மாநிலங்களவை உறுப்பினர் அமர்சிங்கிற்கு டில்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 24 அன்று ஜாமீன் வழங்கியது.
தனி தெலுங்கானா கேட்டுப் போராடிய அரசு ஊழியர்கள் 42 நாள்கள் வேலை நிறுத்தத்திற்குப் பின் அக்டோபர் 25 அன்று வேலைக்குத் திரும்பினர்.
வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 45 பேரின் ஜாமீனை நீட்டிப்பு செய்து அக்டோபர் 28 அன்று தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது.
அரசியல் தலைவர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தானின் மேனாள் அதிபர் முஷாரப் மேனாள் பிரதமர் ஷவுகத் அஜீஸ் ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றம் அக்டோபர் 28 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் எம்_13 எம் என்னும் ஆளில்லா விண்கலத்தை ரஷ்யா முதன்முறையாக அக்டோபர் 30 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
அருணாசல பிரதேச முதல் அமைச்சர் ஜர்டோம் காம்லின் தனது பதவியை அக்டோபர் 31 அன்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதலமைச்சராக நபம் டுகி நவம்பர் 1 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் 4 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நவம்பர் 22 அன்று ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்றம் நவம்பர் 8 அன்று ஆணையிட்டது.
ஸ்வீடன் நாட்டில் 2010ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை விசாரணைக்காக ஸ்வீடனுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் நவம்பர் 2 அன்று ஆணையிட்டது.
கூடங்குளம் அனுமின் நிலையத்தை மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நவம்பர் 6 அன்று ஆய்வு செய்தார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய-மாநில நிபுணர்கள் குழுவின் முதல் கட்டப் பேச்சு வார்த்தை நவம்பர் 8 அன்று நடைபெற்றது.
நில முறைகேடு வழக்கில் கருநாடக மேனாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவுக்கு நவம்பர் 8 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது.