கே: அடிப்படை சனநாயக முறைப்படி கடிதம் எழுதுவது (ஒரு நாட்டின் குடிமகன் என்கிற முறையில்) தேசத் துரோகக் குற்றமா?
– முகம்மது, மாதவரம்
ப: பிரதமருக்கு, (வாக்களித்த _ அல்லது வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே பிரதமரான அவருக்கு) ஜனநாயக நாட்டில் குடிமக்கள் கடிதம் எழுதி, தங்கள் கருத்துகளைச் சுட்டிக்காட்டுவது எவ்வகையிலும் தவறு அல்ல; அது கருத்துச் சுதந்தர உரிமை. நமது பிரதமர் மோடி, மனதின் குரல் (‘மன்கிபாத்’) வானொலியில் அடிக்கடி பேசுபவர். அப்படி இருக்கையில் கடிதம் எழுதுவது எப்படி தேசத் துரோகக் குற்றம் ஆகும்? நமக்குப் புரியவில்லை! தன்வினை தன்னைச் சுடும்.
கே: தமக்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்க நினைக்கும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் மோடி, அமித்ஷா போன்றவர்கள் நாட்டுப்பற்று உள்ளவர்களா?
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
ப: ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி மாநிலங்கள் தனியே இருக்காமல் _ அதாவது கூட்டாட்சி இல்லாமல் _ ஒற்றை அரசு (Unitary State) ஆக மட்டுமே நாடு இருக்க இப்படிச் செய்கிறார்கள். இது ஒரு ‘ஸ்பெஷல்’ நாட்டுப்பற்று!
கே: ஜனநாயக நாட்டில், ‘உம் என்றால் வனவாசம்; இம் என்றால் சிறைவாசம்’ எதைக் காட்டுகிறது?
– பா.ஆறுமுகம், மாயவரம்
ப: ‘ஜனநாயகம்’ காணாமற்போய்விட்டது என்பதையே காட்டுகிறது!
கே: சென்னை உயர்நீதிமன்றம் இராதாபுரம் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டபின், அதற்கு முடிவைச் சொல்ல உச்சநீதிமன்றம் தடை விதிப்பது சட்டப்படியா? கட்டாயத்தாலா?
– தா.கன்னியப்பன், தாம்பரம்
அப்பாவு
ப: அண்மைக்காலத்தில் நீதிமன்றங்களில் புரியாதபடி சில தீர்ப்புகள் வருகின்றன! நடிகர் சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி, நடந்து முடிந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மற்றொரு தீர்ப்பு _ பல மாதங்கள் வாக்குகள் எண்ணுவது (ஊறுகாய் ஜாடி, அதுபோல). இராதாபுரம் வாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்ற ஆணைப்படி நடந்தது. ஆனால், தீர்ப்பு _ எண்ணுவது, அறிவிப்பது, முடிவுக்கு எதிராகத் தடை. நமது சிற்றறிவுக்குப் புரியவில்லை! எல்லாம், புரியாத புதிர்களாக மக்களுக்கு இருக்கிறதே!
கே: 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கல்வியறிவுடன் வாழ்ந்தனர் என்று பெருமைப்படுவோர் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைப் பற்றி சிந்திக்க மறுக்கிறார்களே, ஏன்?
– பாவேந்தன், சென்னை
ப: வெற்றுப் பழம்பெருமை பயன்படாது. வீழ்ந்தவர் எழ எது தடை என்பது பற்றி அறிந்து, தடைகளைத் தகர்த்தாக வேண்டும். அது முக்கியம் ஆகும்! கல்வி அறிஞர் க.ப.அறவாணன், ‘தமிழர் அடிமையானது எவ்வாறு?’ என்னும் நூலில் கடந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவர், களப்பிரர் காலங்களிலும், அதன்பின் வந்த சிற்றரசர்கள் காலத்திலும் தமிழர் _ திராவிடர் _ கல்வி எட்டாக்கனி என்பதை, தெளிவாக விளக்கியுள்ளார்; படித்துத் தெளிவு பெறுங்கள்.
கே: அடிப்படை உரிமைகளை அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தியும், மத்திய – மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது எதைக் காட்டுகிறது?
– தென்றல், பெரம்பூர்
ப: உறுதிமொழி எடுத்த அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு நடக்காமல், அதனைக் காலடியில் போட்டு மிதிக்கிறது என்பதையே காட்டுகிறது!
கே: ஆர்.எஸ்.எஸ். தலைமை இடத்தை மிகப்பெரிய முதலாளிகளான டாடா, சிவ் நாடார் போன்றவர்கள் அணுகுவது ஏன்?
– சித்தார்த், ஆவடி
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில்
சிவ் நாடார் கலந்து கொண்ட காட்சி
ப: தொழிலதிபர்கள் அனைவருமே அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்தாம்! சலுகை, வசதி பெற மூலஸ்தானக் கடவுளர்களை வேண்டினால்தான் உற்சவ மூர்த்தியின் கிருபா கடாட்சம் கிடைக்கும் என்பதால்!
கே: கீழடி அகழாய்வு முறையாக நடைபெறுகையில், இந்தியாவின் வரலாறு மாற்றி எழுத வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தங்களின் கருத்து என்ன?
– நாராயணன், புதுச்சேரி
கீழடி
ப: இந்தியாவின் வரலாற்றைமாற்றி எழுதும் முயற்சி, எப்போதெல்லாம் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் வருகிறதோ, அப்போதெல்லாம் நடைபெறுவது வாடிக்கைதானே! முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராக இருந்தபோதே, சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் காளை மாட்டை _ ஆரியக் குதிரையாக மாற்றியது அம்பலமானதே! வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பதே முக்கியம்!