்த அன்னம், திருமணத்திற்கு என்ன என்ன பொருட்கள் வாங்கலாம், எப்படித் திருமணத்தை நடத்தலாம் என்று கேட்பார் என நினைத்தாள். அதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டும் சென்றாள்.
அந்தப் பூங்காவில் புல்தரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். யார் முதலில் பேசுவது என்ற மனநிலையில் இருவரும் இருந்தனர். ஆனால் செல்லதுரையின் முகம் வாட்டத்துடன் இருப்பதை அறிந்த அன்னம், ஏன் உங்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்? என்று வினவினாள்.
செல்லதுரை ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவனாய், அவர்களிடம் என் விருப்பத்தைக் கூறினேன்…. சரி என்று கூறிவிட்டார்கள்… ஆனால்!….
என்ன ஆனா?
அவர்களுக்கு ஒரே ஒரு ஆசை.
என்ன அது?
நீ எங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்பது என்றதும், அன்னம் கோபத்துடன் செல்லதுரையைப் பார்த்தாள்.
அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?
நான் உன்னிடம் பேசிப் பார்க்கிறேன் என்றேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர்கள் சொன்னபடி நீ எங்கள் மதத்திற்கு மாறிவிடு.
பணத்தாசை பிடித்தவரைக்கூட மன்னித்துவிடலாம். மதவெறி பிடித்தவரை நினைத்துப் பார்க்கவும் கூசிப் போனாள் அன்னம். உடனே அன்னம் தன் கைப்பையில் வைத்திருந்த டைரியிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். அந்தக் காகிதத்தில் எழுதியிருப்பதைப் படித்தார் செல்லதுரை. அதில்,
பெண்கள் கூண்டுக்கிளிகள் அல்லர் – தந்தை பெரியார்.
இதுவே என் கருத்து என்று எழுதப்பட்டிருந்தது.