(புரட்சிக் கவிஞர் பாரதிதாச்னின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்)
– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்
காட்சி – 3. காட்டின் ஒரு பகுதி
உறுப்பினர்கள்: பொன்னப்பன், சாத்தப்பன், வீரப்பன்.
பொன்: சாத்தப்பா! நம்ம இளவரசர் கூடாரத்துக்குள்ள ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்காரு. நாம காலாற அப்படிப் போய் வருவோமா?
சாத்தப்: என்ன பொன்னப்பா! வீரப்பன் எங்கேயோ போய் இருக்கிறான். நாமும் போய்ட்டா எப்படி?
பொன்: இன்னும் ஆறுபேர் இருக்காங்களே சாத்தப்பா! வா.
பொன்: சாத்தப்பா! என் பெரியப்பா மவன் மிதுனபுரியில் வேலை செய்துக்கிட்டிருக்கிறான்னு சொல்லி இருக்கேனே நினைவு இருக்கா?
சாத்தப்: ஆமா. அவனுக்கு என்னா?
பொன்: அவன் நாலு நாளைக்கு மின்ன நம்ம ஊருக்கு வந்தான். அவன் சொன்னான்…
சாத்தப்: என்ன சொன்னான்?
பொன்: அவன் வேலை செய்யற முதலாளி வீட்டில் சூனியம் இருந்திச்சாம்!
சாத்தப்: சூனியம்னா?
பொன்: வேண்டாதவங்க வீட்ல சூனியம் வச்சிட்டா அவுங்க குடும்பம் விளங்காதாம்.
சாத்தப்: என்ன எழவோ ஒன்னுமில்லாததை சூனியம்னுவாங்க. நீ என்னடான்னா. சூனியம் வைக்கிறதுன்றே. உம், மேலே சொல்லு.
பொன்: ஆரியர் இருக்காங்களே! அவுங்க அந்த சூனியத்தை எடுத்திருக்காங்க.
சாத்தப்: எப்படி!
பொன்: மந்திர சக்தியால சூனியம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சித் தோண்டி இருக்கிறான் ஒரு ஆரியன்.
சாத்தப்: உம்., அப்புறம்.
பொன்: தோண்டறதுக்கு அவன் பட்டபாடு இருக்கே. என் பெரியப்பா புள்ள நடிச்சே காட்டினான் சாத்தப்பா!
சாத்தப்: எப்படி?
பொன்: அவன் செஞ்ச மாதிரியே செஞ்சி காட்டறேன் பார்த்துக்கோ.
(ஆ… ஊ… என்று நடித்துக் காட்டுதல்)
சாத்தப்: என்ன பொன்னப்பா பயங்காட்டுறே?
பொன்: சூனியம்னா என்னான்னு நினைச்சுக்கிட்டே, அது ஆளையே அடிச்சிக் கொன்னுடுமாம்.
சாத்தப்: (பயத்துடன்) அப்படியா?
பொன்: தோண்டி எடுத்தா, அதுல மண்டை ஓடு, கருப்பா கரி மாதிரி ஏதோ ஒண்ணு மயிர் சுருணை இன்னும் என்னென்னமோ செப்புத்தகடு. அதுல மந்திரமாம், சக்கரமாம், எழுதி இருந்ததாம்.
சாத்தப்: இது என்னடா மயிரு மட்டைன்னு.
பொன்: இதுதான் சூனியம். அதை எடுத்துட்டா அவுங்க முதலாளியோட கஷ்டமெல்லாம் போய்டுமாம்.
சாத்தப்: அப்படியா பொன்னப்பா! ஆரியர்களெல்லாம் தேவகுலத்தைச் சேர்ந்ததா சொல்லிக்கிறாங்க. இது உண்மையா இருக்குமா. தேவங்க எல்லாம் வானத்துல இருக்காங்களாம்.
பொன்: நீ நம்பல! நம்ம இரண்ய மாமன்னர் நம்பல. நான் நம்பறேன்டா! அவுங்க நினைச்சா மந்திரத்தாலே இந்தக் காட்டையே எரிச்சிடுவாங்களாம். ஆரியங்களை நீ என்னான்னு நினைச்சிக்கிட்டே?
சாத்தப்: டேய்! பொன்னப்பா! அதோ பார். யார் அது நம்ம வீரப்பன் மாதிரித் தெரியலே.
பொன்: அவனேதான் சாத்தப்பா! என்ன தள்ளாடிக்கிட்டே வர்றான். அவனுக்கு என்னாச்சி.
சாத்தப்: டேய் வீரப்பா! எங்கடா போய்ட்டு வர்றே!
வீரப்: தேவலோகம் போய்ட்டு வர்றேன்டா!
சாத்தப்: டேய்! என்னடா உளர்றே!
வீரப்: டேய்! யார்டா நீ! (தள்ளாடியபடி வாய் உளறிப் பேசுதல்)
சாத்தப்: என்னடா என்னையே மறந்துட்டே.
வீரப்: ஓ! சாத்தப்பன் இல்லே நீ! ஆமா ஆமா சாத்தப்பனேதான். அவன் யார்?
பொன்: என்னா வீரப்பா! எங்களை அடையாளமே தெரியலையா?
வீரப்: நீயா! நீ! நீ! என்னா பேரு, ஓ! ஆமாம் ஆமாம்.
பொன்: டேய் வீரப்பா! ஆமாம் இல்லேடா என் பேரு.
வீரப்: தெரியும்டா! உம் பேரு. அடச்சே ஏவ் (ஏப்பம்) பொ… பொ… பொன்னப்பன்,
பொன்னப்பன் அதானே உன் பேரு.
பொன்: டேய்! வீரப்பா! ஏன்டா இப்படி உளறுகிறாய்?
வீரப்: டேய்! சோமரசம் தெரியுமாடா, சோமரசம்.
சாத்தப்: சோமரசமா! ஆமா! ஆரியப் பசங்க குடிச்சிட்டு ஆடிக்கிட்டிருக்காங்களே! அதுவா?
வீரப்: அதை மட்டும் குடிச்சிட்டே. இந்த உலகத்துல இருக்கமாட்டே.
பொன்: என்னடா சாத்தப்பா சொல்றான்?
வீரப்: நேரா ஒரே தூக்கு. தூக்கிக்கிட்டுப் போய் வானத்துல ஒரு உலகம் இருக்கே
சாத்தப்: என்ன, வானத்துல உலகமா?
வீரப்: ஆமான்டா. அங்க ஊர்வசி, திலோத்தமா, மேனகானு மூனு அழகான குட்டிங்க நாட்டியமாடிக்கிட்டு…
பொன்: ஆடிக்கிட்டு
வீரப்: என்னைக் கட்டிப் புடிச்சி… ஆகா என்னா சுகமடா என்னா சுகம். டேய் வாயால சொல்ல முடியாதுடா. அவன் அவன் அனுபவிச்சாதான்டா தெரியும்.
சாத்தப்: உம். போதை தலைக்கேறி உளறுகிறான். வாடா, இளவரசர் தேடுவார். (போகின்றனர்).
காட்சி 4 கூடாரம்
உறுப்பினர்கள்: பிரகலாதன், பொன்னன், சாத்தப்பன், வீரப்பன், தத்தனார், காங்கேயன்.
பிரக: பொன்னப்பா!
பொன்: (வணங்கி) இளவரசே!
பிரக: நம் பயணத்தைத் தொடங்கலாமா! எங்கே தத்தனார்.
பொன்: மருத்துவர் மூலிகைகள் சேகரிக்கக் காட்டுக்குள் போய் இருக்கிறார். சீக்கிரம் வந்துடுவார் இளவரசே!
பிரக: அவர் வந்ததும் புறப்பட்டு விடலாம் ஏற்பாட்டைக் கவனி.
சாத்தப் (வந்து): (வணங்கி) இளவரசே. நம்ம வீரப்பன் வயிற்றுவலியால் துடிக்கிறான்.
பிரக: எங்கே அவன்! கொண்டு வா! (வீரப்பனைக் கைத்தாங்கலாக நடத்தி வருகிறார்கள். வீரப்பன் அய்யோ, அப்பா அம்மாவென அலறியபடியும் வயிற்றைக் கைகளால் அழுத்தியபடியும் வருகிறான்.)
தத்தனார்: (வரும்போதே) என்ன! என்ன! யார் இப்படி அலறுவது. ஓ! வீரப்பனா (அருகில் சென்று கைநாடி பார்த்து) வாயைத் திற. (பார்த்தல், கண் இமைகளைத் திறந்து பார்த்து) இவன் உடலுக்கு ஒன்றுமில்லையே. நன்றாகத்தானே இருக்கிறான்.
வீரப்: வைத்தியரே! அய்யோ! உயிர் போவுதே. நானா நல்லா இருக்கிறேன். அய்யோ, அப்பா! அம்மா! (அலறுகிறான்)
தத்த: (யோசித்து) சரி, சரி. கொஞ்சம் தண்ணி கொண்டுவா. (சாத்தப்பன் நீர் கொண்டு வருதல்) தத்த: (தன் மருத்துவப் பையிலிருந்து சூரணம் கொஞ்சம் எடுத்து) உம். வீரப்பா வாயைத் திற. (வாயில் சூரணத்தைக் கொட்டி நீர் கொடுத்து) இந்தத் தண்ணியைக் குடி. எந்த நோயாயிருந்தாலும் குணமாய்டும்.
வீரப்: (மருந்து சாப்பிட்டபின்) (அடிவயிற்றையும் பற்றிக் கொண்டு அய்யையோ! அய்யையோ என்னமோ மருந்தைக் கொடுத்து நோயை அதிகமாக்கிட்டீங்களே! அப்பா! அம்மா! என்று உரக்கக் கத்துதல்.)
காங்: (வந்தபடி) என்ன, என்ன சத்தம்? யார் இப்படி அழறது?
பொன்: அய்யா! இவன் வீரப்பனுங்க! வயித்து வலியால் துடியா துடிக்கிறான்.
காங்: அப்படியா! விலகுங்கோ! நான் பார்க்கிறேன். (உற்றுப் பார்த்தல் – ஏதோ மந்திரம் செய்வது போல் முணுமுணுத்தல்) ஓ! இது உடம்பைத் பத்திய நோய் அல்ல. தெய்வ நிந்தனையால் ஏற்பட்ட உபாதை.
பிரக: அப்படி என்றால்?
காங்: தெய்வத்தை, அதாவது கடவுளை நிந்தனை செய்திருக்கிறான். ஈஸ்வரன் தன் சூலாயுதத்தை இவன் வயிற்றில் பாய்ச்சி இருக்கிறார். அதனால்தான் இந்த வலி. எந்த மருந்தாலும் குணமாக்க முடியாது.
பொன்: எங்க அரண்மனை மருத்துவர் தத்தனாரால் கூடவா முடியாது. காங்: தத்தனார் என்ன அவன் தாத்தாவே வந்தாலும் முடியாது.
சாத்தப்: ஆமா! உங்களைப் பார்த்தா ஆரியர் போல இருக்கு.
காங்: போல என்னா? ஆரியரேதான். பூதேவர்னு சொல்லுவாங்க.
சாத்தப்: இந்த நோயைப் போக்க வழியே இல்லையா?
காங்: ஏன் இருக்கே! ஒரு சொம்பில் தூத்தம் கொண்டு வா.
பொன்: தூத்தமா? அப்படின்னா?
காங்: தூத்தம் தெரியாது. தீர்த்தம், தண்ணீர்!
பொன்: தண்ணியா! இதோ கொண்டுவர்றேன் (தண்ணீர் கொண்டு வருகிறான். ஏதோ முணுமுணுத்து தர்ப்பையைக் கிள்ளிப் போட்டு வீரப்பனிடம் நீட்டி) உம். குடியப்பா! குடி.
வீரப்: (வாங்கிக்குடித்து) அடடே ! பொன்னப்பா! சாத்தப்பா! வலியே போன இடம் தெரியலையே. இளவரசே, இதென்ன புதுமை? சாமி! நன்றி சாமி! இளவரசே! இவருக்குப் பரிசு ஏதாவது…
காங்: இளவரசரா தாங்கள்! ஆச்சரியமாக இருக்கிறதே. பரிசு எதுவும் வேண்டாம். பரிசோ! பொருளோ வாங்கிண்டா எங்க மந்திரம் பலிக்காமப் போய்டும். ஜனங்களுக்கு உதவி செய்யவும், அவாளுக்கு ஞானோபதேசம் செய்யவும் கடவுள் எங்களைப் பூலோகத்துக்கு அனுப்பி இருக்கிறார்.
பிரக: ஆரியப் பெரியோரே!
காங்: அப்படி அழைக்காதீங்க! நாம ரெண்டு பேரும் சமவயதுதான். ஆனாலும் நீங்க இந்நாட்டின் இளவரசர். பிரகலாதன், இதுதானே உங்கள் பெயர்.
பொன்: அடடே! எப்படி எங்கள் இளவரசர் பேரைத் தெரிஞ்சுக்கிட்டீங்க?
காங்: முக்காலமும் உணர்ந்து சொல்லக்கூடிய ரிஷீஸ்வரர்கள் எங்களிடமுண்டு.
சாத்தப்: முக்காலம்னா?
காங்: கடந்த காலம்! இப்போது நடைபெறுகின்ற காலம். இனி நடக்கப்போற எதிர்காலம். இதை எல்லாம் கணித்துச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவங்க எங்களிடம் உண்டு. இளவரசர் எங்கே வந்திருக்கிறார்? ஏன் வந்திருக்கிறார்? சொல்லட்டுமா?
பொன்: சொல்லுங்க சாமி- காங்: தேச சஞ்சாரம் செய்ய இரண்ய மகாராஜாவால் அனுப்பப்பட்டு வந்து இருக்கிறார். ஓய்வு பெற்று பயணத்தைத் தொடர இருக்கிறார். பயணம் முடிந்ததும் பட்டாபிஷேகம்.
சாத்தப்: அடடே! அப்படியே சொல்லிட்டீங்களே! உங்க பெயரைத் தெரிஞ்சிக்கலாமா?
காங்: என் நாமம் காங்கேயன். இமயமலைச் சாரலிலிருந்து தென்னாடு நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
பிரக: பயணத்தின் நோக்கம்?
காங்: ஆண்டவன் இட்ட கட்டளை அதை நிறைவேற்ற.
பிரக: ஆண்டவனா? யார் அவன்?
காங்: உன்னையும் என்னையும் _ ஏன் இந்த உலகையே படைத்தவன். கடவுள் என்றும் தெய்வம் என்றும் நாங்கள் வணங்கும் தேவர்கள்.
பிரக: ஆண்டவன் இமய மலையில் இருக்கிறாரா?
காங்: அவர் வானுலகில் இருக்கிறார். அவர் ஆணையில்லாமல் உலகில் எதுவும் நடவாது. சர்வசக்தி படைத்தவர்.
பிரக: எல்லாமும் புதுமை. என் தந்தையும் தாயும் ஏன் என் ஆசிரியர்கூட இதைப்பற்றிச் சொன்னதில்லை. இப்போது தெற்கு நோக்கித்தான் போகின்றீரோ?
காங்: தெய்வ சங்கல்பத்தைக் கேட்டுண்டு சொல்றேன். (கண்மூடி ஏதோ முணுமுணுக்கிறான் பின்) இளவரசே! சந்தோஷ சமாச்சாரம்.
பிரக: என்ன அது!
காங்: எங்கள் தெய்வம் என்னை உங்களுக்குத் துணையாக இருக்கும்படிக் கட்டளை இட்டிருக்கிறது. தங்கள் சித்தம் எப்படியோ?
பிரக: தாங்கள் எனக்குத் துணையாக வருவீர்களோ மாட்டீர்களோ என்று இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் தெய்வமும் அப்படியே.
காங்: ஏன் உங்க தெய்வம்னு பிரிச்சுப் பேசுறீர். நம்ம தெய்வம்.
பிரக: ஆரியப் பழக்கவழக்கங்கள் தமிழர்களின் பழக்கவழக்கங்களுக்கு முரணாக உள்ளதே!
காங்: கவலைப்படாதீர்கள். இன்று முதல் நாம் நண்பர்கள்.
பிரக: நண்பா…
காங்: தயக்கம் ஏன்? காங்கேயா என்றே கூப்பிடலாம். நான் உம்மைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?
பிரக: காங்கேயா! நமக்குள் ஏன் வேறுபாடு, பிரகலாதா என்றே கூப்பிடலாம்.
காங்: சரி! பிரகலாதா! நாம் இன்றைக்குப் பிரயாணத்தை மேற்கொள்வது நல்லதல்ல. கிரக பலன் சரியில்லை.
பிரக: கிரக பலனா? அது என்ன?
காங்: உனக்கு ஒன்றும் புரியாது பிரகலாதா. இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்வதுதான் நலம்.
பிரக: அப்படியே செய்வோம் காங்கேயா! வீரர்களே! இன்னும் இரண்டு நாள் நாம் இங்கேயே தங்க வேண்டியிருக்கிறது. கூடாரத்தை மீண்டும் அமையுங்கள்.
பொன்: ஆணை இளவரசே.
– தொடரும்