தந்தை பெரியார்
கருணாநிதி அவர்களுக்கு எதற்காக பிறந்த நாள் கொண்டாடுகிறோம்? பலர் பிறக்கிறார்கள்; சாகிறார்கள்; அவர்களுக் கெல்லாம் கொண்டாடுவதில்லையே என்று கருதலாம். பிறப்பதும் இறப்பதும் இயற்கை. பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால், அவரால் நாட்டிற்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட காரியம் – அவர் தொண்டால் ஏற்பட்ட நன்மை – பலன், ஆட்சிப் பொறுப்பேற்றதும் செய்த நன்மைக்காக நன்றி செலுத்திக் கொண்டாடுகின்றோமே என்றாலும் இவருக்குக் கொண்டாடுவதில் மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இவருடைய தொண்டின் காரணமாக இன்று தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் நிலை அடைந்திருக்கிறது. கருணாநிதி அவர்கள் உண்மையிலேயே அரசியலில் ஈடுபட்டிருப்பவர். அவரைப் பார்த்து நடந்து கொள்ளும்படியாக அவர் தொண்டிருக்கிறது. என்னுடன் சேர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருந்தார். மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார்.
மற்றவர்களால் செய்ய முடியாத – செய்யத் துணியாத காரியத்தை அவர் செய்திருக்கிறார் என்றால், தன் பதவியை விட்டு வெளியேறி பதவியை அளித்த ஸ்தாபனத்திற்கு தொண்டாற்றப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதுபோல் துணிவாகச் சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் சொன்னாலும் வேறு அதைவிட மேலான ஒன்றை அடைவதற்காகவே இருக்கும். பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கத்தான் விரும்புவார்களே தவிர, இவரைப் போல பொதுத் தொண்டு செய்வதற்காக அமைச்சர் பதவியை விட்டுப் போகிறேன் என்று எவரும் சொல்ல மாட்டார்கள். நாம் பதவிக்கு வந்தபின் கட்சிப் பணி செய்ய ஆளில்லாமல் போய்விட்டது. கட்சி தளர்ந்து விட்டது. அதை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பதவியை விட்டு கட்சிப் பணி செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதைப் பாராட்டுகிறேன்.
இவர் போனால் கொஞ்சம் கஷ்டம் தானே, அண்ணாவுக்குப் பக்க பலமாக இருந்தார் என்று நானும் கருதியவன்தான் என்றாலும், அவர் சொல்கிற காரணம் அதைவிட முக்கியமாக இருப்பதால் அவர் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. பதவியிலே போய் உட்கார்ந்து கொண்டதால் கட்சியைக் கவனிக்க யாரும் இல்லை. எதிரிகளின் பிரச்சாரம் மிகக் கேவலமாகப் போய் விட்டது. அதற்கெல்லாம் பதில் சொல்லி அவர்கள் பிரச்சாரத்தை முறியடித்து உண்மையை மக்களுக்கு உணர்த்தவேண்டும். அதோடு கட்சியிலே இருக்கிற தோழர்களையெல்லாம் சரிப்படுத்த வேண்டும். பலர் கட்சிக்குள்ளேயே மாறுபட்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சரி செய்ய வேண்டியிருக்கிறது.
காமராஜர் பதவியை விட்டுப் போனார்; அதன் மூலம் தொண்டு செய்ய வேண்டுமென்று கட்சித் தலைமையை ஏற்றுப் பாடுபட்டார்; அதன் பயனாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலமிழந்து செல்வாக்கற்றுப் போய் விட்டது; இவர் போவது அது போலல்ல. கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவே செல்கின்றார். அவர் செல்லாமலிருந்தால்தான் எதிரியாக இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போகும். அதற்கெல்லாம் பயந்து இருந்துவிடக் கூடாது. அது வீரனுக்கு அழகாகாது. இக்காரியத்தை அவர் செய்வது மூலம் இது சரித்திரத்திலேயே வரக்கூடிய காரியமாகும். அது மட்டுமல்ல; அவருக்குச் சிலை வைப்பதற்காக எல்லா காரியமும் முடிந்தும் சில பார்ப்பான்கள் எதிர்த்தான்கள் என்பதால் எனக்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார். அதுபோல் சொல்லக் கூடியவர் வேறு எவராவது இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
அமைச்சர் கருணாநிதி அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். என்னை விட்டுப் பிரிந்ததும் புதிய கட்சியைத் துவக்க மிகவும் பாடுபட்டார்.
அந்தக் கட்சியானது இன்றைக்கு ஆளும் கட்சியாக இருப்பதற்கு அண்ணாவைப் போலவே, இவருக்கும் பெரும் பங்குண்டு. அண்ணா மட்டும் தனியாக இருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. அவர் ஒரு துறையில் தொண்டாற்றினார்; இவர் ஒரு துறையை எடுத்துக் கொண்டு தொண்டாற்றினார்.
இதையெல்லாம் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது; ஏனென்றால் இவர்கள் வெற்றியைப் பெறுகிற வரை இவர்களைக் கடுமையாக எதிர்த்தேன். இவர்கள் தோல்வியடைய வேண்டுமென்று தீவிரமாக வேலை செய்தேன். காரணம், இவர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, பார்ப்பான் சொல்வதைத்தான் கேட்போம் என்றதால், இவர்கள் வந்தாலும் பார்ப்பான் தானே ஆளுவான் என்று எதிர்த்தோம். பார்ப்பான் நம்முடைய ஸ்தாபனத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்பதற்காக இவர்களை ஆதரித்தான்.
அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நாங்கள் எண்ணியது போல இல்லாமல் பார்ப்பனர்கள் எண்ணியதற்கு மாறாக நமக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகக் கூறியதோடு காரியமும் செய்ய ஆரம்பித்தனர்.
நீங்கள் பதவி இல்லாமல் பிரச்சாரம் செய்வதை, நாங்கள் பதவி மூலம் செய்கிறோம் என்று முன் வந்தார்கள். அவர்களை ஆதரிக்காமல் என்ன செய்வது? நமக்கு எப்படியோ காரியம் நடக்க வேண்டும். நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவர்கள் பார்ப்பானிடமே போய் விடுவார்கள். பிறகு நம் காரியம்தான் கெடும். பார்ப்பானே சொல்லிவிட்டானே தேர்தல்வரை தான் எங்கள் உறவு. நாங்கள் அவர்களை (திமுகவை) ஆதரித்ததே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்குத்தான்; அதுபோல அவர்களும் பதவிக்காகத்தான் எங்களுடன் சேர்ந்திருந்தார்கள். இரண்டு பேரின் காரியமும் முடிந்து விட்டது. இனி அவரவர்கள் தங்கள் காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டார்கள். இவர்களும் மந்திரி சபையில் ஒரு பார்ப்பானுக்குக்கூட இடம் கொடுக்கவில்லை. பதவியேற்கும்போது கடவுள் பெயரைச் சொல்லி பதவி ஏற்கவில்லை. இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்களின் ஆட்சியானது போய்விட்டால் நடக்க வேண்டிய காரியம் குறைந்துவிடுமே! இன்னும் சமுதாயத் துறையில் இவர்களைக் கொண்டு செய்ய நடக்க வேண்டிய காரியம் நிறைய இருக்கின்றது. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இவர்களும் மிகுந்த ஜாக்கிரதையாக – நாணயமாக – மக்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். ஒரு குறை சொல்கிற மாதிரி ஒருவர்கூட நடந்து கொள்ளவில்லை. கடவுள் மேல் நம்பிக்கையில்லாதவனுக்குத்தான் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்கு தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்காது என்பதோடு, அவனால் எந்தக் காரியத்தையும் துணிவாகச் செய்யவும் முடியாது. இவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களானதால் துணிந்து காரியம் செய்கிறார்கள். சரித்திரத்திலேயே இதுபோன்ற பகுத்தறிவாளர் ஆட்சி – சுத்தத் தமிழர்கள் ஆட்சி ஏற்பட்டது கிடையாது. இதுதான் முதன்முதல் ஏற்பட்ட ஆட்சியாகும்.
கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் இவ்வளவு பெருமளவு மக்களின் ஆதரவைப் பெற்று வந்திருப்பது நமக்கு பெரும் வெற்றியாகும். இவர்கள் வந்ததும் பல்லாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வந்தும் சட்டப் பூர்வமாகச் செல்லா தென்றிருந்த சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்கி இருக்கிறார்கள்.
முக்கியமாக – கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணாவுக்கு ஆதரவாக இருந்து தி.மு.க. பதவிக்கு வருவதற்காகப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார்.
கிடைத்தற்கரிய பதவி கிடைத்ததையும் பெரிது என்று கருதாமல் அதை விட்டு வெளியேறி கழகத் தொண்டு – பொதுத் தொண்டு செய்ய முன்வருவது பாராட்டுக்குரியதாகும்.
பதவி என்றால் சட்டென்று கழற்றி எறியக் கூடிய துணிவு இருப்பவர்கள்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும். அதைக் கருதி தனது பதவியை விட்டுவரும் இவரை ‘தன்னலமறுத்த தியாகி’ என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இப்போது நடைபெறும் இந்த ஆட்சியானது உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் ஆட்சியாகக் கருதி ஆதரிக்க வேண்டும். இது சுத்தமான தமிழனின் கடமையாகும். எதிர்ப்பவன் அரைப் பார்ப்பான் அரைத்தமிழனாகத் தானிருப்பான். தமிழன் என்கிற முறையில் தனித் தமிழன் ஆட்சியை எவனும் எதிர்க்க முன் வரமாட்டான். ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இப்பதவியின் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று கருதுபவர்கள்; இதன்மூலம் இதில் ஒட்டிக் கொண்டு வயிறு வளர்க்க வேண்டுமென்று கருதுபவரல்ல. இது எனக்கு நன்றாய்த் தெரியும்.
(சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி 45ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.6.1968) விழாவில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து…)