சிகரம்
மந்திர தேசத்தில் அஸ்வபதி என்னும் அரசன் ஆண்டு வந்தான். பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு சாவித்திரி எனப் பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்.
சாவித்திரி மங்கைப் பருவத்தை அடைந்தபோது அரசன் அவளுக்குத் திருமணம் செய்ய விரும்பினான். தன் மகளைத் தனியே அழைத்து அவள் மனத்தில் யாரையாவது விரும்பியிருக்கிறாளா என்பதைக் கேட்டான். சாலவ தேசத்தரசன் சத்தியவானே தனக்குக் கணவனாக வர வேண்டுமென்று விரும்புவதாகக் கூறினாள் சாவித்திரி.
அஸ்வபதி தன் மகளின் உள்ளக் கிடக்கையை நாரதரிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட நாரதர் திடுக்கிட்டார்.
“அஸ்வபதி, வேடிக்கையாக இருக்கிறதே. சத்தியவானுக்கு இன்னும் ஓராண்டுதான் ஆயுள் இருக்கிறது. மேலும் அவனுக்கு இப்போது நாடு ஏது? சத்துருக்களிடம் நாட்டை இழந்துவிட்டு பார்வையற்ற தந்தையோடு கானகத்திலல்லவா இருக்கிறான். உலகத்தில் வேறு அரசர்கள் இல்லையா?’’ என்று கேட்ட நாரதர்.
அஸ்வபதி மகளை அழைத்து நாரதர் கூறியதைத் தெரிவித்து அவள் விருப்பம் நிறைவேறக் கூடியதல்ல என்பதைச் சொன்னான். வேறு அரசகுமாரனைக் குறிப்பிட்டால் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.
“அப்பா, என் உள்ளத்தில் அவரையே மணாளனாக வரித்த பிறகு இன்னொருவருக்கு எப்படி இடம் அளிக்க முடியும்? அவரைப் பற்றி என் தோழிகள் எத்தனையோ சிறப்பாகக் கூறியுள்ளார்கள். அதைக் கேட்டு அவரையே கணவனாக அடைவதென்று முடிவு செய்துவிட்டேன். எப்படி இம்முடிவை மாற்றுவது? அது நேர்மையுமல்ல’’ என்றாள் சாவித்திரி.
“கண்ணே, அவனுக்கு ஜீவியமே ஓராண்டுதானே!’’ என்றான் அரசன் வருத்தத்துடன்.
“எப்படியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்றாள் சாவித்திரி.
ஒரு நல்ல சுப முகூர்த்தத்தில் சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தேறியது.
ஒருநாள் சாவித்திரி தன் கணவன் சத்தியவானுடன் கனி கொய்துவர காட்டுக்குச் சென்றாள். அவர்கள் இருவரும் பழங்களைப் பறித்துக் கொண்டு, சமித்து, தருப்பை முதலானவற்றைச் சேர்த்துக் கொண்டும் வரும்போது சத்தியவான் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும், எங்காவது மரநிழலில் ஒதுங்கலாமென்றும் தெரிவித்தான். சாவித்திரி கணவனை அழைத்துக் கொண்டு மர நிழலை அடைந்தாள். அங்கே சென்றதும் அவன் மயக்கமாக வருகிறதென்று அவள் மடியில் படுத்தான். அந்த க்ஷணமே அவன் ஆவி பிரிந்துவிட்டது.
மார்பிலே வாடாத மலர் மாலையோடும் கையில் தண்டமும் பாசமும் கொண்ட எமதர்மராஜன் நெருங்கி வந்து சத்தியவானின் உயிரைக் கவர்ந்து கொண்டு புறப்பட்டதைக் கண்டதும் சாவித்திரி, ‘தேவ புருஷா!…’ என்று எமனை அழைத்தாள்.
எமதர்மராஜன் அவளைத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கணவனின் உடலை மடி மீதிலிருந்து நகர்த்தித் தரையில் கிடத்திவிட்டு எழுந்திருந்தாள்.
“தேவ புருஷா! என் கணவரின் உயிரைக் கவர்ந்து செல்லக் காரணம் என்ன?’’ என்று கேட்டாள்.
“பெண்ணே, அவன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. மிகவும் தருமவானான அவனை நானே அழைத்துச் செல்ல வந்தேன்’’ என்றான் தர்மராஜன்.
“அவரை என்னிடமே விட்டுவிடு’’ என்று கேட்டாள் சாவித்திரி.
தர்மராஜன் அதற்கு இணங்காது சென்றான். அவனைப் பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, “தர்மராஜா! என் நிலையைப் பார்! நான் என்ன பாபம் செய்தேன்? எனக்கு ஏன் இந்தத் துன்பம்? என் மீது இரக்கம் கொண்டு அவரை விட்டுவிடு’’ என்று கேட்டாள்.
“சத்தியவானின் பூலோக வாழ்வு முடிந்துவிட்டது. இனி அவன் இங்கிருக்க முடியாது’’ என்றான் தர்மராஜன்.
“அப்படியானால் நானும் வருகிறேன். என்னையும் அவரோடு கூட்டிச் செல்! கற்புடைப் பெண்டிர் கணவனை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்களே!’’ என்றாள் சாவித்திரி.
“உன்னை அழைத்துச் செல்வது முடியாது. உனக்கு இன்னும் பூலோக வாழ்வு முடிவு பெறவில்லையே? நீ திரும்பிச் செல்’’ என்றான் தர்மராஜன்.
சாவித்திரி அப்போதும் விடாது அவனைப் பின் தொடர்ந்தாள்.
“சாவித்திரி, உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள். நான் அளிக்கிறேன்’’ என்றான் தர்மராஜன்.
சாவித்திரி, தன் மாமனாருக்குப் பார்வையும் இழந்த நாட்டையும் அளிக்குமாறு கோரினாள். தர்மராஜன் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்து அவளைத் திரும்பிச் செல்லுமாறு கூறினான்.
சாவித்திரியோ அவனைப் பின் தொடர்ந்து வந்தாள்.
“இன்னொரு வரம் வேண்டும் என்று கேட்டாள்.
“ஒன்றென்ன? இரண்டு வரம் கேள், தருகிறேன். என்னைப் பின் தொடர்ந்து வருவதை நிறுத்தி, உன் இருப்பிடம் திரும்பு’’ என்றான் தர்மராஜன்.
“என் தந்தைக்குப் புத்திரர் இல்லை. பிள்ளை பிறக்க அருள வேண்டும்’’ என்று கேட்டாள் சாவித்திரி.
“நூறு பிள்ளைகள் பிறந்து மேன்மையோடு வாழ்வார்’’ என்று அருளினான் தர்மராஜன்.
“அடுத்தது, நான் கற்பிலிருந்து வழுவாமல், பிள்ளைகளோடும் மாமனார் மாமியாரோடும் மகிழ்ச்சியோடு வாழ அருள வேண்டும்.’’ என்று வரம் கேட்டாள்.
சாவித்திரியின் வரத்தைக் கேட்டுத் தர்மராஜன் அசந்துபோய்விட்டான். சாமர்த்தியமாக அவள் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்தபோது அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.
“பெண்ணே, நீ என்னை வெற்றி கொண்டு விட்டாய். உன் கணவன் உயிர் பெற்று எழுவான். நீங்கள் இருவரும் நீண்டகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவீர்கள்’’ என்று அனுக்கிரகித்து சத்தியவானின் உயிரை விட்டு விட்டுச் சென்றான் தர்மராஜன்.
கணவனின் உடலைக் கிடத்தியிருந்த மரத்தடிக்குத் திரும்பிய சாவித்திரி ஜலத்தை எடுத்து வந்து அவன் முகத்திலே தெளிக்க, சத்தியவான் தூக்கத்திலிருந்து எழுபவன் போல எழுந்திருந்தான்.’’ என்கிறது இந்துமதம். (சிவபுராணம்)
மேற்கண்டவாறு இந்து மதம் கூறுவது எந்த அளவிற்கு அறிவுக்குப் பொருந்தாத செய்தி என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உயிரை எமன் வந்து பறித்துச் செல்கிறான் என்பது அறிவியலுக்கு ஏற்ற கருத்தா? எமன் என்று ஒருவன் உண்டா? உலகில் பல இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். அத்தனை இடங்களுக்கும் எமன் நேரில், ஒரே நேரத்தில் சென்று உயிரைப் பறிக்க முடியுமா?
உயிர் என்பது ஓர் ஆற்றல். அது உடலைவிட்டு விலகுமேயன்றி அதை யாரும் தனியே பிரித்து எடுக்க முடியாது.
அப்படி உடலை விட்டு உயிர் விலகிவிட்டால் அது மீண்டும் உடலில் சேரவே சேராது. இது அறிவியல் உண்மை. ஆனால், சத்தியவான் உடலில் இருந்து பிரிந்துபோன உயிர் மீண்டும் உடலில் சேர்ந்து அவன் உயிர் பெற்றான் என்பது அறிவியலுக்கு அறவே எதிரான கருத்து. இப்படி அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அது மட்டுமல்ல; இந்து மதக் கருத்துப்படி பிரம்மா, தான் படைக்கும்போது ஒருவரின் ஆயுளைத் தீர்மானிக்கிறார். ஆயுள் முடிந்ததும் உயிரைக் கவரும் பொறுப்பு மட்டுமே எமனுடையது. அப்படியிருக்க சத்தியவானுக்கு ஆயுளை அதிகரிக்கும் உரிமை இல்லை. எனவே, இக்கருத்து அறிவியலுக்கு எதிரானது, இந்து மதக் கருத்துக்கும் எதிரானது.
(சொடுக்குவோம்…)