கல்லப்பாடி க.பெ.மணி
சாதியின் பெயரில் எத்துணை எத்துணை ஆணவக் கொடுமைகள் நாள்தோறும் நமது நாட்டில் நடந்து வருகின்றன என்பதை ஊடகங்கள் உலகத்தார்க்கு படம்பிடித்துக் காட்டிவருகின்றன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போன்று 30.4.2019 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பக்கம் 6இல் கிராமங்களில் நிகழும் தீண்டாமையைப் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 646 கிராமங்களில் தீண்டாமை மிகக் கொடூரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியைப் படிக்கும்போது நமது நாட்டின் முன்னேற்றம் கரடுமுரடான மூடநம்பிக்கைகள் மிகுந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
கீதையின் ‘ஞானகர்ம சந்நியாச யோகம்’ என்ற 4வது அத்தியாயம், 13வது சுலோகத்திலும், ‘மோட்ச சந்நியாச யோகம்’ என்ற 18வது அத்தியாயத்தில் 41வது சுலோகத்திலும் ‘பிராம்மணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வகை சாதிகளை அவரவர் பிறப்பால் ஏற்பட்ட இயல்புகளுக்கு ஏற்ப கடமைகளை வகுத்து நான்தான் உருவாக்கினேன்’ என்று கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் கூறியுள்ளார். சாதிகளை உருவாக்கியதாகக் கூறும் இந்த இருவரில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? தந்தை சொல்வது உண்மையா? மகன் சொல்வது உண்மையா? இதில் வேடிக்கை என்னவென்றால் மகாவிஷ்ணு தந்தையாம். பிரம்மன் மகனாம். அரசியலில்தான் தந்தையும் மகனும் போட்டி போடுவர். இங்கு சாதிகளை உருவாக்குவதில் தந்தைக்கும் மகனுக்குமே போட்டி. வேண்டுதல் வேண்டாமை போன்ற உயரிய பண்புகளின் உறைவிடமாகக் கருதப்படும் கடவுள்கள் மக்களிடையே சாதிகளை உருவாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார்களா? சாதியின் பெயரில் ஆணவக் கொடுமைகள் நடக்க விடுவார்களா?
கிழிந்த பஞ்சாங்கத்தையும், காய்ந்த தர்பை புல்லையும் மூலதனமாகக் கொண்டு கடவுள்களின் பெயர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, சாதிகள் பெயரில் மக்களிடையே மூடப்பழக்க வழக்கங்களைப் பரப்பி, உழைக்காமல் தங்கள் வயிறைக் கழுவி உல்லாசமாக உயிர்வாழும் பழுது பார்க்கப்பட வேண்டிய மூளைக்குச் சொந்தக்காரர்களான ஒரு சோம்பேறி கூட்டத்தினர்தான் சாதிகள் உருவாகக் காரணமாக இருந்த சண்டாளர்கள் _ சழக்கர்கள் என்பது நன்கு விளங்குகிறது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்து மதத்திற்கும், இந்து மதக் கடவுள்களுக்கும் தாங்கள்தான் ஏகபோக வாரிசு என்றும், கார்டியன் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையைப் போல் இப்பொழுது கடவுள்களின் சாதிகளைக்கூட அலச ஆரம்பித்து தங்கள் மேதாவித் தனத்தைக் காட்ட முயன்று வருகின்றனர். இந்துக்களின் கடவுள்களில் சக்திவாய்ந்த கடவுள் என்று சொல்லப்படுகின்ற ‘அனுமானை’ தாழ்த்தப்பட்ட ‘தலித்’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு யோகி கூறியுள்ளார். அனுமான் என்ற பெயர் உள்ளதால் அவர் ஒரு ‘முஸ்லிம்’ என்று சட்டமன்ற உறுப்பினர் திரு.நவாப் அவர்களும், ‘ஜாட்’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.லட்சுமி நாராயணன் என்பவரும், ‘ஆர்ய’ வகுப்பைச் சேர்ந்தவர் என்று திரு.சத்யபால் சவுத்ரி என்பவரும், மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் என்று நண்டுகிஷோர் என்பவரும், தங்கள் தங்கள் மனநிலைக்கேற்ப விமர்சனம் செய்துள்ளனர். இந்த விவரங்கள் கடந்த 21.12.2018 அன்று தேதியிட்டு வெளியாகி உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழில் பக்கம் 9இல் பிரசுரமாகி உள்ளன.
பா.ஜ.க. ஒழிக என்று குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கிரிமினல்வாதியாக, தீவிரவாதியாக நினைத்து அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள் அனுமானைப் பற்றி கேவலமாக விமர்சித்துள்ள பா.ஜ.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? இந்துக்களின் கடவுளான அனுமனுக்கு சாதி கற்பித்த உ.பி. முதல்வர் திரு.யோகி மீது என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறது மய்ய அரசு? அல்லது இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கிண்டல் செய்ய பா.ஜ-.க.வினர்க்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்று வாளா இருக்கப் போகிறார்களா? பகுத்தறிவு உலகம் பா.ஜ.க.வின் பதிலையும் மய்ய அரசின் நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறது.
கௌதம புத்தர் என்பவர் கடவுள் இல்லை என்று போதித்தார். ‘ஓடும் உதிரத்தில், வடிந்து ஒழுகும் கண்ணிரில் தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ’ என்று சாதிகளை உருவாக்கிய சழக்கர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார் கபிலர் என்பவர் ‘கபிலரகவல்’ என்ற குரு மொழியில்.
வட இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தென்இந்தியாவில் ஈரோட்டு வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தீண்டாமையை எதிர்த்துப் போராடி உள்ளனர். “மதமும் கடவுளும்தான் சாதி முறைகளுக்கு மூலகாரணம் இவ்விரண்டும் என்று ஒழிகிறதோ அன்றுதான் சாதியும் ஒழியும்’’ என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அம்பேத்கரின், பெரியாரின் கனவு நிறைவேறவும் தீண்டாமையை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதி கடுமையான திட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பெரியாரின் அறிவுரை சட்ட வடிவம் பெறவும் சாதிமத பேதமற்ற சமுதாயத்தை சமத்துவத்தைக் காண வேண்டுமாயின் சாதி முதலில் ஒழிந்தாக வேண்டும்; சாதி ஒழிப்பை சட்டமாக்க வேண்டும்.