இயக்க வரலாறான தன் வரலாறு (245) : வி.பி.சிங் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு!

மார்ச் 1-15, 2020

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

28.9.1992 அன்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு தந்தி கொடுத்தோம். அதில் மதச் சார்பற்ற கொள்கைப்படி நடக்க வேண்டிய சென்னை ரிசர்வ் வங்கியில் பார்ப்பன இந்து மத கொள்கைப்படி, கலாச்சாரப்படி யாகம் நடத்தினால் பொதுமக்களே அலுவலகத்திற்குள் நுழைந்து யாகத்தைத் தடுக்க நேரிடும் என்று அந்த தந்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து 28.9.1992 அன்று சென்னை ரிசர்வ் வங்கியின் முன் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது, ரிசர்வ் வங்கி என்பது அக்கிரகாரத்தின் தனிச் சொத்தா? சங்கரமடத்தின் பிராஞ்சா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளையா? எல்லாம் பார்ப்பன மயம் என்கிற ஆணவத்தினால் எதையும் செய்யலாம் என்று பார்ப்பனர்கள் நினைப்பார்களேயானால் அந்த ஆணவத்தின் முதுகெலும்பை கருஞ்சட்டைப் படை முறித்தே தீரும் என்று கண்டித்து உரை நிகழ்த்தினேன். ஊர்வலத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து வந்தனர்.

28.10.1992 அன்று மனித உரிமைக்கு எதிரான ‘தடா’ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

‘தடா’ எனும் ஒடுக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் மனித உரிமையின் அடிப்படையில் போராடி வருகிறது. திராவிடர் கழகம் மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் இயக்கம். மனித உரிமைகள் நசுக்கப்படும்போது, மத்திய _ மாநில அரசுகளை எதிர்த்து திராவிடர் கழகம் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியது.

 இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமை நசுக்கப்படும்போது _ அதை எதிர்த்து திராவிடர் கழகம் மனித உரிமை அடிப்படையில் போராடி வருகிறது.

‘தடா’ சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திராவிடர் கழகத்தினர் மீது பொய்யான வழக்குகளை ‘ஜோடித்து’ ‘தடா’ சட்டத்தின் கீழ் கைது செய்கிறார்கள். ‘தடா’ சட்டமே இந்திய கிரிமினல் சட்டத்திற்கு எதிரானது. எனவே, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வழக்கு மனுவில் விளக்கப்-பட்டிருந்தது.

வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சீனிவாசன் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இதுபற்றி விளக்கம் கேட்டு மத்திய _ மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். என் சார்பாக வழக்குரைஞர் சந்துரு இந்த மனுவை தாக்கல் செய்தார்.

6.11.1992 அன்று “எமரால்டு பப்ளிஷர்ஸ்’’ நிறுவனம், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளை எல்லாம் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய முயற்சியால் தொகுத்து “Periyar on Women’s Right” எனும் ஆங்கில நூல் வெளியிட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

விழா, சென்னை எத்திராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை பேராசிரியர் டாக்டர் பழனி.அரங்கசாமி, நீதியரசர் பெ.வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் டாக்டர் வே.ஞானபிரகாசம் அவர்கள் (துணைவேந்தர், கால்நடை மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகம்) வெளியிட, டாக்டர் யசோதா சண்முகசுந்தரம் (முதல்வர், எத்திராஜ் மகளிர் கல்லூரி) முதல் பிரதியைப் பெற்றார்.

கோபாலகிருஷ்ணன்

‘பெரியாரின் பெண்ணுரிமை’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் ஆர்.சுந்தரராசு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ரூ.5,000/_ காசோலை வழங்கினார்கள். ‘எமரால்டு’ உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், பழனி.அரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் அய்யா அவர்கள் எத்திராஜ் கல்லூரி வழியாக வேனில் செல்லும்போது, அக்கல்லூரி மாணவிகள் 2, 3 பேர் சென்றார்கள். அவர்களைப் பார்த்தவுடன் அய்யா அவர்கள், என்னிடத்தில், “இவர்கள் மாணவிகள்தானே?’’ என்று கேட்டார். நானும், “ஆமாம்’’ என்றேன்.

உடனே அய்யா அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ஏனெனில், அந்த மாணவிகள் ‘பேண்ட்_சட்டை’ போட்டிருந்தார்கள் என்பதை நினைத்து பசுமை மாறாத எண்ணத்தில் அய்யா மகிழ்ச்சி அடைந்தார்கள்’’ என்று பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டிப் பேசினேன்.

13.11.1992 அன்று தஞ்சை வல்லத்தில் சிதம்பரம் ல.கண்ணன்_பத்மாவதி ஆகியோரின் செல்வி சிவகாமி (நூலகர் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, வல்லம்) இராசபாளையம், க.ராகவன் _ ராசம்மாள் ஆகியோரின் செல்வன் ராசு_விவேகானந்த கோபால் (மோடி வல்லுநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்) ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா _ வல்லம் ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில், மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்தி உரை நிகழ்த்தினேன்.

18.11.1992 அன்று மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து 1990இல் வி.பி.சிங் அரசு போட்ட ஆணை செல்லும் என்று 9 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். (என்ற போதிலும் அவர்களில் 3 நீதிபதிகள் சில விஷயங்களில் தனித்து எழுதினர்) இதனை விளக்கி முக்கிய அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். (மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு)

அதில், உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தனித் தீர்ப்புதான், தனித்தன்மையான சிறப்புகளைக் கொண்டிருக்கிறது என்று பாராட்டி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.

சமூகநீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்குக் காரணமே தந்தை பெரியார் அவர்களும் அவர்தம் இயக்கமும் முன்னின்று போராடியதன் விளைவுதான் என்பதை அன்றைய பிரதமர் பண்டிதர் நேரு நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாநிலத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓர் சமுதாயத்தில் பல்வேறு தடைகள், தடங்கல்கள், தொல்லைகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டு நீந்தி, இன்று அந்தப் பெரிய இடத்தில் அமர்ந்துள்ளார் திரு.இரத்தினவேல் பாண்டியன். அவர்கள் தகுதியிலும் திறமையிலும் எந்த ஒரு முன்னேறிய சமூகத்தவருக்கும் சளைத்தவர் அல்லர். சட்டஞானம், பொதுஅறிவு, ஆழ்ந்த நுண்மான் நுழைபுலம் இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பால் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளவர். எனவே, மிக அருமையாக தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் பாராட்டியிருந்தோம். அவர் மறைவுக்குப் பின் பெரியார் திடலில் ஒரு மாபெரும் இரங்கல் கூட்டம் நடத்தினோம்.

இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில், “மண்டல் கமிஷனும் _ சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் 23.11.1992 அன்று சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு துறையைச் சேர்ந்த பெருமக்கள் இக்கூட்டத்திற்குப் பெருந்திரளாக வந்திருந்தனர்.

மண்டல் பரிந்துரை மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பாராட்டு தெரிவித்து எனக்கு பாராட்டுக் கடிதங்கள் வந்தவண்ணம் இருந்தன.

அதில், அமெரிக்கா வாழ் தமிழர்களான பல்துறை வல்லுநர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தந்தை பெரியார் அவர்களது தொலைநோக்குப் பார்வையில் விளைந்த கல்விப் புரட்சியாலே படித்துப் பட்டம் பெற்று இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் நன்றி அறிவித்தலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடாது பாடுபட்ட உங்களுக்கும், உங்களுக்குப் பேருதவியாக இருந்த கருப்பு மெழுகுவத்திகளுக்கும் மற்றும் வி.பி.சிங், ராம்விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் போன்ற தலைவர்களுக்கும் எங்கள் நன்றியை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் சோம.

இளங்கோவன்

மிக்க அன்புடன், டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ வ.செ.பாபு, சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் ந.விசுவநாதன், சிகாகோ பொறியாளர் டாக்டர் திருநாவுக்கரசு, செயிண்ட் லூயிஸ் விஞ்ஞானி டாக்டர் தண்டபாணி, டாக்டர் அய்யனார், டாக்டர் இளங்கோவன், டாக்டர் ஏ.எம்.இராசேந்திரன், (பாஸ்டன், விஞ்ஞானி), திரு.மோகனம் (ஒஹியோ, வழக்கறிஞர்), டாக்டர் குமார், (பேட்டன்டுச், நியூ ஓர்லியன்ஸ்), பேராசிரியர் இலக்குவன் தமிழ், (டல்லாஸ், டெக்சாஸ்) என்று அந்தப் பட்டியல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

27.11.1992 அன்று டில்லியில் ஆண்டுதோறும் ‘ராம்லீலா’ நடத்தும்போது, இங்கே மட்டும் ஏன் ‘ராவண லீலா’ நடத்தக்கூடாது என்று பொதுநிலையில் உள்ளவர்களே கேட்டார்கள். இந்த நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் 25.12.1992 அன்று ‘ராவணலீலா’ நடத்தப்படும் என்று, அதற்கான சுவர் எழுத்துகளை கழகத்தின் சார்பில், கழகத் தோழர்கள் எழுதி வந்தார்கள். கழகத்தின் சுவர் எழுத்துப் பிரச்சாரம் பார்ப்பனர்களைக் கலக்கியது. ராயப்பேட்டை பகுதியில் கழகத்தினர் எழுதிய சுவரெழுத்துகள் மீது சுவரொட்டிகளை ஒட்டினர். இந்தச் சுவரொட்டிகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத்தின் சார்பில் காவல் துறைக்கு தலைமைக் கழகம் சார்பில் எழுதிக் கொடுக்கப்பட்டது.

சென்னையில், இதனைப் பொறுக்க முடியாத ஆத்திரக்கார இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., வகையறாக்கள், கழகத் தோழர்களின் சுவர் எழுத்துகளை அழித்து வருவது மட்டுமல்ல; கொலைவெறித்தனத்தைத் தூண்டும் எழுத்துகளையும் எழுதியும் வந்தார்கள். புகார் கொடுத்தும் காவல்துறை கண்டும் காணாததும் போல் இருந்தது. அந்த சுவர் எழுத்து எந்தத் தரத்தில் இருந்தது என்பதற்கு இதே ஓர் ஆதாரம்.

27.11.1992 அன்று புதுடில்லி “ராம்லீலா’’ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலில் “அனைத்திந்திய (‘பாம்செஃப்’ – கன்ஷிராம் துவக்கி நடத்திய பிற்படுத்தப்பட்ட, ஷெடியூல்டு, பழங்குடியினர் இணைந்த அரசு ஊழியர் அமைப்பு) – BAMCEF) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையோர் பேரவையின் 9ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்டோர் ஓரணியில் திரள அறைகூவல் விடுத்து உரை நிகழ்த்தினேன். அப்போது,  உங்களுக்குப் புதியவர்கள் அல்ல நாங்கள். 1989ஆம் ஆண்டு உங்களது தேசிய மாநாட்டினை பெங்களூரில் நடத்திய போதும் நீங்கள் அழைத்து அதில் கலந்துகொண்டவர்கள் நாங்கள்.

உலகத்தில் உள்ள அரசமைப்புச் சட்டங்களில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எடுத்த எடுப்பிலே அதன் பீடிகையிலேயே (Preamble) சமூகநீதியைக் கோடிட்டுக் காட்டிய ஒரே அரசமைப்புச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டம் என்பதை எடுத்துக் கூறினேன்.

4.12.1992 அன்று நாகை காயிதே மில்லத் மாவட்டம் _ தரங்கம்பாடி வட்டத்தைச் சேர்ந்த செம்பனார்கோயிலில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருஞானசம்பந்தம், இ.காங்கிரசைச் சேர்ந்த தியாகி எம்.அழகிரிசாமி, எஸ்.எம்.சம்சுதீன் (தி.மு.க.), மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் கே.கொற்றவமூர்த்தி, திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினேன்.

அப்போது, 1957 நவம்பர் 26 அன்று தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், தாய்மார்கள் என 10 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். அவர்களில் மூவாயிரம் பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். மூன்று ஆண்டு காலம் சிறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். வரலாற்றில் இத்தகைய தன்னல மறுப்புப் பொதுத் தொண்டர்களைப் பார்க்கவே முடியாது.

கருப்பு மெழுகுவத்திகளாம் தந்தை பெரியார் தொண்டர்களுக்கு ஈடு இணையானவர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது என்று எடுத்துரைத்தேன்.

11.12.1992 அன்று தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் நீதியரசர் பி.வேணுகோபால் எழுதிய “நீதிக்கட்சியும் சமூகநீதியும்’’ என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பி.ஏ.தெய்வசிகாமணி வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் குஜராத் மாநிலத் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தோம். தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் நூலினை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.

விழாவில், மதுரை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபுக்கு, நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட தமிழக அரசினுடைய முன்னாள் தலைமைச் செயலாளர் கே.சொக்கலிங்கம் சால்வை போர்த்தி சிறப்பு செய்தார். நூலினைப் பாராட்டி உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து என் உரை. விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட கழக நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்

25.12.1992 அன்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பினை அளித்தோம்.

கழகக் கொடிகளுடன் அணிவகுத்து நின்ற கழகத் தோழர்கள் “சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் வாழ்க’’ Long live, long live! V.P.Singh long live!” என்கிற முழக்கங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தமிழ்நாட்டில் தீவிர சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட திரு.வி.பி.சிங் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றோம். வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  மாநில மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கவிஞர் செ.வை.ர.சிகாமணி, சேலம் ப.கந்தசாமி, கு.தங்கமணி, தே.அன்னத்தாயம்மாள், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், செயலாளர் குணசீலன் உள்ளிட்ட ஏராளமான கழக நிருவாகிகள் கலந்துகொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் சமூகநீதி காவலர் திரு.வி.பி.சிங்கை வரவேற்கும் ஆசிரியர்

வரவேற்பைத் தொடர்ந்து திருச்சியிலும் சமூகநீதிக்காவலர் திரு.வி.பி.சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. கருஞ்சட்டைக் கடலினைக் கண்டு வி.பி.சிங் அவர்கள் நெகிழ்ந்து போனார்.

பின்பு 28.12.1992 அன்று பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளும் அணிவகுத்து நின்று வரவேற்றனர். கல்வி வளாகத்துக்குள் குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. ஜனதா தளத்தின் செயலாளரும் தீவிரமான கொள்கையாளரும், துடிப்புமிக்க செயல் வீரருமான ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி. தலைமை தாங்கினார்.

தஞ்சையில் இயங்கிவரும் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக வி.பி.சிங் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பின்பு, வி.பி.சிங் அவர்கள் நினைவாக கல்வி வளாகத்தின் கட்டடப் பிரிவு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும், பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையை மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் மொழிபெயர்த்தார்.

வி.பி.சிங் அவர்கள் உரையாற்றும்போது 2 ஆண்டுக்கு முன் மண்டல் அறிக்கையை தாம் அமல்படுத்திய நேரத்தில் ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தபோது, தமிழ்நாட்டில் வீரமணி அவர்கள் உருக்குமலையாக நின்று ஆதரித்ததை தன்னால் மறக்க முடியாது என்ற வி.பி.சிங், “நான் செல்லும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் தருகிற சிறப்பான அன்பான வரவேற்பு – என்னுடைய உள்ளத்தை விட்டு அகலவில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேநேரத்தில், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன்’’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

குழந்தைகள் காப்பகக் கட்டடத்தை திறந்து வைக்கும் திரு.வி.பி.சிங், ராம் விலாஸ் பஸ்வான் உடன் ஆசிரியர்.

பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆற்றிய உரையில்,

“நான் இதற்கு முன் 1979லே இங்கே வந்தேன். அன்றிலிருந்து நண்பர் வீரமணி அவர்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன். அந்த நாளிலேயே தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய புத்தகங்களை நண்பர் வீரமணி எனக்குக் கொடுத்தார். நான் அந்த நூல்களை மற்ற இலக்கியங்களைவிட அதிகமாகப் படித்திருக்கிறேன்.’’

நண்பர் வீரமணி அவர்களிடத்திலே,  “தமிழ்நாட்டிலே, நீங்கள் செய்கின்ற பணியை இந்தியா முழுவதும் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டது உண்டு. அவ்வாறு கேட்டுக் கொண்டபோது தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துத் தாருங்கள் என்றும் கேட்டேன். ஏனென்றால், இவ்வாறு தந்தை பெரியாரின் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துப் பரப்பினால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே நிலவுகின்ற அமைதி, சமுதாய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் இந்தியா முழுவதும் நிலவ வாய்ப்பு உண்டு.

தந்தை பெரியார் அவர்கள் நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். அவ்வாறு நமக்கு சமூகநீதித் தத்துவத்தைத் தருவதற்கு முன் பண்பாட்டுப் புரட்சி என்னும் தத்துவத்தைத் தந்தார்கள். பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்டு சமூகநீதித் தத்துவம் நிறைவேறினால்தான் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். பண்பாட்டுப் புரட்சி, சமூகநீதிப் புரட்சி ஆகிய இவை ஏற்பட்டால்தான் நம் நாடு முழுமையான விடுதலை பெற்ற நாடாக இருக்க முடியும் என்று கூறினார்கள். கல்வி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டு உரையைச் செவிமடுத்தனர்.

மீனாம்பாள் சிவராஜ்

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்குத் தொடர்ந்து போராடியவரும், ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக் குழுவின் முக்கிய உறுப்பினரும், வழக்கறிஞர் சிவராஜ் அவர்களின் துணைவியாருமான மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தமது 90ஆம் வயதில் 31.12.1992 அன்று மறைவுற்ற செய்தியை அறிந்து மனம் வருந்தி இரங்கல் அறிக்கையை விடுதலையில் வெளியிட்டிருந்தோம்.

அதில், நீதிக்கட்சிப் பிரமுகராகவும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டவராகவும் மீனாம்பாள் சிவராஜ் விளங்கினார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரிடமும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார்கள்.

அவருக்கு தயாசங்கர் (ஓய்வு பெற்ற காவல்துறை டி.அய்.ஜி.) போதிசங்கர்  (ஓய்வு பெற்ற அய்.சி.எஃப் அலுவலர்) ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உண்டு.

காலை 11:00 மணி அளவில் அம்மையார் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

“தந்தை பெரியார் அவர்களது பேரன்புக்குப் பாத்திரமான அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் துவக்க காலத்தில் அதில் ஈடுபாடும் காட்டிய தாய்மார்களில் முன்னணியில் இருந்த வீராங்கனையாவார்’’ என்று இரங்கல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *