Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : பெரியாரைப் பெற்றிழந்தோம்! பெற்றி யிழந்தோம்!

பெரும்பணியைச் சுமந்த உடல்!

பெரும்புகழைச் சுமந்த உயிர்

‘பெரியார்’ என்னும்

அரும்பெயரைச் சுமந்த நரை!

அழற்கதிரைச் சுமந்த மதி;

அறியா மைமேல்

இரும்புலக்கை மொத்துதல் போல்

எடுக்காமல் அடித்த அடி!

எரிபோல் பேச்சு!

பெரும்புதுமை! அடடா, இப்

பெரியாரைத் தமிழ்நாடும்

பெற்றதம்மா!

 

மணிச்சுரங்கம் போல்அவரின்

மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த

மழலைக் கொச்சை!

அணிச்சரம் போல் மளமளென

அவிழ்கின்ற பச்சை நடை!

ஆரி யத்தைத்

துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்

துவைத்தெடுத்த வெங்களிறு!

தோல்வி யில்லாப்

பணிச்செங்கோ! அடடா, இப்

பகுத்தறிவைத் தமிழ்நாடும்

சுமந்த தம்மா!

 

உரையழகிங் கெவர்க்குவரும்?

உடலழகிங் கெவர்பெற்றார்?

ஒளிர்மு கத்தின்

நரையழகிங் கெவர்க்குண்டு?

நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்

நடை நடந்து

திரையுடலை, நோயுடலைச்

சுமந்துபல ஊர்திரிந்து

தொண்டு செய்த

இரைகடலை அடடா, இவ்

எரியேற்றைத் தமிழ்நாடும்

இழந்த தம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்

எந்நேர மும்தொண்டோ டிணைந்த பேச்சு!

முப்பொழுதும் நடந்தநடை!

முழுஇரவும் விழித்தவிழி! முழங்கு கின்ற

அப்பழுக்கி லாதவுரை!

அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்!

எப்பொழுதோ அடடா,இவ்

வேந்தனையித் தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?

 

பெற்றிழந்தோம், பெரியாரை!

பெற்றியிழந் தோம்!அவரின்

பெருந்த லைமை

உற்றிழந்தோம் உணர்விழந்தோம்

உயிரிழந்தோம் உருவிழந்தோம்!

உலையாத் துன்பால்

குற்றுயிராய்க் குலையுயிராய்க்

கிடக்கின்ற தமிழினத்தைக்

கொண்டு செல்லும்

நெற்றுமணித் தலைவரினை,

அடடா,இத் தமிழ்நாடும்

நெகிழ்த்த தம்மா!

 

பெரியாரைப் பேசுகின்றோம்

பெரியாரை வாழ்த்துகின்றோம்

பீடு, தாங்கப்

பெரியாரைப் பாடுகின்றோம்

பெரியார்நூல் கற்கின்றோம்

பீற்றிக் கொள்வோம்!

உரியாரைப் போற்றுவதின்

அவருரைத்த பலவற்றுள்

ஒன்றை யேனும்

சரியாகக் கடைப்பிடித்தால்

அடடா, இத் தமிழ்நாடும்

சரியா தம்மா!

(கனிச்சாறு – ஏழாம் தொகுப்பிலிருந்து…)

– பாவலரேறு பெருஞ்சித்திரனார்