23.07.2019 தேதியிட்ட ‘The Hindu’ ஆங்கில நாளேட்டில், ‘What does it mean to oppose Brahmanism?’ என்ற தலைப்பில் இராஜீவ் பார்கவா என்பவர் எழுதிய கட்டுரை எல்லோரும் சிந்திக்க வேண்டியது. அக்கட்டுரையில் அவர், “இந்திய சட்ட அமைப்பில் – கொள்கையில் ஒருவர், அதை ஏற்று ஒத்துப் போவராகில் அவர் தன்னிச்சையாக பிராம்மணிய எதிர்ப்பாளராகி விடுகிறார்’’ என்றார்.
“கடந்த சில மாதங்களுக்கு முன், டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் சில அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது. அதில் 2017ஆம் வருடத்தில் பெங்களூரு மாவட்டத்தின் நகரங்களில் 210 வன்கொடுமைகளும், மற்றும் அதன் கிராமப் புறங்களில் 106 வன்கொடுமைகளும் நடந்தேறி உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தது. அதுபோல கேரளாவிலும் 883 வன்முறை சம்பவங்கள் ஜூன் 2016 மற்றும் ஏப்ரல் 2017க்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்தேறியுள்ளன.
மற்றொரு அறிக்கையின்படி 66% சதவிகித குற்ற வளர்ச்சி தலித்துகளுக்கு எதிரான வன்முறை குற்ற நிகழ்வுகள் 10 வருட கால அளவில் 2007 – 2017 நடந்தேறியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு சம்பவமாக ஏப்ரல் 12, 2019 அன்று கர்நாடகாவின் பத்ராவில் நீச்சலில் இறங்கிய தலித் சமூகத்தாரை சேர்ந்தவர்களை 200 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று, தலித்களைத் தாக்கி, அவர்களை மிரட்டி, விரட்டி, பத்ரா ஆறு உயர்ஜாதியினருக்கு மட்டும்தான் என்று பயமுறுத்தி தாக்கியுள்ளார்கள்.
சக மனிதனின் வன்கொடுமையினால், அப்பாவி தலித்துகள் குறி வைக்கப்பட்டு, தாக்கப்பட்டும், வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.
பிராமணியம்: அண்ணல் அம்பேத்கர் “பிராமனியத்தை எதிர்க்க ராட்சச பலம்வாய்ந்த இயக்கத்தினாலன்றி தலித்துகளுக்கு மீட்சியோ – விடுதலையோ இயலாதது’’ என்றார். மேலும் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல பிராமணியம் என்பது சுதந்திர வேட்கையை – சமத்துவத்தை – சகோதரத்துவத்தை முற்றிலுமாக ஒரு சாராருக்கு மறுக்கிறது – எதிர்க்கிறது. ஒருவர் நேர்மையான முறையில் தேசிய சட்ட அமைப்பை ஏற்று ஒப்புவாராகில் அவர் தன்னிச்சையாகவே பிராமணிய எதிர்ப்பாளராக ஆகிவிடுகிறார்.’’ என்ற கட்டுரையாளரின் கருத்து மிகச் சரியானதே!