திரை விமர்சனம் : தர்மபிரபு

ஜூலை 16-31 2019

ச.மா.இளவரசன்

வெளியான நாள்முதல் அனைத்துவித ஊடகங்களிலும், கொஞ்சமும் இடைவிடாமல் பார்ப்பனிய நஞ்சை கக்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு அத்தனை சங்கிகளுக்கும், மிளகாயை அரைத்துத் தடவியது போல எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது தர்மப்பிரபு திரைப்படம்.

இயக்குநர் முத்துக்குமரன்

இத்தனைக்கும் கதையில் வருபவர்கள் புராணக் கதாபாத்திரங்கள்தான். எமன், சிவன், முருகன், பிள்ளையார், சித்திரகுப்தன் என்று இத்தனை காலமும் இவர்கள் எந்தெந்த கதாபாத்திரங்களை அளந்து விட்டுக் கொண்டிருந்தார்களோ அவைதான் திரையில் உலவுகின்றன. பிறகு ஏன் இவர்களுக்கு எரிச்சல்? இதேபோன்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி ‘நீதி தேவன் மயக்கம்’, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ போன்ற நாடகங்கள் உருவாக்கிய தாக்கம் நீண்ட காலத்திற்குப் பிறகு தர்மபிரபு திரைப்படத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது, அது தான் காரணம்.

எமனுக்கு வயதாகி விட, அவர் தனது மகனை எமன் பதவிக்குத் தயார் செய்கிறார். அதுவரை அப்பதவிக்கு காத்திருந்த ஆரியன் சித்திரகுப்தன் தனக்குப் போட்டியாக முளைத்திருக்கும் புதிய எமனை எப்படியாவது பதவியிலிருந்து இறக்கி விட்டு, தான் அந்தப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்று துடிக்கிறான்; அதற்காக புதிய எமனை வீழ்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் இறங்குகிறான். பொய்யான காரணம்சொல்லி எமனை பூமிக்கு வரவைத்து அங்கு நடக்கும் குளறுபடியால் ஒரு கட்டத்தில், பூலோகத்தில் இறந்து எமலோகத்திற்கு வரவேண்டியவர்கள் வராமல் எமலோகமே தன் இயல்பை இழக்கிறது. இதனால் கோபமடையும் சிவன் எமலோகத்தையே அழித்துவிடும் அளவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.  இதனை எப்படி சமாளிக்கிறார் புதிய எமன் என்பதுதான் தர்மபிரபு படத்தின் கதை.

கதை என்னமோ முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் ஆனதுதான். ஆனால் அதில் உலவுகிற பல கதாபாத்திரங்கள், அதில் காட்டப்படுகிற பல நிகழ்வுகள் நிஜத்தின் பிரதிபலிப்பாக இருப்பவை. இத்தனை துணிச்சலோடு ஓர் அரசியல் _ சமூக எள்ளல் படத்தை, பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் இந்த காலகட்டத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குநர் முத்துக்குமரன், தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் காலத்திற்கும் போற்றப்படுவர்.

இச் சமூகத்தின் அத்தனை கேடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் பார்ப்பனியத்தையும் அதன் ஆபத்தையும் மிக வெளிப்படையாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். முத்துக்குமரன் _ யோகிபாபு இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். வசனங்கள்தாம் இப்படத்தின் ஆதாரம். படத்தின் சில காட்சிகள் தணிக்கைத் துறையால் நீக்கப்பட்டிருக்கின்றன. பல வசனங்களில் ஒலி நீக்கப்பட்டுள்ளது. அந்தக் கத்தரிகளைத் தாண்டி வெளிவந்துள்ள காட்சிகளே இவ்வளவு பேசுகின்றன என்றால், முழுமையாக படம் எப்படிப் பேசியிருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

கோலாட்சியைவிட ’நூலாட்சி’யே வலிமை என்பதைக் குறிக்கும் உரையாடல் நுட்பமாக மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு கைதட்டல் பெறுகிறது. எமனின் பதவியைப் பறிக்க, உன் சகோதரியை அனுப்பி அவனை மயக்கிவிடு என்று அரசியல் சாணக்கியர் கோ.ரங்கசாமி தரும் ஆலோசனையும், அதை செயல்படுத்தும் சித்திரகுப்தனின் செயலும் பார்ப்பனர்களைப் பொறுக்கமுடியாத அளவு புலம்பவைத்திருக்கிறது. பின்னே… பல நூற்றாண்டுகளாக ஊரறிந்த ரகசியத்தை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் பதற்றம் வரத்தானே செய்யும்-? பார்ப்பன எதிர்ப்பு மக்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதை இப் படத்திற்கான வரவேற்பு உறுதிப்படுத்துகிறது.

பின்னர் சித்திர குப்தனைத் தேடி, பூமிக்கு வரும் எமன் இங்கே நால்வரின் சிலைகளைப் பார்க்கிறார். முதலில் தந்தை பெரியார்! ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்று பெரியார் சிலையில் உள்ள வாசகமே எமனைக் கவர்கிறது. அடுத்து அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அண்ணல் காந்தியடிகள் என்று ஒவ்வொருவரைப் பற்றியும் இங்கு பார்க்கும் எமன், லாரியில் அடிபடவிருந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றுகிறார். உயிரை எடுக்க வேண்டிய எமனே, உயிரைக் காப்பாற்றியது எமலோகத்தின் இயல்பு மாறக் காரணமாகிவிடுகிறது. அந்த விபத்தில் இறந்திருக்க வேண்டிய மற்றொருவரான ஜாதிவெறியர் உழைக்கும் மக்கள் கட்சித் தலைவர் குமாரதாஸ் காப்பாற்றப்பட்டுவிட, அவரையும் கொல்வது கூடுதல் ‘டாஸ்க்’ ஆகிவிடுகிறது எமனுக்கு!

பூலோகத்தில் சிலைகளாகப் பார்த்த நால்வரையும், நேரில் அழைத்து ஆலோசனை கேட்கும் காட்சியில் ஒவ்வொருவராக திரையில் தோன்ற ‘அப்ளாஸ்’ அள்ளுகிறது. (என்ன… பெரியார் கதாபாத்திரத்தில் நடித்தவர் கையில் கயிறுடன் இருந்ததைக் கவனித்திருக்கலாம் திரைப்படக் குழுவினர்) இவர்களின் ஆலோசனையையும் கேட்டுக் கொள்கிறார் எமன்.

எமலோகத்தின் சிக்கலைத் தீர்த்து, தன் பதவியைக் காத்துக் கொள்ள அவர் அறிவிக்கும் ‘ஒன் பிளஸ் ஒன்’ திட்டம், அதன் மூலம் இறந்து எமலோகம் வரும் மக்கள், அவர்களிடம் விசாரணை என்று தொடரும் காட்சிகளில் தான் அன்றாட நடப்புகளின் அவலத்தை எடுத்துக் காட்டுகிறார்கள். ஜாதிவெறியர்களின் கோரமுகத்தை, விவசாயிகளின் ‘டிராக்டர்’களையும் ஜப்தி செய்யும் வங்கிகளை, ‘ஹெல்மெட்’ போடாத வாகனத்தைப் பிடிக்கிறேன் என்று கர்ப்பிணிப் பெண் சாவுக்குக் காரணமான காவல்துறையினரின் போக்கை தொட்டுக்காட்டியபடி பயணம் செய்கிறது.

படம் பகுத்தறிவு பேசவில்லை; முழுமையாகப் பெரியாரியல் பேசவில்லை. சமூக அவலங்களையும், கேடுகளையும், அவற்றுக்குக் காரணமான பார்ப்பனியத்தையும், ஜாதியையும், சமூக உளவியலையும் எடுத்துக்காட்டுகிறது. எனில், அந்தக் கேடுகளை விளைவிப்போர் இதை எதிர்க்கத் தானே செய்வார்கள். அதனால் தான் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்ற உத்தமத் திலகங்கள் படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் எழுதினார்கள். ‘நரி ஊளையிட்ருச்சு… படம் சக்சஸ்’ங்கிற கணக்காக திரையரங்குகளுக்கு விரைந்தனர் மக்கள் என்பது தான் ‘தர்மபிரபு’வின் வெற்றி வரலாறு!

படத்தில் நம்மால் ஏற்க முடியாத உறுத்தலான காட்சிகள் இல்லாமல் இல்லை. பார்ப்பனியம், ஜாதி என பல தளங்களைப் போட்டுடைக்கும் படத்தில், பெண்கள் தொடர்பான வசனங்களும் காட்சிகளும் பொதுப்புத்தி சார்ந்த, பிற்போக்குத்தனமானவையாகவே உள்ளன. அந்தப் புரிதலையும் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ளுதல் இனிவரும் படைப்புகளை இன்னும் தெளிவாகத் தர உதவும். ஏனெனில் இவர்களிடமிருந்து அடுத்தடுத்த படைப்புகளையும் மக்கள் எதிர்பார்ப்பார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

படக்குறிப்பு: தர்மபிரபு படத்தைப் பார்த்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படத்தின் இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *