சிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்

ஜூலை 16-31 2019

ஒளிமதி

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன் தமிழர்கள் இந்தியா முழுமையும் வாழ்ந்து கல்வி, கலை, வானியல், கணிதம் என்று பலவற்றிலும் சிறந்து விளங்கினர். ஆண்களேயன்றி பெண்களும் கல்வியில் சிறந்திருந்தனர்.

ஆனால், ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, ஆதிக்கவாதிகளான பின்பு கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே என்று சாஸ்திர ரீதியாக சட்டமாக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு கல்வியை மறுத்தனர். பார்ப்பன பெண்களுக்கும் கல்வியை மறுத்தனர்.

ஆரிய பார்ப்பன சிறுவன் பூணூல் அணிவிக்கப்பட்ட பின் குருகுலக் கல்வியை மேற்கொள்வான். குருவின் வீட்டில் தங்கி கல்வி கற்பதே குருகுலம். அங்கு குருவைத் தொழுது, அவருக்கு பணிவிடை செய்து கற்பான். இதுவே குருகுலக் கல்வி.

குருவின் காலைத் தொட்டு பூசை செய்வது குருபூர்ணிமா. இந்த முறையைத் தற்போது கல்வி நிலையங்களில் நுழைத்து செயல்படுத்த ஆரிய பார்ப்பனர்கள் முயற்சிக்கின்றனர்.

குருவை வணங்குவது நல்லதுதானே என்று மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் எண்ணுவர். ஆனால், அதில் அடங்கியுள்ள தன்மான உணர்வு மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பெற்றவர்களுக்கு பாதபூசை செய்வதானாலும், குருவின் காலுக்கு பூசை செய்வதானாலும் அது சுயமரியாதைக்கு எதிரானது. காலில் விழுந்து வணங்குதல், காலுக்குப் பூசை செய்தல் போன்றவை யார் எந்தச் சூழலில் செய்தாலும் அது தப்பு.

பெற்றவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ மாணவர் செய்ய வேண்டிய உண்மையான மரியாதை, நல்லொழுக்கமும் சிறப்பான கல்வியும் பெற்று உயர்வதுதான். அதையே உண்மையான பெற்றோரும், ஆசிரியரும் விரும்புவர்; விரும்ப வேண்டும். ஆனால், இந்தக் குருபூர்ணிமா இதற்கு நேர் எதிரானது. இது குருகுலக்கல்வியை கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு! எனவே, இதை முன்கூட்டியே தடுக்க வேண்டும். இப்படிப்பட்ட குருபூர்ணிமா நிகழ்வுகள் எப்பள்ளியிலும் நிகழ அரசு அனுமதிக்கக் கூடாது.

கல்வி நிறுவனங்கள் எல்லா மதத்துப் பிள்ளைகளும் படிக்கும் இடம். அங்கு இந்து கலாச்சாரத்தை (ஆரியக் கலாச்சாரத்தை) நுழைப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. குருபூர்ணிமா என்பது – வியாசபூர்ணிமா – வேதவியாசரை நினைவுகூறும் நிகழ்வு. இதை இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் செய்ய வேண்டும் என்பதும், இந்துக்களிலே விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்துவதும் குற்றம். அது மட்டுமல்ல; மதச்சார்பில்லாத கல்விக் கூடங்களில் மத நம்பிக்கைகளை நுழைப்பது சட்டத்திற்கு எதிரானதுமாகும்!

ஏகலைவனை கற்கக் கூடாது என்று விரட்டியடித்ததே குருகுலக் கல்விதான். அதையும் மீறி ஏகலைவன் கற்றதற்காக அவன் விரலை வெட்டியதும் அந்தக் குருகுலக் கல்வியும், குருவும்தான். கல்வி ஒரு சாதிக்கு மட்டும், ஒரு சிலருக்கு மட்டும் என்று இருந்த காலத்தில் குருவின் வீட்டில் கல்வி கற்பிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அனைவருக்கும் கல்வி அமலில் உள்ள மக்களாட்சியில், குருகுலக் கல்வியைக் கொண்டுவர அடித்தளம் அமைக்கும் ஆரிய சூழ்ச்சியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்; குரு பூர்ணிமா நடத்தும் பள்ளியை சட்டவிரோத பள்ளியென்று அறிவிக்க வேண்டும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *