திரைத்துறை வழி சமுதாய சீர்திருத்தம் செய்த கலைஞர்
குமரன் தாஸ்
கலைஞர் தனது 24ஆவது வயதிலிருந்து 87ஆவது வயதுவரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் தனது சமூக, அரசியல் செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே சினிமா பங்களிப்பையும் கருதியுள்ளார் என்பதை அவரது தொடர் செயல்பாடும், ஈடுபாடும் நமக்கு உணர்த்துகின்றன. சிலர் கலைஞரை ஆட்சிக் கட்டிலில் இல்லாத காலகட்டங்களில் எழுத்து, சினிமா என இயங்கியவராகக் குறிப்பிடுவர். ஆனால், நாம் அவரது கதை, வசனத்தில் வெளிவந்துள்ள (75) திரைப்படங்களின் காலவரிசைப் பட்டியலை பரிசீலிக்கும்போது ஆட்சியில் இருந்த, இல்லாதபோது என்ற வேறுபாடு பெரியளவில் இன்றி அவரது திரைப் பங்களிப்பு தொடர்ந்துள்ளதைக் காண்கிறோம்.
மிகச் சரியாக தனது வாலிபப் பருவத்தில் 24ஆவது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கலைஞர் அதன் வளர்ச்சி மாற்றங்களுடன் பயணித்து நான்கு தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணி செய்துள்ளார். இவ்வாறு நான்கு தலைமுறையுடன் பணி செய்தவர்கள் மிக மிகச் சிலரே ஆவர்.
உதாரணத்திற்கு தனது தந்தை வயதுடைய உடுமலை நாராயணகவி (1899-1981)யோடு பணி செய்யத் துவங்கியவர் தனது பேரன் வயதுடைய பா.விஜய் (1974) (‘இளைஞன்’ திரைப்படம் 2011) வரை இணைந்து பணி செய்திருக்கிறார். வெவ்வேறு அரசியல் போக்குடைய காலகட்ட சினிமாவில் பயணித்தபோதும் பிற சினிமாக்காரர்களைப் போல அந்த அந்தக் காலகட்டங்களில் மேலோங்கும் சமூக, அரசியல் போக்குகளோடு சமரசம் செய்துகொண்டு அதில் தங்களை கரைத்துக் கொள்வதைப் போலன்றி அதாவது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பையைப் போலன்றி எதிர்நீச்சலிடும் மீனைப்போல கலைஞர் உடன்பாடற்ற சமூக, அரசியல் போக்குகளின் மேலாதிகத்தை எதிர்த்து தனது கொள்கைகளை வசனங்களாக்கி திரையில் முழங்கினார்.
இது தந்தை பெரியார் கொள்கைகளில் அவருக்கு இருந்த பற்றுறுதியைக் காட்டுகிறது. அவர் பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளை மட்டுமின்றி ஜாதி, தீண்டாமைக்கெதிராக மிகத் தீவிரமான கதை, வசனங்களை எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இதனை அவரது இளமைப் பருவத்தில் அதாவது திராவிட இயக்க காலச் சினிமாவில் (குறவஞ்சி-1960, தாயில்லாப் பிள்ளை-1961) மட்டுமல்லாமல் தமிழ் சினிமா திராவிட, பொதுவுடைமைக் கருத்தியலைப் புறந்தள்ளி உலகமய, நிலவுடைமை, ஜாதியக் கருத்தியலைக் காட்சிப்படுத்தத் துவங்கிய 1980களின் இறுதிப் பகுதியில் (ஒரே ரத்தம்-1987) முன்வைத்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும்.
இறுதியாக கலைஞரின் ஒட்டுமொத்த திரைப் பங்களிப்பையும் காலவரிசைப்படி தொகுத்து நோக்கும்போது பார்ப்பனிய எதிர்ப்பில் (ராஜகுமாரி, மந்திரிகுமாரி) துவங்கி முதலாளியிய எதிர்ப்பில் (இளைஞன்) வந்து முடிவதைத் காண்கிறோம். இது அண்ணல் அம்பேத்கரின் ‘பார்ப்பனியமும் முதலாளியியமும் நமது எதிரிகள்’ என்ற புகழ்பெற்ற முழக்கத்தோடு இயைந்து போகிறது. இது தற்செயலான ஒன்றல்ல.
கலைஞரின் கலைப்பயணம் பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம், பெண் விடுதலை, மக்கள் விரோத ஆட்சி எதிர்ப்பு, தொழிலாளர் நலன் என்று தொடங்கி இறுதியில் சமத்துவ சமுதாயம் படைத்தல் என்பதில் வந்து முடிவடைகிறது. இது கலைஞரின் திரைப்பட இயங்குமுறை மட்டுமின்றி அவரது சமூக, அரசியல் இயங்கு முறையின் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.