பெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்!

ஜூலை 16-31 2019

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் பெண்கள் அறிவு வளர்ச்சியில் அபாரமான எல்லைகளை தொட்டுவிடுகின்றனர். அத்தகைய பெண்கள் உடல் வலிமையில் சிலர் பின்தங்கியும் விடுகின்றனர். இன்றைய காலத்தில் பெண்கள் தங்கள் உடல் வலிமையை போற்ற வேண்டிய காலமாகவும் மாறிவிட்டது. அவ்வகையில் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் பல சாதனைகளை புரியும் அச்சிறுப்பாக்கத்தை அடுத்துள்ள தேன்பாக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் குத்துச்சண்டை வீராங்கனை கோதைஸ்ரீ கூறுகையில், “.குத்துச்சண்டை விளையாட்டைப் பெண்கள் அவ்வளவாக தேர்ந்து எடுக்க மாட்டார்கள். இதனைக் கற்றுக் கொள்வதால் ஆபத்தான தருணங்களில் பெண்களால் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியும். இந்தக் காரணங்களுக்காகத்தான் சவால்கள் நிறைந்த இந்த விளையாட்டைத் தேர்ந்து எடுத்தேன்’’ என்றார் கோதைஸ்ரீ.

அய்ந்தாவது படித்துக் கொண்டு இருக்கும் போது மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாகக் கலந்து கொண்டேன். அதில், சப்_ஜூனியர் பிரிவில், இருபத்தெட்டு கிலோ முதல் முப்பது கிலோ வரை எடை உள்ள சிறுமியருக்கான லைட்ஃப்ளை வெயிட் பிரிவில் கலந்து கொண்டேன். காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்று சுற்றுகளின் முடிவில் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக பத்து புள்ளிகள் எனக்குக் கிடைத்தன. மேலும், பங்கேற்ற முதல் போட்டியிலேயே, தங்கப் பதக்கத்தையும் பெற்றேன்’’ என்கிறார் மகிழ்ச்சியுடன். மேலும், “ஆறாவது படிக்கும்போது இருந்தே, மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். தொடர்ந்து நான்கு வருடங்கள் பள்ளிகளுக்கு இடையேயான மாநிலப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஃப்ளைவெயிட் பிரிவில் (40 கிலோ முதல் 42 கிலோ வரை) கலந்து கொள்ளத் தொடங்கினேன். 2014ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டுவரை அய்ந்து மாநிலப் போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப் பதக்கமும், இரண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றேன்.

2018ஆம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். அதே ஆண்டில், தமிழக அணிக்காக நேஷனல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் காலிறுதியில் டெல்லி வீராங்கனையை பத்துக்கு ஏழு என்ற புள்ளி கணக்கிலும், அரையிறுதி ஆட்டத்தில், 10 – 8 என்ற புள்ளி வித்தியாசத்தில் பஞ்சாப் வீராங்கனையையும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றேன். ஃபைனல்சில் நானும் அரியானா வீராங்கனையும் தங்கப் பதக்கத்திற்காக மோதினோம். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் எதிராளியை ஜட்ஜ் பண்ணுவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மூன்று சுற்றுகள் வரை கடுமையாகப் போராடி பத்துக்கு – எட்டு என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது’’ என்பவரின் பயிற்சி முறைகள் கடுமையான ஒன்று.  “எங்களுடைய பயிற்சி முறைகளில் கோச் சொல்லுகின்ற டெக்னிக்குகளை முக்கியமாக செய்து பார்ப்போம். பாக்சிங் விளையாட்டுகளைப் பொறுத்தவரை பயிற்சியின்போது Spare எனச் சொல்லப்படுகின்ற Trail Fight ரொம்ப முக்கியமானது. சக வீராங்கனைகளுடன் இதில் பயிற்சியில் ஈடுபடுவோம். அதாவது நம்முடன் பயிற்சி எடுப்பவர்களுடன் போட்டிபோல் சண்டை போடணும். ஒவ்வொரு சுற்றுக்கு நடுவே ஒரு நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வோம். போட்டி நெருங்கும் சமயங்களில் இந்தப் பயிற்சி நேரத்தை அதிகப்படுத்துவார்’’ எனக் கூறும் இவர், “பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 20 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 25 பதக்கங்கள் வென்றுள்ளார். குத்துச் சண்டையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. நமது நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய மெடல்கள் ஜெயிக்க வேண்டும்’’ என்கிறார் குத்துச்சண்டை மங்கை கோதைஸ்ரீ.

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *