அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா?

செப்டம்பர் 16-30 2019

சிகரம்

சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டனர். சந்திரன் தன் மனைவியர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக அன்பு காட்டவில்லை. அவர்களுள் ரோகிணி என்பவளிடமே அவனுக்கு அதிகப் பிரியம். அவளிடமே அவன் அதிகமாக இருக்கத் தொடங்கினான்.

இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. கணவனிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்து தக்ஷனிடம் முறையிட்டனர். தக்ஷன் சந்திரனை அழைத்துப் பேசினான். நற்குலத்தில் பிறந்த கலாநிதி எனப் பெயர் கொண்டுள்ள அவன் அவ்வாறு மனைவியர் இருபத்து ஏழு பேரில் ஒருத்தியிடம் மட்டும் அதிகப் பிரியம் கொண்டிருப்பது அழகல்ல என்று எடுத்துரைத்து அனேக புத்திகள் சொன்னான்.

சந்திரனோ மாமனாரின் வார்த்தைகளைக் கொஞ்சமும் ஏற்கவில்லை. தன் போக்குப்படியே நடந்து வந்தான். இதைக் கண்ட தக்ஷன் பெரிதும் கோபம் கொண்டான். நியாயமற்ற முறையில் சந்திரன் நடந்து கொள்வதை விரும்பாத தக்ஷன் அவன் கலைகள் குறைய வேண்டுமென்று சாபம் கொடுத்துவிட்டான்.

தக்ஷன் அளித்த சாபம் அந்தக் கணமே சந்திரனைப் பிடித்தது. சந்திரனின் கலைகள் குறையத் தொடங்கியதும் அவன் பிரகாசம் மங்கி விட்டது. சந்திரனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு தேவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும் பிரம்மதேவனிடம் சென்று சந்திரனை மன்னித்து அவன் சாபம் நீங்க அருளுமாறு வேண்டினர்.

“தேவர்களே! தக்ஷன் கொடுத்த சாபத்தை மாற்றும் சக்தி எனக்கில்லை. சந்திரன்மீது தவறு இருக்கும்போது நாம் -குறுக்கிடுவது நியாயமல்ல. சந்திரனின் போக்கே இப்படித்தான். முன்னொரு முறை பிரகஸ்பதியின் மனைவியான தாரையிடம் மோகம் கொண்டு அவளை அடைய வேண்டுமென்று விரும்பி கவர்ந்து சென்றான். அத்துடன் பிரகஸ்பதியின் கோபம் தன்னை ஒன்றும் செய்யாதிருக்க அவரோடு சண்டைக்கு வந்து விட்டான். தேவர்கள் ஓடிச்சென்று அவன் தந்தையான அத்தி முனிவரை அழைத்து வந்தனர். அவர் வந்து எத்தனையோ நல்ல வார்த்தைகள் சொன்னதும் தாரையைக் கொண்டு வந்து பிரகஸ்பதியிடம் விட்டான். அவரோ தாரை கருவுற்றிருக்கிறாள் என்றும், களங்கமுடையவளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கோபித்தார். குழந்தை பிறந்ததும் தாரையைப் புனிதமாக்கி பிரகஸ்பதியிடம் சேர்ப்பிப்பதற்குள் பெரும் கஷ்டமாகி விட்டது. தவறுக்காகத் தண்டனை அனுபவித்தால்தான் புத்தி வரும் என்றார் பிரம்மதேவன்.

“பிரபோ, அவ்வாறு சொல்லக்கூடாது. சந்திரனின் கலைகள் குறைவதால் பூலோகவாசிகள் கஷ்டப்பட நேரும். அவன் செய்த தவறுக்குத் தகுந்த பரிகாரம் சொன்னால் அதைச் செய்யும்படி அவனிடம் கூறுகிறோம்’’ என்று வேண்டினர் தேவர்கள்.

“பிரபாச க்ஷேத்திரத்துக்குச் சென்று சிவலிங்கத்தைப் பூஜை செய்து மிருத்தியுஞ்சய மந்திரத்தை ஜபித்து வருவானாகில் பகவான் அவனுக்கு அருளக்கூடும்’’ என்று தெரிவித்தார் பிரம்மதேவன்.

தேவர்கள் சந்திரனை அழைத்துப் பிரபாச க்ஷேத்திரம் சென்று சிவபூஜை செய்யுமாறு தெரிவித்தனர். சந்திரன் அவர்கள் கூற்றுப்படி பிரபாச க்ஷேத்திரத்தை அடைந்தான். அங்கே உள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி நியம நிஷ்டைகளோடு சிவலிங்கத்தில் பகவானைத் தியானித்துப் பூஜைகள் செய்தான். பின்னர் நிர்மலமான உள்ளத்தோடு மிருத்தியுஞ்சய மந்திரத்தை ஜபித்து வந்தான்.

ஆறு மாதங்கள் சென்றன. ஈசன் மகிழ்ச்சியடைந்தவராய் சந்திரன் முன் தோன்றினார்.

“சந்திரா, உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்டார்.

“பிரபோ, தக்ஷப் பிரஜாபதியின் சாபம் காரணமாக நான் கலைகள் குறைந்து பிரகாசமின்றி இருக்கிறேன். என் பிரகாசம் முன்னைப் போல் ஆக அருள வேண்டும்’’ என்று கோரினான் சந்திரன்.

“அந்தண சாபம் மாற்ற முடியாதது அன்றோ! இருப்பினும் அதில் ஒரு மாற்றம் செய்கிறேன். உன் கலைகள் பதினைந்து தினங்களுக்குக் குறைந்துகொண்டே வரும். பின்னர் பதினைந்து தினங்களுக்கு அது வளர்ந்தே வரும்’’ என்று அனுக்கிரகித்தார்’’ என்கிறது இந்து மதம்.

நிலவு என்பது பூமியைப் போன்று ஒரு கோள். 1969இல் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் அதில் இறங்கி முதன்முதல் நடந்தார். தற்போது சந்திரயான் விண்கலம் நிலவில் இறங்கியுள்ளது. அறிவியல்படி அது கல், மண் கலந்த ஒரு நிலம்.

அப்படிப்பட்ட நிலத்திற்கு 27 மனைவிகள்; அவன் ஒருத்தி மீது மட்டும் ஆசை கொண்டான்; அதனால் சாபம் பெற்று, அவன் உடல் குறைந்துகொண்டே வந்தது என்று இந்து மதம் கூறுவது அறிவியலுக்குப் புறம்பான அசல் மூடக்கருத்து அல்லவா?

நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. அது எப்போதும் ஒரே நிலையில்தான் உள்ளது. இதுவே அறிவியல் உண்மை. அப்படிப்பட்ட நிலவு தேய்ந்து, பின் வளருவதாகக் கூறுவது அறிவியலுக்கும் உண்மைக்கும் எதிரான கருத்து. இப்படிப்பட்ட மூடக் கருத்துகளை, அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத கருத்துகளைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

மண்ணாலான கோள்களை மனிதர்களாகக் கூறும் மடமை நிறைந்த இந்துமதம் அறிவியலுக்கும், உண்மைக்கும் புறம்பான மூடமதம் என்பது விளங்கவில்லையா?

* * *

எமன் எருமைக்கடா மீது வருவானா? விமானத்தில் வருவானா?

“புராணக் கதைகளைச் சொல்பவரைத் தகுந்த முறைப்படி கவுரவித்து அவரைத் திருப்திப் படுத்துபவர்கள் பிரம்மலோகத்தில் நித்திய வாசத்தை அடைவார்கள்.

இதனை அறிந்த தராபாலன் என்னும் அரசன், தினமும் இரவிலே சிவாலயத்திலுள்ள மண்டபத்தில் புராணம் சொல்லப்பட்டபோது,  குடிமக்களோடு பக்திச் சிரத்தையுடன் கேட்டு வந்தான்.

ஆறு மாதங்கள் சென்றன. அரசனது காலதசை முடிந்துவிட்டது. அவனை அழைத்துவர யமலோகத்திலிருந்து விமானம் வந்து சேர்ந்தது. திவ்விய ரூபத்தைப் பெற்ற அரசனை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றது என்கிறது (சிவபுராணம்) இந்து மதம்.

எமன்தான் எல்லார் உயிரையும் கொண்டு செல்கிறான். அவ்வாறு அவன் கொண்டுசெல்ல எருமைக்கிடாவில் வருவான் என்று இந்துமதம் கூறுகிறது. அதே இந்துமதம் எமன் விமானத்தில் வருவான் என்கிறது. ஆக, எமன் வாகனம் எருமையா? ஏரோபிளேனா? என்பதிலே இந்து மதத்தில் முரண்பாடு. உண்மை என்றால் ஒரே மாதிரி இருக்கும்; கட்டுக்கதை என்பதால் கண்டபடி கண்ட இடத்தில் உளறி வைத்துள்ளனர் என்பது இதிலிருந்து விளங்குகிறது. அறிவியல்படி, இறப்பு என்பது உயிர்த்தன்மையை (ஆற்றலை) உடல் இழப்பது. இதில் எமனுக்கு என்ன வேலை? எனவே, அறிவியல் உண்மைக்கு எதிராய் கருத்துக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *