‘உண்மை’, ‘விடுதலை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ அக்டோபர் 1_15 இதழைப் படித்தேன். இதழில் இடம் பெற்று இருந்த ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டுவதாய் இருந்தது. உங்களுக்குத் தெரியுமா பகுதி, ஒரே வரியில் இளவயதினரான என்னைப் போன்றவர்கள் இதுவரை அறிந்திராத கருத்துகளைக் கூறி வருகின்றது. வள்ளலார் பற்றி இந்த இதழில் இடம் பெற்று இருந்த சிறு குறிப்பு மிகச் சிறப்பு. உண்மையான வள்ளலாரின் கொள்கைகள், இன்றைய நிலையில் நமது நாடு முழுவதும் தேவை. இவரை நாடு முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தாலே போதும். அமைதி எற்படும். மதவெறி மாயும். அதுபோல காமராசர் பற்றிய சிறு குறிப்பும் மிக அருமை. காமராசர் அடித்தளம் அமைத்துக் கொடுத்து பின்னர் வந்த இரு திராவிடக் கட்சிகளும் கல்வியைப் பொறுத்தளவில் நன்கு செயலாற்றிய காரணத்தால் தாம் அனைத்து சமூகத்தவர்களும் படித்து ஓரளவாவது முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது ஆதிக்க சக்திகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்றுள்ளது. ஆதலால்தாம் அவை பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு சாதாரண (எளிய பாமர) மக்களை தமது வலையில் வீழ்த்த வெகுமுயற்சி செய்து கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் மக்களின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களுக்கு நல்ல பாதையைக் காட்ட சமுதாயப் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டுள்ள திராவிடர் கழகம் அதைப் பொறுத்தவரையில் முனைந்து செயலாற்ற வேண்டும். இது இப்போது மிக அவசியம்.
– ப.கார்த்திக், உலகபுரம்,
ஞானிபாளையம், ஈரோடு – 638112.
******
மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். அமெரிக்காவில் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலையங்கம் ‘பகவத் கீதை’ சிந்திக்க வைத்தது. எப்படி இப்படியெல்லாம் மதத்தைத் திணிக்கிறார்கள், நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்? என்னும் கேள்வி கண்டிப்பாக மக்கள் மனதில் எழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நேயனின் கட்டுரையை நான் இரண்டு, மூன்று தரம் படிப்பேன். ஏனெனில், இந்தத் தரம் கெட்டவர்கள் எப்படியெல்லாம் மனிதர்களைப் பயமுறுத்தி கடவுள் நம்பிக்கையை வளர்த்தார்கள் என்பதை அக்குவேர் ஆணிவேர் எனப் பிரித்தெடுக்கிறார். மேலும், இவரின் கட்டுரை ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. எத்தனை பொய் புரட்டுகள்! இப்படியா இந்த இதிகாச புராணங்கள்! மலைக்க வைக்கின்றன.
ஆசிரியரின் கேள்வி _ பதில்கள் அருமை. பெரியார் பேசுகிறார்… இன்று இப்பேச்சு மிகவும் அவசியம். உண்மையைப் படிக்கப் படிக்க ‘தன்மானம்’ உயிரை விடவும் மேலானது என்று உணர வைக்கிறது.
(சாமி சிதம்பரனார் மனைவி சிவகாமி என்று படித்துள்ளேன். ஆனால், அது விதவைத் திருமணம் என்பதை உண்மையின் வழியாகவே அறிந்தேன்.)
என்றென்றும் நன்றியுடன்,
– ஞா.சிவகாமி,