எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்!

நவம்பர் 01-15 2019

நேயன்

கடவுள் இல்லை என்றால் ஏசுவும் – அல்லாவும் இல்லை என்றே பொருள்!

ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.

கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்தக் கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள்  எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே!

கேள்வி 1: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில் 1: பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.

மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.

கேள்வி 2: கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாகக் கூறமுடியுமா?

பதில் 2:  கடவுள் இல்லை என்றால் எக்கடவுளும் இல்லையென்பதே பொருள். நாங்கள் இந்துக்கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே! எனவே, உங்கள் கேள்வி புரட்டு; மோசடி!

கேள்வி 3: தியாகராஜர் ஆராதனையைக் கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

பதில் 3: அடிப்படையில் இவ்வொப்பீடே தவறானது. ஒருவருக்கு விழா எடுப்பதை கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இனிய தமிழிசையை விட்டுவிட்டு தெலுங்குக் கீர்த்தனை, கர்நாடக இசை என்று அலையும் எம் இன மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை திசைதிருப்பி, சம்பந்தமில்லாத ஜெயந்தி விழாவோடு, இணைத்து முடிச்சுப்போடும் உம் நரித்தந்திரம், வித்தைகளெல்லாம் எங்களிடம் பலிக்காது.

தமிழில் பேசு, அந்நிய மொழிக்கு அடிமையாகாதே! தமிழ்ப் பெயர் சூட்டு, ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து தமிழைக் கெடுக்காதே என்று சொல்வது எப்படி தமிழர் கடமையோ அப்படித்தான் தமிழிசையைப் பாடு, அதற்கு உயர்வு கொடு என்பதும். இதை முதலில் புரிந்து  கேள்வி கேட்க வேண்டும். யார் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க அஞ்சாதவர்கள், கண்டிப்பவர்கள் நாங்கள். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு இல்லை.

கேள்வி 4: பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப் பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

பதில் 4: முதலில் நாங்கள் பூணூல் அறுக்கவில்லை. எனவே, எங்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே அயோக்கியத்தனம். எனினும் இக்கேள்விக்கு எம் பதில்:

பூணூலை அறுத்தவர்கள் ஏன் சிலுவையை அறுக்கவில்லை, தொப்பியை, தலைப்பாகையை அகற்றவில்லை என்பது அர்த்தமில்லா; காழ்ப்புணர்வுடன் கூடிய கேள்வி.

தொப்பியும், சிலுவையும், தலைப்பாகையும் மற்றவர்களை இழிவுபடுத்தவில்லை. பூணூல் மற்றவர்கள் இழிமக்கள், சூத்திரர்கள் என்று அறிவிக்கும் அடையாளமாகவும், தான் மட்டுமே உயர்பிறப்பாளன் என்று கூறுவதாயும் இருப்பதால் பாதிக்கப்படுவோர், இழிவுபடுத்தப் படுவோரில், உணர்ச்சி வயப்படும் ஒரு சிலரின் எதிர்வினை இது. எதிர்வினை வரக்கூடாது என்றால், மாற்றாரை மட்டப்படுத்தும் _ இழிவுபடுத்தும் பூணூலை அவர்களே கழற்றி, மனிதர்களைச் சமமாக மதிப்பதே சரியான தீர்வு.

கேள்வி 5: தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஓர் அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

பதில் 5: தாலி அகற்றுவது ஒரு நிகழ்வு, அது ஒரு விழிப்பூட்டும் பிரச்சாரம், செயல் விளக்கம். அதைப் போராட்டம் என்பதே முதலில் புரட்டு, தவறு. போர் என்பது ஒருவருக்கு எதிராகச் செய்யப்படுவது. தாலி அகற்றும் நிகழ்வு. யாருக்கும் எதிராகச் செய்யப்படுவதில்லை.

திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ உரிய இணையரை இச்சமுதாயத்திலிருந்துதான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கடவுள் மறுப்பையும், தாலி மறுப்பையும் கட்டாயப்படுத்த இயலாது. முடிந்தமட்டும் முயற்சி செய்து சடங்கு ஒழிப்பு, புரோகித மந்திர ஒழிப்பு செய்கிறோம்.

நாங்கள் எங்கள் குடும்பத்தினராயினும் அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யச் சொல்வதில்லை. அவர்களாக மனம் மாறி உண்மையை, சரியானதை ஏற்கச் செய்யவே முயற்சிப்போம். அப்படியிருக்க கட்சிக்காரர்களை, நண்பர்களை, உறவினர்களை கட்டாயப் படுத்துவதில்லை.

திராவிடர் கழகத்தவர் கடவுள் மறுப்பிலும், சடங்கு மறுப்பிலும், புரோகித மந்திர எதிர்ப்பிலும், தவிர்ப்பிலும் உறுதியாய் இருப்பர். தாலி கட்டுவதில் கட்டாயப்படுத்த இயலுமா? திருமணம் திராவிடர் கழகக் குடும்பத்துக்குள்ளே செய்ய இயலுமா?

திராவிடர் கழகத்தவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வீட்டிலும், தாலி அணிய விரும்புகின்றவர் வீட்டிலும் திருமண சம்பந்தம் கொள்ளும் கட்டாயம் வரும்போது சம்பந்திகளை எப்படி கட்டாயப்படுத்த முடியும்? அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறோம் திருமணத்திற்கு முன்போ, பின்போ! திருமணத்திற்கு முன்பே ஏற்போரின் திருமணங்கள் தாலியில்லாமல் நடக்கின்றன. திருமணத்திற்குப் பின்பு காலப்போக்கில் மனம் மாறி கழற்றுகின்றவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம், அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கிறோம்.

இப்போது நடந்ததும் அப்படியொரு நிகழ்வே! இது ஒன்றும் புனிதப்படுத்தும் சடங்கு அல்ல; அடிமைத் தளையை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி! சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் அகற்றிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் பிறர் துணிவு பெறுகிறார்கள்.

திராவிடர் கழகத்திலோ, அல்லது பெரியார் டிரஸ்டிலோ என்று வலியுறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு என்ன காரணம் என்பதையும் நாங்கள் அறிவோம். திராவிடர் கழகத் தலைவரின் வாழ்விணையர் கழுத்தில்  தாலி இருப்பதாக எண்ணி கேட்கப்படும்   கேள்விதான் இது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணம் உங்கள் நம்பிக்கைப்படி கொழுத்த ராகு காலத்தில், ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு என முழுமையாக நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *