விதையில்லா “SEEDLESS” கனிகள் கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. மக்களும் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் அதன் சுவை சற்று அதிகமாக உள்ளது. இரண்டாவது விதையில்லாமல் மெல்வதற்கு சுலபமாக உள்ளது போன்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவை எந்த அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதை பலரும் சிந்திப்பதில்லை.
மலட்டுத் தன்மைக்கும் விதையற்ற உணவுகளுக்கும் தொடர்பு உண்டு. விதையில்லா திராட்சை, பேரீச்சம்பழம், பப்பாளி என இப்பொழுது எளிதாகக் கிடைக்கிறது. இதையெல்லாம் தவிர்ப்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும்.
விதைகளுக்கு நம் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தன்மை அதிகமாக இருக்கும். குறிப்பாக புரதச்சத்து அதில் அதிகம் உள்ளதால் அது வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்லது பயக்கும்.
வெள்ளைப் பூசணிவிதை
வெள்ளை பூசணிவிதை ஆண்களுக்கு ஏற்படும் Prostable gland சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல முறையில் தீர்வு அளிக்கும். தினம் 4-_5 பூசணி வித்துகளை தண்ணீரில் கொதிக்க வைத்தோ (அல்லது) வெறும் சட்டியில் இலேசாக வறுத்து சாப்பிட்டு வர ஆரோக்கியம் உண்டு பண்ணும். சிறுநீர்ப் பாதையை சுத்திகரிக்கும் தன்மையுடையது.
சூரியகாந்தி விதை
சூரியகாந்திப் பூ விதைகளுக்கு கெட்ட கொழுப்பினைக் குறைக்கும் தன்மை உள்ளது. அதனை ஊறவைத்து தோல் நீக்கி தினம் 10_15 விதைகள் சாப்பிடலாம். மூட்டுவலி, வீக்கம் உடையவர்கள் உட்கொள்ளலாம். குறிப்பாக, இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
பலாக்கொட்டை
பலாக்கொட்டை, பொதுவாக குழம்பு வைப்பதற்கும், சுட்டு சாப்பிடும் வழக்கமும் உண்டு. அதன் அளவு அதிகமானால்தான் வயிறுவலி, வாயுத் தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். பலாக்கொட்டையை நன்கு காய வைத்து, வேக வைத்து பின் மீண்டும் காயவைத்து, மேல்தோல் நீக்கி பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சமைக்கும் பொழுதும், குருமா போன்ற வகைகள் சமைக்கும்போதும் பலாக்கொட்டை பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் கசகசா பால் அரை தேக்கரண்டி சேர்த்துக் கொண்டால், அஜீரணம் ஏற்படுத்தாது.
மாங்கொட்டை
மாம்பழம் சாப்பிடும்பொழுது, ஏற்படும் வயிறு வலி, பேதி போன்றவைக்கு அருமருந்து மாங்கொட்டைதான். மாம்பழக் கொட்டையை நன்கு காயவைத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடல் சூடு அதிகமாகி சிலருக்கு பேதி ஆகும். அந்த சமயத்தில் இந்தக் கொட்டையின் பொடி _ அரை தேக்கரண்டி நீரில் (அல்லது) மோரில் கலந்து குடிக்க உடனடி தீர்வு கிடைக்கும். பொதுவாக பேதியுற்றவர்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.
பப்பாளி விதை
பப்பாளி விதைகளை நன்கு காய வைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இதனை மாதம் இரண்டு முறை 4_5 சிட்டிகை வீதம் தேனில் கலந்து சாப்பிட வயிற்றில் உள்ள கிருமிகள் பூச்சிகள் முதலியவை நீங்கும். பசி தீவனத்தை அதிகரிக்கும்.
எள் விதை
எள் வகைகள் அதிக புரதச்சத்து உடையது. மேலும் அதிக நார்ச்சத்து உடையது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் குறைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கும். உடல் உரமூக்கியாக செயல்படும்.
கசகசா
கசகசா நம் அன்றாட சமையலில் உபயோகித்து வருவது மிகுந்த நன்மையளிக்கும். குறிப்பாக, குடல்புண், வயிறு உப்புசம் போன்ற உபாதை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. கசகசா தூக்கமின்மை பிரச்னைக்கு நல்ல தீர்வு அளிக்கும்.
தனியா
கொத்தமல்லி விதை பெரும்பாலும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தரலாம். உடல் எடை குறைக்க விரும்புகின்றவர்கள் தினம் அரை டீக்கரண்டி தனியா தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரலாம். குடலிறக்கம், வாய் குமட்டல், வாந்தி போன்றவைக்கு தனியா நல்ல மருந்தாகும்.
வெந்தயம்
வெந்த+அயம் = வெந்தயம். இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து உடலுக்கு மிக வலு சேர்க்கும். முக்கியமாக உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். மதுமேகம், இரத்த அழுத்தம் உடையவர்கள் தினம் இதன் விதையை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
கழற்சி விதை
கழற்சி பருப்பு சமீபகாலமாக அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. கழற்சி பருப்பு பெண்கள் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு நல்லது என்றாலும், அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். அடிக்கடி இதனை எடுத்துக் கொண்டால் பேதியாகும். உடல்சூடு அதிகமாகிவிடும்.
இனிவரும் காலங்களில் விதையில்லா காய்கறிகள், பழங்களை முற்றிலுமாகத் தவிர்ப்போம். குழந்தைகளுக்கும் அதனைக் கொடுக்க வேண்டாம். விதையுள்ள உணவே ஆரோக்கியத்தைக் கொடுத்திடும்.