மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். சிந்தனைக்கு விருந்தளித்து, செயல்படுத்தத் தூண்டும் அரிய கட்டுரைகளைத் தாங்கி, பகுத்தறிவுக் கருவூலமாக வெளிவந்திருக்கும் ஜூலை 16-31 இதழில் படிப்போரின் சிந்தனையை முதலில் கவருவது, தங்களின் தலையங்கமே! வெறும் 3 விழுக்காடே உள்ள உயர்ஜாதியினருக்கு, 10 விழுக்காடு ஒதுக்கி இருப்பது மாபெரும் மோசடி. ‘இதுசமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பது அரிது!’ என்று, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள காரியமாற்றி வருகிறார்கள். அஞ்சல் துறைக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளிலேயே எழுத வேண்டுமென்கிற மத்திய அரசு ஆணையே இதற்கொரு சான்று. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டும் இல்லையென்றால் இன்று தமிழ்நாடே, பார்ப்பனர்களின் கோட்டையாகி இருக்கும்.
அய்யா, அண்ணா, கலைஞர், ஆசிரியர், தளபதி ஆகியோரின் தலைமையே, தமிழர்களை ஒரு பெரிய கலாச்சாரப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. இதுவே உண்மை வரலாறு!
சித்திரை மாதம் தொடங்கி, பங்குனி மாதம் முடிய பண்டிகைகள் இல்லாத மாதங்களே கிடையாது. இதற்கிடையே, பல திருவிழாக்கள், அத்திவரதர் வசூல் வேட்டை என பண மழை பார்ப்பன குலத்தைச் செழிப்பாக்கிக் கொண்டே இருக்கிறது. மானமிகு மஞ்சை வசந்தனாரின் கட்டுரை அழகாக இதனை விளக்குகிறது. அய்யா பற்றி ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்யும் மோசடிப் பரப்புரையை உடைத்தெறிகிறது ‘நேயன்’ அவர்களின் கட்டுரை! இன்னும் பகுத்தறிவுக்கு உரமூட்டும் எழுத்தோவியங்கள், மருத்துவக் குறிப்புகள், கழகச் செய்திகள், கேள்வி – பதில்கள் அனைத்துமே கருத்துக் கருவூலங்கள். பாதுகாக்கப்பட வேண்டிய இதழ்கள் ‘உண்மை’ இதழ்களே!
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக்கருப்பூர்