உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் இறப்பைச் சந்திக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
உயர் ரத்த அழுத்த சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு விகிதங்கள், மக்கள் தொகை அளவில் குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் மிக மோசமானவையாகவே உள்ளன.
இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஆய்வில் சராசரி BP 2.6 mm Hg அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் ஆறு நபர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டது. உயர் ரத்த அழுத்தம் நிலவுவதன் மீது சராசரி ரத்த அழுத்தத்தில் 2.6 mm Hg அதிகரிப்பின் எதிர்பார்க்கப்படும் தாக்கத்தின் அளவு அதிகம் என்பதால் இது 10 ஆண்டுகளில் நடப்பு நிலவர விகிதமான 30 சதவீதத்தை இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது.
ஆரம்ப நிலையிலேயே உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பது என்பது உயர் ரத்த அழுத்தத்தையும் மற்றும் அதன் சிக்கல்களையும் சமாளிப்பதற்கு ஆகும் தொடர் செலவுமிக்க சுழற்சியைத் தடுப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்த நிலையை அடைவதற்கு உயர் ரத்த அழுத்தத்தை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதோடு ஆரம்ப தடுப்பு உக்திகளை நடைமுறைப்படுத்துவதிலும் முயற்சிக்க வேண்டும். முன் தடுப்பு நடவடிக்கைகளே இந்த விஷயத்தில் அதிக பலன் தரக்கூடியது.
உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தல்
உப்பின் அளவைக் குறைப்பது முதன்மையான ஒன்று. தினமும் சராசரியாக 1.7 கிராம் என்ற அளவில் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பது ரத்த அழுத்தத்தில் 2 mm Hg குறைக்க வழிவகுக்கும். தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் அளவாக 6 கிராம் உப்புக்கும் மிகைப்படாத அளவே பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த அளவு உப்பு எடுத்துக் கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் இடரைக் குறைக்கிறது. குறிப்பாக அதிக உடல் பருமன் உள்ள நபர்கள் கண்டிப்பாக உப்பின் அளவைக் குறைத்தே உட்கொள்ள வேண்டும்.
உடல் எடைக் குறைப்பு
உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தத்துக்கான அதிகரித்த இடருடன் தொடர்புடையதாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 4.4. கிராம் என்ற அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக தொடர்ந்து நிலையாக உடல் எடையைக் குறைத்திருப்பது 5.0 – 7.0 mm Hg ரத்த அழுத்தத்தைக் குறைக்க வாய்ப்பாகும்.
மதுபானம் தவிர்த்தல்
அதிக அளவு மது அருந்துவதற்கும், அதிகரித்திருக்கும் ரத்த அழுத்தத்துக்கும் இடையிலான தொடர்பும் உறவும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
உழைப்பு, உடற்பயிற்சி
ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு ஏரோபிக் அடிப்படையிலான உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கான முதன்மைத் தடுப்பு முயற்சியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் எழுந்து சென்று சற்று தூரம் நடப்பது போன்ற சில எளிமையான நடவடிக்கைகள் முக்கியமானது.
உணவு
பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள மற்றும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்கள் உட்கொள்வது, உயர் ரத்த அழுத்தம் உள்ள மற்றும் இயல்புநிலை கொண்ட நபர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் திறன் கொண்டவையாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.