கே: வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன?
– முகமது, மாதவரம்
ராகுல் காந்தி
ப: வடமாநிலங்களில் என்ன? அகில இந்திய அளவில் பெரியார்தான் ஒரே தடுப்பணை _ மாமருந்து என்பதால் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய மதிப்பிற்குரிய ராகுல் காந்தி போன்றவர்களே முன்வருவது நன்னம்பிக்கைக்கான அறிகுறியாகும்!
கே: மதச்சார்பற்ற அரசின் இலச்சனையாக கோபுரம் இருப்பது ஏன்? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
– இரா.பிரபாகரன், சென்னை
ப: அதற்கான முயற்சி வெகுகாலத்திற்கு முன்பே ஓமாந்தூரார் முதல்வராக இருந்த 1947_48 காலத்தில் முயன்றதுண்டு. கோபுரம் கலைவடிவம் என்று ஏதோ ஒரு வியாக்யானத்தைக் கூறி நிலைக்க வைத்துவிட்டனர். உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் மறுக்கமுடியாத ஒன்று.
கே: கடவுளுக்கும் சக்தியில்லை, யாகத்திற்கும் சக்தியில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்த பின்பும், அத்திவரதர் ஆர்ப்பாட்டங்கள் அடுத்தடுத்து அணிவகுப்பது மந்தை மனப்பான்மையாலா?
– க.ல.சங்கத்தமிழன், செங்கை
ப: பார்ப்பனருக்கு ஆன வருவாய்த்துறை! புது பிசினஸ் _ முதல் போடா பக்தி வியாபாரம்!
கே: அறிவியல் மேதைகள் ஆன்மிகவாதிகளாய் இருப்பது எதைக் காட்டுகிறது?
– க.தியாகராசன், நெய்வேலி
ப: முட்டாள்தனம் எல்லோரது பொதுச் சொத்து _ பொது குணம் என்பதைக் காட்டுகிறது!
கே: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோருக்கு 7 இடங்கள். தற்போது ஆறு இடங்களே தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய ஓர் இடம் என்னவாயிற்று?
– ரெ.மகாலிங்கம், கூடுவாஞ்சேரி
ப: குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றியடைந்த மாநிலங்களுக்கு இத்தகைய தண்டனை யதார்த்தமாக உள்ளது!
கே: ஒரே நேஷன்! ஒரே ரேஷன்! மாநில உரிமைகள் மட்டுமல்ல, மாநிலங்களும் இல்லாமல் ஒழிப்பதற்கான சதிதானே! தீர்வு என்ன?
– மகிழ், சைதை
ப: இதிலென்ன சந்தேகம்? பொறுத்திருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி!
நிர்மலா சீதாராமன்
கே: மத்திய பட்ஜெட் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– சீனிவாசன், மயிலாப்பூர்
ப: பன்னீருக்குப் பதில் கானல் நீர்! வெகுமக்களுக்கு வெகுதூரம் உள்ள பட்ஜெட்!
கே: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்ப்பதில் உறுதியும் தீவிரமும் காட்டும் இராகுல் காந்தி தலைமைப் பதவியிலிருந்து விலகுவது எதிரிகளுக்கு சாதகமாகாதா?
– ஸ்டீபன், போரூர்
ப: தலைமைப் பதவியிலிருந்துதான் அப்பணி செய்ய வேண்டும் என்பதில்லை. அவருக்குள்ள தகுதியினால் அதை வெற்றிகரமாக அவரால் செய்ய முடியும். எதிரிகளுக்கு சாதகமாக அது ஒரு போதும் ஆகாது. இது ஒரு சர்ஜிகல் ஆபரேஷன் _ காங்கிரசுக்கு!
தந்தை பெரியார்
கே: ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் பகத்சிங்கையும் பற்றியுள்ளதே! பெரியாரையும் பற்றுவார்களோ?
– மாசிலாமணி, வேலூர்
ப: எரிமலையிடம் எந்தக் குப்பையும் நெருங்க முடியாது!