ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 16-30

கேள்வி : கண்டதற்கெல்லாம் சண்டியர்த்தனமாய் மய்ய அரசை மிரட்டும் அன்னா ஹசாரே, ராம்சேனாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்கத் துணிவில்லாமல் காஷ்மீர் சம்பந்தமான பிரசாந்த் பூஷனின் கருத்து என்னுடைய கருத்தல்ல என்று ஜகா வாங்குவது ஏன்? – க. சுந்தரம், மதுரை

பதில் : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் முகமூடி அவர். எனவே ‘His Master’s Voice’ எஜமானக் குரல் ஒலி கேட்கிறது! ஜகா வாங்காமல், எதிர்கொள்ள முடியாதே!

கேள்வி:. காந்தியாரின் அன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், அன்னா ஹசாரேயின் இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? காந்தியாரின் உண்ணாவிரதப் போராட்ட முறையை தந்தை பெரியார் சண்டித்தனம் என்று வர்ணித்தது உண்மையா? – காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : 100க்கு 100 சரி. அது வெறும் சண்டித்தனம்(காந்தியாருடையது). ஹசாரேவின் திட்டமிட்ட நாடகம் – விளம்பரம் தேடிடும் அரசியல் வியாபார முகவாண்மை!

கேள்வி: சிங்களக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் _ இந்தி(ய) மீனவர்களாய் இருந்திருந்தால் மத்திய காங்கிரசு அரசு இப்படிப் பாராமுகமாய் இருந்து வருமா? – த. பன்னீர்செல்வம், பாபநாசம்

பதில்: நல்ல கேள்வி. உண்மை அதுதான்!

கேள்வி : மக்களைப் பற்றிக் கவலைப்படாத மன்மோகன் சிங் அவர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் செயல்பட ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்டிருக்கிறாராமே… இது குறித்த தங்கள் கருத்து? – பொ.சண்முகம், திருச்சி

பதில் : கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி ஓர் தெளிவான நிலை _ அணுசக்தி மின்சாரமே கூடாது என்ற நிலையை எடுக்க முடியாதே!

மக்களின் அச்சம் போக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிவுறுத்தல் எல்லாம் தேவை. பலருக்கு இது ஒரு அரசியல் மூலதனமாகி வருகிறது. அதுதான் வேதனை!

கேள்வி :2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சுட்டிக்காட்டி இருக்கும் அரசுக்கு இழப்புத் தொகை 2,645 கோடி மட்டுமே! ஆனால், மத்திய கணக்குத் தணிக்கை தந்திருக்கும் புள்ளிவிவரமோ 1,76,000 கோடி. இப்படி அரசுத்துறையே பொய்யான தகவலைத் தரலாமா? இந்தத் தவறுக்குத் தண்டனை உண்டா?    –   நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : பிறகு தண்டனை – பொறுத்திருந்து வரும். உண்மைகளை எவ்வளவு காலம் மூடி மறைக்க முடியும்?

கேள்வி : எதிர்க்கட்சி வாய்ப்பைக்கூட இழந்துவிட்டாலும், விடாமல் தி.மு.க.வையும் கலைஞரையுமே பார்ப்பனிய ஏடுகள் குறிவைத்துத் தாக்குவது எதனைக் காட்டுகிறது? – ப. ராசன், நெய்வேலி

பதில் : தி.மு.க.வை அழித்தால் திராவிட இன உணர்வு, மொழி உணர்வை ஒழித்துவிடலாம் என்ற நப்பாசைதான் காரணம்!

கேள்வி : பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதி பாடலில் பள்ளித் தலம் என்பது முஸ்லிம்களின் பள்ளி வாசலைக் குறிப்பிட்டு எழுதியதா?
காஞ்சி தி.இரமணன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : நீங்கள் சொல்லும் பொருளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.! எனவே உஷ்….!

கேள்வி : நடிகர் ரஜினியைக் காப்பாற்றியது மருத்துவ அறிவியலா (அ) ஏழுமலையானா? (திருப்பதி). எடைக்கு எடை கற்கண்டு வழங்கியுள்ளாரே, ரஜினியின் மனைவியும் மொட்டை போட்டுள்ளாரே? – ம.அன்புமலர், செங்கல்பட்டு

பதில் : பரவாயில்லை. பகுத்தறிவுக்குப் போட்ட மொட்டை! மூடநம்பிக்கையாளர் கொடுக்கும் ஈசி பொருள்!

கேள்வி : நீண்ட நெடுநாளைய திராவிட இயக்கத்துக்குச் சொந்தக்காரன், பழம்பெரும் தொண்டன் என்ற முறையில் ஆர்வ மிகுதியால் ஒரு சில தலைவர்களுக்கு (தாங்கள் இதில் விதிவிலக்கு) எனது மகன் திருமண அழைப்பிதழை 2 வாரம் முன்பாகவே அனுப்பியிருந்தேன். 2 வரி வாழ்த்தி ஒரு கடிதம்கூட போடாத இவர்களை நினைத்து நொந்துபோனேன் என்பதைவிட, நொறுங்கிப் போனேன் என்றே கூறலாம். இம்மாமனிதர்களைப் பற்றி தாங்கள் கூறும் கருத்து?       –      தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : மன்னிப்போம்; மறப்போம் என்ற மனநிலைக்குச் சொந்தக்காரர் ஆகுங்கள். பிறகு எல்லாம் சரியாகிவிடும்!

கேள்வி : வாச்சாத்தி பெண்கள் பலாத்கார வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வரக் காரணம், யாரும் குற்றத்தைத் தடுக்க முயலவில்லை என்பதா? அல்லது எல்லோராலும் குற்றம் மறைக்கப்பட்டது காரணமா? எல்லோரும் குற்றம் செய்ததுதான் காரணமா?    –   ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : மூன்றின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகையே முழு உண்மையாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *