நேற்று இல்லாத மாற்றம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் காதல் தொடராததால்தான் பல திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. அப்படித் தோல்வியில் முடியாமல் வெற்றிகரமாய்த் தொடர ஓர் அணுகுமுறையைக் கையாள்கிறது இக் குறும்படம். இது இன்று மிகவும் அவசியமானது. கதைப்படி காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர் _ நாயகியும் நாயகனும். அதில் நாயகிக்கு அதிக வருவாய் உள்ள பணி. நாயகனுக்குக் குறைவான சம்பளம். இது போதுமே இந்தச் சமூகத்திற்கு! மனைவி சம்பளத்தில் கணவன் வாழ்வதா? என்று பேசிப் பேசியே இருவரின் உள்ளத்தில் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி, உசுப்பேத்தி குடும்பத்தைப் பிரித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்! இங்கும் அதுதான் நடக்கிறது. இதனால் காதல் முறிந்துபோகும் நிலையும் ஏற்படுகிறது. ஆனால், நண்பர்களின் நல்ல ஆலோசனைகளாலும், கணவன் சமூகத்தால் தவறான முடிவுகளை எடுத்ததாக ஒப்புக் கொள்கிறான். செய்த தவறை சரிசெய்ய, திருமணத்திற்கு முன்னதாக காதலியைக் காதலித்தது போலவே மனைவியிடம் உளப்பூர்வமாக மீண்டும் ஒரு முறை தன் காதலை வெளிப்படுத்துகிறான். மனைவியும் கணவனின் காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் வழக்கம் போல வாழ்கின்றனர். ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! பெண் என்றால் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்னும் வரையறைகளைத் தூக்கிப்போட்டு உடைக்கிறது ‘நேற்று இல்லாத மாற்றம்’ என்னும் குறும்படத்தின் கதை. இக்குறும்படத்தை சுரேசுகுமார் இயக்கியுள்ளார்.