எங்கும் எந்த அடையாளமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
கொலையாளியின் கரத்திலோ சட்டைக் கையிலோ
எங்குமே
சிந்திய குருதியின் அடையாளம்
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
செவ்விதழ் கொண்ட குத்தீட்டிகளையோ
சிவப்பு நுனி வாட்களையோ
கண்டுபிடிக்க இயலவில்லை
தூசியில் பொழிவுகளோ
சுவர்களில் கறைகளோ
இல்லை,
எங்குமே, எங்குமே
இரத்தம்
தன் இருளினைத் திரை விலக்கவில்லை.
பெருமிதத்தில் பிளவாகவோ
சடங்கில் பலியாகவோ அல்ல,
அது
போர்க்களத்தில் சிந்திடவில்லை.
ஒரு தியாகியின் விளம்பரப் பட்டிகையை
அது உயர்த்தவில்லை.
அந்த அனாதை இரத்தம்
பெருங்குரலில் அலறியபடி
ஓடிக் கொண்டே இருந்தது.
ஒருவருக்குமே நேரமோ
வண்ணமோ இல்லை,
செவியுற எவரும் சிரத்தை கொள்ளவில்லை.
சாட்சியில்லை, தற்காப்பில்லை
வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது.
ஒடுக்கப்பட்டோரின் இரத்தம்
ஊமையாகத்
தூசியினுள் இறங்கியது.
– ஃபைஸ் அகமது ஃபைஸ், பாகிஸ்தான்
மொழியாக்கம் : இரா. பேபிவேகா இசையமுது (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீட்டுள்ள “காமன்வெல்த் நாடுகளின் கவிதைகள்” என்ற நூலிலிருந்து)