தலையங்கம் : கார்ப்பரேட்டுகளுக்கே கதவு திறந்தால் காப்பாற்ற முடியுமா பொருளாதாரத்தை?

டிசம்பர் 16-31 2019

இந்திய நாட்டின் பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் கீழே போய்விட்டது; நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மிகப்பெரிய மாறுதல் வரும்; பொருளாதாரத்தில் நாடு புதிய சாதனை படைக்கும் என்றெல்லாம் கூறி, தேர்தல் வாக்குறுதி என்கிற தேன் தடவி, ஆட்சிக்கு வந்ததோடு, எதிர்க்கட்சிகளிடையே வடபுலத்தில் போதிய ஒற்றுமை இல்லாத காரணத்தால் – மீண்டும் ஆட்சியை இரண்டாவது முறையும் பிடித்தார் பிரதமர் மோடி.

இதில் ஆர்.எஸ்.எஸ். கூறிவந்த மூன்று முக்கிய திட்டங்களில் இரண்டு திட்டங்களை அடைந்துவிட்டோம் என்கிற பெருமிதம் அவர்களை மக்களின் உண்மைப் பிரச்சினைகள், தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக்கி உள்ளது.

ஒரு நல்ல மக்களாட்சிக்குச் சரியான அடையாளமும், அளவுகோலும் – உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், அறிவுசார் கல்வி – ஆகியவற்றை எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே! அதிலும் குறிப்பாக, காலங்காலமாக ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களுக்கு அவற்றை எளிதில் கிட்டும்படிச் செய்தலேயாகும்!

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலையேற்றம்!

காஷ்மீரில் 370 பிரிவு நீக்கம், இராமனுக்கு அயோத்தியில் கோவில் – பாபர் மசூதியை இடித்த இடத்தில் – என்பதில் தாங்கள் இலக்கை அடைந்துவிட்டோம் என்று மகிழும் அவர்களுக்கு, அல்லற்பட்டு ஆற்றாது ஏழை, எளிய மக்கள் – படும் அவதி, பொருளாதார வீழ்ச்சி, வேலை கிட்டாத வேதனை, விவசாயிகளின் தற்கொலைகள் தொடருதல் – அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்குப் போதிய நியாய விலை கிட்டாமை, ஏழை எளிய மக்களுக்கு நுகர்பொருள் பயன்பாடுகூட கிட்டாமை ஆகியவை பற்றிக் கவலை இல்லையே!  (வெங்காயக் கொள்ளை என்பது இதற்குமுன் எந்த ஆட்சியிலாவது கேள்விப்பட்டதுண்டா?)

மத்திய நிதியமைச்சரின் பதில் நியாயமா?

வெங்காய விலை இப்படி வானத்தை முட்டி, அன்றாட உணவுக் கடைகள்கூட தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேட்டால், ஒரு நிதியமைச்சர் ‘‘நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை; அதுபற்றி எனக்குத் தெரியாது’’ என்று பதில் கூறுவது பொறுப்புள்ள பதவியில் உள்ளவருக்கு அழகா? நியாயமா?

ஏற்றுமதிகள் குறைந்துவிட்டன; இறக்குமதி அதிகமாகும் நிலை; நுகர்பொருள்கள் அனுபவிப்பும் குறைவு.

கடந்த ஆறு காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் _ வரலாறு காணாத சரிவை நோக்கி அதல பாதாளத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின்  கட்டுரை

மத்திய ஆட்சியின் ஆதரவு நாளேடான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் 8.12.2019 அன்று வெளிவந்துள்ள ஒரு கட்டுரை, அப்படியே கூட்டாமல் குறைக்காமல் யதார்த்த நிலையை எழுதியுள்ளது!

பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், மன்மோகன்சிங் போன்றவர்களோ, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்களோ கூறுவதைக்கூட ஏற்கவேண்டாம்; ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் கட்டுரையில் உள்ள சில கசப்பான உண்மைகளைக் கண்டு, முகம் சுளிக்காமல் தவறுகளை ஏற்று, திருத்தி, தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் தண்டவாளத்தின்மீது நிறுத்தினால்தானே, எஞ்சிய பயணம் சாத்தியமாக இருக்க முடியும்?

‘லோக சஞ்சாரி’யாக இருக்கும் பிரதமர் மோடி

இதைப்பற்றி நமது பிரதமர் கவலைப்படாமல் ‘‘லோக சஞ்சாரியாக’’ இருக்கிறார் என்பது வேதனையும், சோதனையும் மிகுந்தது அல்லவா? அந்த ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கட்டுரை தரும் முக்கிய தகவல்கள்:

புள்ளிவிவரம்

‘‘வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதத்தை நோக்கிப் பாய்வோம்‘’ என்று நிதியமைச்சரும் பிரகடனப்படுத்திய பின் ஏற்பட்டுள்ள கீழிறக்கம் அசாதாரணமானது.

இதோ புள்ளி விவரம்:

கடந்த ஆறு காலாண்டுகளில்,

முந்தைய ஆட்சியில்                        8 சதவிகிதம்

பிறகு                                                 7 சதவிகிதம்

அடுத்து காலாண்டில்                        6.6 சதவிகிதம்

                ’’                                         5.8 சதவிகிதம்

                ’’                                         5 சதவிகிதம்

தற்போது                                            4.5 சதவிகிதம்

வரலாறு காணாத வீழ்ச்சி.

இதன் விளைவாக,

1.            விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை (வெங்காய விலையேற்றமே கைமேல் உள்ள புண், இல்லையா?)

2.            வீட்டு உபயோகப் பொருள் வாங்குதல் மிகவும் குறைந்த நிலை (NSSO அறிவிப்பு)

3.            கிராமப்புறக் கூலிகள் வெகுவாகக் குறைந்த நிலை.

4.            விவசாயிகளுக்கான விளை பொருள்களின் விலையும் மிகவும் குறைந்ததால் – விவசாயிகள் வேதனை.

5.            தினக்கூலி உழைப்பாளர்கள் மாதத்தில் வெறும் 15 நாள்களுக்கு மட்டுமே வேலை பெறும் அவல நிலை.

6.            மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத் திட்ட நாள்கள்  மேலும் அதிகரிக்க வேண்டுகோள் – பெருக்கம்.

7. தினசரிப் பயன்பாட்டில் உள்ள மக்களின் அன்றாடப் பயன் பொருள் (Durable, Non-Durable) விற்பனையோ மிகச் சரிவு.

மொத்த வியாபார பண வீக்கம் விலையேற்றம் 1.92 சதவிகிதம்

மக்கள் பயன்படுத்தும் பொருள் பணவீக்கம்  4 சதவிகிதம் (சில்லறையில்) 4.62 சதவிகிதம்

இந்தக் கீழிறக்கத்திற்கான மூலகாரணம்பற்றி கட்டுரையாளர் எழுதும்போது

1.            பண மதிப்பிழத்தல் கொள்கை அறிவிப்பும், அமலும் (Demonetization)

2.            தவறான ஜி.எஸ்.டி. வரி முறை

3.            வரி பயங்கரவாதம் (Tax Terrorism)

4.            திறமைகளை அளவு கடந்து கட்டுப்படுத்தல்

5.            தவறான இறக்குமதி – ஏற்றுமதிக் கொள்கை.

எல்லாவற்றையும்விட முக்கியம்.

6.            பிரதமர் அலுவலகமே (PMO) எல்லா அதிகாரங்களையும் தங்களிடம் குவித்துக்கொண்டு, முடிவுகளை எடுத்து மற்ற அமைச்சு நிறுவனங்களுக்கு ஆணையிடும் போக்கு.

‘தானடித்த மூப்பாக’ நடந்துகொள்கிறது!

நிதி நிபுணர்கள் எவருடைய ஆலோசனையையும் கேட்காது, ‘தானடித்த மூப்பாகவே’ நடந்துகொள்வதுதான் என்றும் அக்கட்டுரையாளர் குறிப்பிடுவது நோயின் அபாயம்பற்றிய சரியான ‘எக்ஸ்ரே’ அல்லது ‘ஸ்கேன்’ (Scan) போன்ற படப்பிடிப்பு ஆகும்.

இதனைப்பற்றி கவலைப்படாது, மக்களின் கல்விக் கண்ணைக் குத்துவது, ‘நீட்’ போன்ற தேர்வு, இடையறாத தேர்வுகள் மற்றும், தேர்வுகளால் கார்ப்பரேட்டுகளுக்கு வருவாய்க்குக் கதவு திறத்தல் இவைகளால் எப்படி பொருளாதாரத்தைக் காப்பாற்றிட முடியும்?

‘விதை நெல்லைச் சமைத்து விருந்து’ சாப்பிடும் விசித்திரம்!

பொதுத் துறைப் பங்குகளை விற்றுக் கொண்டே வருவது – ‘விதை நெல்லைச் சமைத்து விருந்து’ சாப்பிடும் விசித்திரம் போன்றதே!

மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்!

– கி.வீரமணி

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *