“கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு, விடா முயற்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற நவீன பெண்களையே பெண்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’’ என தந்தை பெரியார் (குடிஅரசு 22.1.1933) எ-ழுதி பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டார். அவ்வகையில், இன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்குப் பயந்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கும் ‘மல்கங்கிரி’ என்று பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அனுப்பிரியா, தான் ஆசைப்பட்டபடி தன் கனவான விமான ‘பைலட்’ ஆகியிருக்கிறார். இதன் மூலம், ‘இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட்’ என்கிற சிறப்பையும் பெற்றுள்ளார்.
உழைப்பும் விடாமுயற்சியும் வெல்லும் என்பதற்கும், பெண்ணால் ஆணுக்கும் மேலாய் சாதிக்க முடியும் என்பதற்கும் கண்முன் எடுத்துக்காட்டாக ஆகியிருக்கிறார் இந்த 23 வயது அனுப்பிரியா மதுமிதா லக்ரா. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி இருந்தாலும், இந்தியாவில் இன்னும் ஒருசில இடங்களில், அடிப்படை வசதிகூட இல்லாமல்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைவாழ் மக்களும் பழங்குடியின மக்களும் அதிலும் அந்த இனங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழல்தான் அனுப் பிரியாவுக்கும் இருந்தது. தங்குவதற்கு சரியான வீடு இல்லாமல், பாழடைந்த ஒரு வீட்டில்தான் வசித்து வருகிறார் அனுப்பிரியா. இவருடைய தந்தை மரினியாஸ், அதே பகுதியில் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். அம்மா ஜிமஜ் யாஸ்மினுக்கோ முதலில் மகளின் ஆர்வத்தை எண்ணி மகிழ்ந்தாலும், முடியுமா? என்று அஞ்சினார். மல்கங்கிரியில் பிறந்து வளர்ந்த அனுப்பிரியா, மிஷினரி பள்ளியிலும், அருகில் இருந்த கோரபுட் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் பொறியியல் படிப்பதற்காக புவனேஸ்வரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘பைலட்’ பற்றி தெரிந்து, தானும் ஒரு ‘பைலட்’ ஆக விருப்பம் ஏற்பட்டிருக்கிறது இவருக்கு. அதனால், தான் படித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரியிலிருந்து வெளியேறி, அரசு விமானப் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து விமானிக்கான பயிற்சியைப் பெற ஆரம்பித்தார் அனுப்பிரியா.
‘பைலட்’ பயிற்சிக்கான கட்டணம் கட்டுவதற்குக்கூட அவரிடம் இல்லை. கடன் வாங்கியும் உறவினர்களிடம் உதவி கேட்டும்தான் பணத்தைக் கட்டியிருக்கிறார். ‘கமர்ஷியல் பைலட்’ உரிமம் பெறுவதற்காக அனுப்பிரியா பல தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. அதற்கு பணம் தடையாக இருக்காத வகையில் கஷ்ட சூழல்களை ஏற்றுக் கொண்டு, மகளின் இலட்சியத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் அனுப்பிரியாவின் பெற்றோர்.
“அனுப்பிரியா தன்னுடைய இலக்கை அடையப் போராடிச் சாதித்தது, இந்த மாநிலத்துக்கே பெருமை தருகிறது’’ என்று ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ஆதிவாசி மற்றும் பழங்குடியினத் தலைவர் நிரஞ்சன் உள்பட பலரும் இதைப் பெருமைப்பட உணர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். தற்போது ஒரு தனியார் ஏர்லைன்ஸில் இணை பைலட்டாக பணியில் சேர்ந்திருக்கிறார் அனுப்பிரியா! மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் இனத்தில் இருந்து, அதுவும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புழங்கும் பகுதியில் இருந்து இப்படிச் சாதித்திருக்கும் அனுப்பிரியாவுக்கு நாடு முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தகவல் : சந்தோஷ்