அய்யாவின் அடிச்சுவட்டில்…
கி.வீரமணி
மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்தி, இந்திய வரலாற்றில் ஒரு புது சரித்திரத்தை உருவாக்கிய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் 16.6.1990 தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அய்ம்பெரும் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தந்தார்.
வி.பி.சிங்
ராணுவ விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான வருகை தரும் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் கழகத் தோழர்கள், சமூக காப்பு அணியினர் திரண்டு மிகப் பெரிய வரவேற்பு அளித்தனர்.
“சிறீலங்கா ராணுவத்தினர் அனைத்து நாட்டு விதிமுறைகளை மீறி, தீக்குண்டுகளை (நேபாம்) வீசி அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்கின்றனர். இந்தப் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தோடு செஞ்சிலுவைச் சங்கத்தினரை மருந்துகளுடன் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி, காயமுற்றோருக்கு சிகிச்சை தர ஆவன செய்ய வேண்டும். ஈழத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது தமிழர்களுக்குக் கவலை அளிக்கிறது’’ என்று பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தந்தி கொடுத்தோம்.
மேலும், 30.6.1990 அன்று தமிழர் அய்க்கிய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, விடுதலைப் புலிகள் தேர்தலுக்கு ஆயத்தமான நேரத்தில் வேண்டுமென்றே போரைத் துவக்கியது சிங்கள அரசே! தேர்தல் நடந்தால் விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவார்கள் என்பதால், வேண்டுமென்றே போரைத் துவக்கியது சிங்கள அரசுதான் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களோடு சுட்டிக் காட்டி உரையாற்றினேன்.
வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்டம் குடியேற்றத்தில், 2.7.1990 அன்று இரவு தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அம்பேத்கர் மாவட்ட தி.க. செயலாளர் கே.கே.சின்னராசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் மாவட்ட தி.க. தலைவர் து.ஜெகதீசன் தலைமை வகித்தார்.
கே.சி.வீரமணி
சிலை திறப்பு விழாவை ஒட்டி மாலையில் மூடநம்பிக்கை ஊர்வலம் குடியேற்றம் நெல்லூர்பேட்டை காந்தி சிலையிலிருந்து புறப்பட்டது. ஊர்வலத்தை கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். (தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசின் அமைச்சர்) பல்லாயிரம் மக்கள் பங்கேற்க, தந்தை பெரியார் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த சிறப்பான நாளாக அன்று அமைந்தது.
திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 அன்று சென்னை பெரியார் திடலில் பம்பாய் தொல்காப்பியனார் அரங்கத்தில் கரூர் பி.கே.அய்யா (இவர் வைக்கம் போராட்ட வீரர்) நினைவுப் பந்தலில் எழுச்சியுடன் தொடங்கியது.
கா.மா.குப்புசாமி
மாநாட்டில், பேரணியும் தந்தை பெரியார் சமூகக் காப்பணி அணிவகுப்பு நடத்திய மாட்சியும் காவல் துறையினரையே கவர்ந்து என்றால் அதன் சிறப்பைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிற அளவில், பெண்கள் அணி வகுப்பு, குதிரைகள் அணி வகுப்பு, பெரியார் பிஞ்சுகளின் மழலை முழக்கங்கள், மாவட்ட வாரியான அணிவகுப்பு, சென்னையே குலுங்கும்வண்ணம் நடை பெற்றது! இம்மாநாட்டின் வெற்றி மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி, தஞ்சை கா.மா.குப்புசாமி ஆகியோரின் அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
மாநாட்டில், உரையாற்றும்போது, பி.ஜே.பி. என்றால், ‘பிராமின் ஜனதா பார்ட்டி’ என்று பொருள். எத்தனை ஏடுகளைப் பார்ப்பனர்கள் நடத்தினாலும், எங்கள் கரித்துண்டு எழுத்துகளுக்குமுன் எம்மாத்திரம்?
தந்தை பெரியார் மறைந்து இருக்கலாம். ஆனால், பெரியார் கைத்தடியாக இருக்கக்கூடிய பெரியாருடைய தொண்டர்கள் இந்த நாட்டிலே இலட்சோபஇலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.
துரை.சக்கரவர்த்தி
மறைந்த கழகப் பிரச்சார செயலாளர் துரை.சக்கரவர்த்தியின் துணைவியார் சூர்யகுமாரி அவர்கள் 29.7.1990 அன்று அதிகாலை 4:30 மணியளவில் இயற்கை எய்தினார். சேலத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்கள். என் சார்பில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
30.7.1990 அன்று அன்னாரது உடல் அடக்கம் அய்யம்பேட்டையில் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் தலைமை தாங்கினார். ஆர்.பி.சாரங்கன், மாவட்டச் செயலாளர் இராசகிரி கோ.தங்கராசு, கூட்டுச் செயலாளர் நீடாமங்கலம் சுப்ரமணியம், உரத்தநாடு ராசேந்திரன், மேலத்தஞ்சை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவர் ராயபுரம் கோபால், இளைஞரணி அமைப்பாளர் இரா.குணசேகரன், ஆசிரியர் திருஞானம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
8.8.1990 அன்று சூரியகுமாரி அவர்களுடைய படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு அவரது உருவப் படத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன்.
மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சபாஷ் போட்டு விடுதலையில் வெளிவந்த தலையங்கம்
8.8.1990 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து பிரதமர் வி.பி.சிங் அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை வரவேற்று 10 ஆண்டுகளாக, காங்கிரஸ், பார்ப்பன சூழ்ச்சியால் மூலையில் வீசப்பட்ட மண்டல் குழு பரிந்துரை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. சமூகநீதியில் சரித்திரம் படைத்தது. தேசிய முன்னணி அரசு என்று ‘விடுதலை’யில் சிறப்புத் தலையங்கம் தீட்டியது. அதில், “சபாஷ் வி.பி.சிங்’’ என்று தலைப்பிட்டு, “சமூக_கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்னும் சொற்றொடர், இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறுவதற்கான காரணம், தந்தை பெரியார் அவர்கள்தான் என்பது வரலாற்று உண்மை; தென்னகத்தில் தந்தை பெரியார் உயர்த்திய சமூகநீதிப் போர்க்கொடியால் அரசியல் சட்டம் முதன்முதலாகக் திருத்தப்பட்டது. அரசுப் பதவிகளில் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகச் சேர்க்கப்பட்ட சொற்றொடர்தான் அது!
அந்த சமூகநீதி; காலம்காலமாக முழுமையாக பார்ப்பன ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசுப் பதவிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்போது, பெரியார் தத்துவம் காலத்தை வென்று நிற்கிறது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
மண்டல் அறிக்கையை வெளிக்கொணர் வதற்கும் அதை அமல்படுத்த வைப்பதற்கும் எனது தலைமையில் திராவிடர் கழகம் அடுக்கடுக்காக மேற்கொண்ட போராட்டங்கள், மாநாடுகள் ஏராளம்.
இதற்கு அடித்தளமாக இருந்து _ பிரச்சினையின் ஆழத்தை கூர்மையாகப் புரிந்துகொண்டு செயல்பட்டு வரும் _ தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் தத்துவங்களை உள்ளத்தில் என்றென்றும் ஏந்தியிருப்பவருமான சமூகநலத்துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அவர்களின் இடைவிடாத முயற்சியை கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் பாராட்டி மகிழ்கிறோம்“ என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
மண்டல் குழு பரிந்துரை அமலாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக நமது வீட்டு குழந்தைகளுக்கு இனி, வி.பி.சிங் என்றோ, விசுவநாத் பிரதாப் சிங் என்றோ பெயரிடுங்கள் என்று வலியுறுத்தும் முக்கிய அறிக்கையில் 8.8.1990 அன்று கேட்டுக்கொண்டேன்.
மேலத்தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் 8.8.1990 இரவு எட்டரை மணியளவில் பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, கொட்டும் மழையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சிக்கு மேலத் தஞ்சை மாவட்ட தி.க.தலைவர் ஆர்.பி.சாரங்கன் தலைமை வகித்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமி அவர்கள், அய்யா சிலைதிறப்பு விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
தந்தை பெரியார் அவர்களுடைய முழு உருவச் சிலையினை, கொட்டும் மழையில் நனைந்துகொண்டு திறந்து வைத்து, உரை நிகழ்த்தினேன். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டுக்கோட்டை நகர தி.க. தலைவர் எஸ்.தியாகராஜன் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவடைந்தது.
மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தியதன் மூலம் _ சரித்திரப் புரட்சியை செய்துள்ள தேசிய முன்னணி ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் 11.8.1990 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் என்னைப் பாராட்டி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேசினர்.
“நீங்கள் தந்த உணர்ச்சிமயமான பாராட்டுகளுக்குத் தகுதியானவன் என்று கருதி என்னை ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். இந்தப் பாராட்டுக்குரிய தகுதி அத்தனை பெரியார் தொண்டர்களுக்கும் உண்டு. “நான் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன். தந்தை பெரியார் தந்த அறிவுச்சுடர் அணையாது காக்கப்படுகிறது. அது ஒளிவிட்டுத் திகழ்கிறது! விந்தியத்தைத் தாண்டி வடக்கேயும் அந்தச் சுடர் பரவியிருக்கிறது. மண்டல் அறிக்கை அமலாகியிருக்கிறது என்றால் அதன் பொருள் இதுதான்’’ என்று குறிப்பிட்டேன். வீட்டுக்கு வீடு வி.பி.சிங் படத்தை மாட்டுங்கள், குழந்தைகளுக்கு அவர் பெயரையே சூட்டுங்கள் என்றும் அந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
“இனிமேல் இந்த ஆட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வரலாம். பார்ப்பன பத்திரிகைகள் இப்போதே மிரட்டத் துவங்கி விட்டன. நமது எதிரிகள் நாணயமானவர்கள் அல்ல; அண்ணா சொன்னதுபோல் சூழ்ச்சியால் _ துரோகத்தால் வீழ்த்தக்கூடியவர்கள். நாம் தமிழ்நாட்டில் நடக்கும் ‘சூத்திர’ ஆட்சி காப்போம் என்று உறுதி எடுப்போம் என்று குறிப்பிட்டேன்.
30.8.1990 அன்று மலேசியாவின் பத்தாங் பெர்சுந்தை புதிய மண்டபத்தில் மு.க.கந்தசாமி_சுப்பம்மாளின் செல்வன் கதிரவனுக்கும் அம்மையப்பன்_பாவாய் தம்பதிகளின் செல்வி செல்லம்மாளுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா எனது தலைமையில் நடைபெற்றது. மலேசிய திராவிடர் கழகம், பத்தாங் பெர்சுந்தை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், கோலாசிலாங்கூர் மாவட்ட திருமணத் துணை பதிவாதிகாரி திராவிடமணி மு.நல்லதம்பி வாழ்க்கை ஒப்பந்த திருமண பதிவைச் செய்துவைத்தார். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர் ரெ.சு.முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.
9.9.1990 அன்று அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலம் சிகாக்கோ நகரிலே என் மகள் செல்வி அருள்செல்விக்கும், மலேசியா கே.வேலு_சாரதா ஆகியோரின் செல்வன் பாலகுருவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியும் அதன் தொடர்பான கருத்தரங்குகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மணவிழாவிற்கு, என்றும் அன்னை என்று என்னால் மதிக்கப்படும் திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மணமக்கள் அருள்செல்வி – பாலகுரு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.
மணவிழாவிற்கு அருமை நண்பர்கள் பாரிஸ் சுசீலா, இலண்டன் ஜெயராம், நியூயார்க் அமுதா, நியூஜெர்சி ராஜரத்தினம், அட்லாண்டா ஜியார்ஜியா, டாக்டர் நல்லதம்பி குடும்பத்தினர், டெக்ஸ்சாஸ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் திரு.தில்லை ராஜா குடும்பத்தினர், எம்.எம்.ராஜ் குடும்பத்தினர், இ.சாய்.வேதமுத்து, விஸ்கான்சில் பல நண்பர்கள் மற்றும் டாக்டர் திரு.சேனாபதி குடும்பத்தினர், ஒகியோ தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் திரு.ராஜேந்திரன் குடும்பத்தினர், டாக்டர் அரசு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பலரும் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.
சோம.இளங்கோவன் ஆசிரியரின் மகள் அருள்செல்வி – பாலகுரு திருமணத்தை நடத்தி வைக்கும் காட்சி உடன் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மகள் இணையேற்பு விழாவில் கலந்து கொண்ட இரு குடும்பத்தினர்
இல்லினாய்ஸ் மாநிலத்தின் நீதிபதி மணவிழாவிற்கு வருகைபுரிந்து, மணமக்கள் இருவருக்கும் சம்மதமா என்று கேட்டு, அந்நாட்டு முறைப்படி மணவிழா நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவிலேயே முதன்முதல் நடக்கும் சுயமரியாதை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னும் சிறப்பை ஏற்படுத்தி, தாலி அணிவிக்காமல் மாலை மாற்றி மோதிரம் அணிவித்து, தந்தை பெரியார் அவர்களின் ஒப்பந்த விழா உறுதிமொழியை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் கூற, மணவிழா இனிது நடைபெற்றது.
இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்களுடன் மணமக்கள் மற்றும் ஆசிரியர்.
இம்மண விழாவினை அமெரிக்க தமிழர், அன்பர்கள் அனைவருமே அறிமுகப் படுத்தினார்கள். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அன்பர்களும் மற்றும் டாக்டர்கள், பொறியியல் விஞ்ஞான வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் வந்து வாழ்த்துக் கூற மணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்காவில் கடும் உழைப்பால், சிக்கனத்தால், ஈட்டிய பொருளால் எல்லா செலவுகளையும் மணமக்கள் தாங்களே செய்துகொண்ட புதுமை அங்குள்ள தமிழர்களையும், அமெரிக்கர்களையும் பெரிதும் கவர்ந்தது! சிகாகோ இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியார் போல் உடை அணிந்து நன்றிகூறிட, விழா இனிது நிறைவேறியது.
டாக்டர் சேவியர் ரோஜ் இனிய குரல் படைத்த ஈழத்தமிழர் அய்ங்கரன், ஈழத்திற்குச் சென்று வந்த அவருடைய அண்ணன் திரு.பாஸ்கரன், திருமதி.ரேவதி நடேசன், சிகாகோவின் இசைச் சித்தர் ராமன் ஆகியோரின் இன்னிசை விழாவுடன் மணவிழா இனிதே நடந்தேறியது.
தமிழகத்திலிருந்தும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த வாழ்த்துத் தந்திகள், கடிதங்கள் அனைத்தும் மேடையில் படிக்கப்பட்டன. அமெரிக்காவில் முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது வரலாற்றில் பதிவானது.
மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, சடங்கு, சம்பிரதாயம் என்கிற முறையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை அறிவாசான் தந்தை பெரியார் அகற்றி, சமமான முறையில் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டு ஒத்த கருத்துடையவர்களாக -_ நண்பர்களாக வாழ வேண்டும் என்றார். ஆண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் இருக்கின்றதோ அந்த அளவுக்கு பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் சிலாங்கூர் மாநிலத் தலைவர் ரே.கோ.ராசு உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி உரைநிகழ்த்தினார்கள்.
உச்சநீதிமன்ற தடை ஆணையை தீயிட்டு எரிக்க கழகத்தினருடன் செல்லும் ஆசிரியர்.
மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்ற நம் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிலைகண்டு, பார்ப்பனர் கொதித்துக் கிடக்கின்ற நிலையில், மண்டல் குழுவின் செயலாக்கத்தினைத் தடுத்து நிறுத்த பார்ப்பனர்கள் தங்கள் இறுதி முயற்சியாக உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.
நீதிபதி
ரங்கநாத் மிஸ்ரா
1.10.1990 அன்று நான், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கழக கொள்கைப் பிரச்சார பயணங்களை முடித்துக்கொண்டு சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தேன். கழக நிருவாகிகள், தோழர்கள், தோழியர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து, 4.10.1990 அன்று சென்னை பெரியார் திடலில், “மண்டல் பரிந்துரையும் உச்சநீதிமன்றத் தடையும்’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழக சட்டத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞர்கள் த.வீரசேகரன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு நான் உரையாற்றும்போது, பார்ப்பன சதி அடங்கியிருப்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன்.
உச்சநீதிமன்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்.
10.10.1990 அன்று உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. என் தலைமையில், சென்னையில் வீரர்கள் அணிவகுத்து எழுச்சி முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு தடை ஆணையைக் கொளுத்துவதற்கு இளைஞர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வந்தனர். அய்யா சிலைக்கு மாலை அணிவித்தோம். எங்களை போலிஸ் தடுத்தது. உடனே உச்ச நீதிமன்ற தடை ஆணையை உணர்ச்சி முழக்கங்களிடையே தீயிட்டுக் கொளுத்தினோம். தோழர்கள் கட்டுக்கோப்பாக ஆணையை எரித்தனர். நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம். தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது. உச்சநீதிமன்ற தீர்ப்பு சாம்பலானது. ஏற்கெனவே, தலைமை நிலையத்தின் சார்பில், தடை ஆணையை எரித்து அதன் சாம்பலை அரைகுறையாக எரிக்கப்பட்ட பகுதியை அஞ்சல் உறையில் போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அந்த முகவரி:
HON’BLE JUSTICE,
RENGANATH MISRA,
CHIEF JUSTICE,
SUPREME COURT OF INDIA,
NEW DELHI.
போராட்டத்துக்குப் போகும்போதே மேற்கண்ட முகவரியை எழுதி அஞ்சல் உறையைத் தயாராக எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.
10.10.1990 அன்று சுப்ரீம் கோர்ட் ஆணையைக் கொளுத்தும் முதற்கட்டப் போராட்டத்தை அறிவித்து இருந்தேன். மேலும், நாம் ஒவ்வொருவரும் ஒரே அணியில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் இன்றி இடஒதுக்கீடு பாதுகாப்புப் படை அணி (Reservation Protection Force -RPF) என்னும் படையை விரைவில் அமைத்திடவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
12.10.1990 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா; புரட்சிக்கவிஞர் நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்க குறுகிய கால பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றேன். இன்று காலை ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் சிங்கப்பூர் பயணமானேன். விமான நிலையத்திற்கு வழக்கறிஞர் கோ.சாமிதுரை, தலைமைக் கழக செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.
13.10.1990 அன்று சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் இந்த விழா சிறப்புற நடைபெற்றது. விழாக்குழு தலைவர், தமிழ் நெறிக் காவலர் அ.விக்டர் விழாவுக்கு தலைமை தாங்கினார். விழாக்குழு செயலாளர் மீ.முருகுசீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில், புரட்சிக்கவிஞர் பாடல் நிகழ்ச்சிகளும், பாடல்களுடன் நடன நிகழ்ச்சிகளும், புரட்சிக்கவிஞர் எழுதிய நாடகமும் இடம்பெற்றன.
(நினைவுகள் நீளும்)