பெண்ணால் முடியும் : ”மானுடவியலில் முதல் ஆராய்ச்சி மாணவி நான்!”

டிசம்பர் 16-31 2019

அறிவியல், வரலாறு, புவியியல், சமூகவியல், கணிதம் என தனித்தனியே துறை இருக்கு. “அதென்ன மானுடவியல்(anthropology)?’’ என்ற கேள்விகளோடு, இதில் தமிழ் வழியில் ஆராய்ச்சி படிப்பை முதன்முறையாக மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கும் ஹேமமாலினியோடு பேசியபோது… “நான் கிராமத்துச் சூழலில் வளர்ந்த பெண். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன். இருந்தாலும் பி.ஏ. வரலாறு படித்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து எம்.ஏ. மானுடவியலைத் தேர்வு செய்தேன்.

கலைக்கூத்தாடிகள், நாடோடிகளை எல்லாம் சந்தித்தபோது மானுடவியலில் பி.எச்.டி பண்ணலாம் என யோசித்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். மேலும் மானுடவியலில் இதுவரை யாரும் தமிழில் பி.எச்.டி செய்யவில்லை. தமிழ் மொழியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது புரிதல் நிறைய இருக்கும் என முடிவு செய்தேன். பழங்குடிகளின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது தான் அவர்கள் பழங்குடிகளா – இல்லையா என்பதையே அறிய முடியும். இதற்காக சங்க இலக்கியத்தில் துவங்கி நவீன காலம் வரை எடுக்க வேண்டியது இருந்தது. “சமூக உருவாக்கத்தில் ஜாதிக் கலப்பும், புதிய ஜாதிகளின் உருவாக்கமும், ஜாதிகளின் தோற்றத் தொன்மங்களை மய்யமிட்ட நிலவரவியல் ஆய்வு’’ இதுவே நான் மேற்கொண்ட ஆராய்ச்சி.

இங்கு ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகுதான் மானுடவியல் துறை இங்கு காலூன்றியது எனலாம். முதன்முதலில் ஜாதி ரீதியான கணக்கெடுப்பைத் தொடங்கினார்கள். அப்போது இந்தத் துறை ஒரு பக்க பலமாக உருவானது எனச் சொல்லலாம். நாம் எதற்கெடுத்தாலும் இங்கே ஜாதி ஜாதி என யோசித்துக் கொண்டிருக்கிறோம். நம் தமிழ்ச் சமூகம் ஒரு ஜாதிய சமூகமே கிடையாது. இது ஒரு குடிச் சமூகம். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையுமே நாம் இங்கே குடிச் சமூகமாகத்தான் பார்க்கிறோம். ஆரியர்களின் வருகைக்குப் பிறகுதான் நம் தமிழ் சமூகம் குடிச் சமூகத்தில் இருந்து மெல்ல மெல்ல ஜாதியச் சமூகமாக மாறியது.

சங்க காலத்தில் அகமண முறை, புறமண முறை இரண்டுமே இருந்தன. இப்போது நடக்கும் ஜாதிப் பிரச்சனை, ஒரே ஜாதிக்குள் திருமணம், ஆணவப் படுகொலை என எதுவும் இல்லாத காலம் அது. பெரும்பான்மையான பழங்குடி சமூகத்தில் பழங்குடி இனப் பெண் தன் கணவனை இழந்தால் கணவனின் உடன் பிறந்தவர்களையோ, வேறு ஓர் ஆணையோ மணம் செய்து கொள்ளலாம். காலமாற்றத்தினால் பெண்ணை மய்யமிட்டு ஜாதி எப்படி உருவானது, ஜாதி எப்படி இயங்குகிறது, குடிச் சமூகம் ஜாதிய சமூகமாக மாறி அதில் எவ்வாறு பல ஜாதியக் கலப்புகளும், புதிய ஜாதிகளும் உருவானது என்பதையும் உள்வாங்க முடிந்தது.

நம் தமிழ்ச் சமூகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் அய்ந்திணை வேறுபாட்டில் மட்டுமே இருந்தது. சங்க காலம், களப்பிரர்கள் காலம், பல்லவர்கள் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜய நகரப் பேரரசு காலம், பிரிட்டிஷ் காலம் எனத் தொடர்ந்த ஆய்வில், அந்தந்த காலகட்டத்தில் எவ்வளவு ஜாதிகள் கலந்தன… எத்தனை புதிய ஜாதிகள் உருவாகின என்பதையும் அறிய முடிந்தது. குறிப்பாக சோழப் பேரரசு காலத்தில்தான் நிறைய ஜாதியச் சமூகம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஜாதியும் தங்கள் ஜாதியை ஒரு பட்டப் பெயராக மாற்ற ஒரு புராணக் கதையை உருவாக்கிக்கொள்கிறார்கள். புலம்பெயரும்போது தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள அந்தப் பட்டப் பெயர்களை உயர்வாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆரியர்கள் வருகைக்குப் பிறகுதான் ஜாதியக் கட்டமைப்பு இங்கே அழுத்தமாக வேரூன்றி, ஜாதியின் பெயரால் மக்கள் ஊருக்கு வெளியே புறம் தள்ளப்படுகிறார்கள்.

தீண்டாமை இங்கே அதிகமாகிறது. இனக் குழுவாக இருந்த மக்களுக்குள் பிரிவினை உருவானதை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து இன்றும் தொடரும் கண்ணுக்குத் தெரியாத இந்த அமைப்பு… அதன் உளவியல்… வெளியில் தெரியாத மறைமுகப் பொருள்… நோய் மாதிரி மனிதனை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதை பண்பாட்டுத் தளம், அரசியல் தளம், பொருளாதாரத் தளம் ஆகியவற்றில் ஒட்டு மொத்தமாகப் பார்க்க வேண்டியது உள்ளது’’ என முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *