சிகரம்
“முன்னம் ‘கதுடன்’ என்று ஓர் அரக்கன் இருந்தான். அவனால் போரில் தொல்லைகள் அனுபவித்த தேவர்கள், பிரம்மாவுடன் விஷ்ணுவைத் தரிசித்து அசுரர்களை அழிக்குமாறு வேண்டிட, அவர் தக்கதோர் ஆயுதம் கிடைத்தால் அதன் மூலம் வெற்றி காண முடியும் என்றார்.
கதுடன் வஜ்ரகாயம் கொண்டவன். மேலும் கயாசரன் போல் தர்மபுத்தி உடையவன். அவனிடம் பிரம்மா சென்று, “கடின தேகம் கொண்ட உனது எலும்பிலிருந்து ஒரு கதாயுதம் செய்து விஷ்ணுவுக்கு பரிசளிக்க விரும்புகிறோம். எனவே உன் உடலைத் தானம் செய்’’ என்று கேட்க, விஷ்ணுவின் கையில் நிலையாக இருப்பது மகா பாக்கியம் என்று கூறி யோக சக்தியால் தன் உடலை விட்டுவிட, பிரம்மா, விசுவகர்மாவைக் கொண்டு ஒரு கதாயுதம் உருவாக்கிட, அதை விஷ்ணுவுக்கு ஓர் ஆயுதமாக அளித்தார்.
அந்த கதாயுதத்தைக் கொண்டு விஷ்ணு “அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றி தேடித் தந்தார்’’ (வாயு புராணம்) என்கிறது இந்து மதம்.
ஒருவன் உடலில் உள்ள உயிர் நீங்க வேண்டுமானால், நோய், விபத்து, உடலில் விஷம் ஏறுதல், மூச்சைத் தடுத்தல், உண்ணாமை போன்ற ஏதாவது காரணம் வேண்டும். ஒருவன் நினைத்த மாத்திரத்தில் தன் உடலில் உள்ள உயிரை நீக்க முடியாது. இதுதான் அறிவியல். ஆனால், யோக சக்தியால் கதுடன் உயிரை தன் உடலிலிருந்து நீக்கிக் கொண்டான் என்பது அறிவியலுக்கும், நடைமுறைக்கும், உண்மைக்கும் மாறானது. இப்படி அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான கருத்து கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
இறந்தவருக்கு உத்திரகிரியை செய்யவில்லை என்றால் பேயாக அலைவாரா?
முன்னொரு காலத்தில் தருமனாகிய ஒரு வைசியன் இருந்தான். அவன் வியாபாரத்தை முன்னிட்டு வேறொரு ஊருக்குச் செல்கையில் வழியில் ஒரு சிறிய காடு வந்தது. அதில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு மரத்திலிருந்து ஒரு பூதம் தோன்றி அவன் வழியை மறித்தது. அச்சமற்ற அந்த வைசியன் அதை நோக்கி, “நீ யார்? ஏன் வழி மறைத்து நிற்கிறாய்?’’ என்று கேட்க, அது தானும் ஒரு மனிதன்தான் என்றும், தனக்குப் புத்திரசந்தானம் இல்லாததால், யாரும் சரியான முறையில் உத்தர கிரியைகள் செய்யாததால் இந்த பிரேதரூபம் மாறவில்லை. என்னிடம் நிறைய செல்வம் உள்ளது. அதை எடுத்துக்கொண்டு என்னுடைய பெயர் கோத்திரம் சொல்லிக் கயா க்ஷேத்திரத்தில் பிண்டப் பிரதானம் நீ செய்வாயா என்று கூறி, நீ செய்வாய் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறிற்று.
அந்த வைசியனும் கயைக்குச் சென்று பிரேதம் வேண்டிக் கொண்டவாறே பிண்டப் பிரதானம் செய்ய அது பிரேதரூபம் நீங்கி பித்ருலோகம் அடைந்தது.
அடுத்து, அந்த வைசியன் தன் பித்ருக்களுக்கும் பிண்டப் பிரதானம் செய்து அவர்களும் உத்தம கதி அடைய செய்து வீடு திரும்பினான்’’ (வாயு புராணம்) என்கிறது இந்து மதம். இறந்தவனுக்கு உத்திரகிரியை செய்யவில்லை என்றால், அவன் உயிர் பேயாக அலையும் என்கிறது இந்து மதம்.
உயிர் என்பது ஓர் ஆற்றல், மின்சாரம், நெருப்பு போன்று உயிரும் ஒரு ஆற்றல். உடல் உயிர்த்தன்மையை இழப்பதே இறப்பு. அவ்வாறு ஒருவர் இறக்கும்போது அவர் உடல் உயிர்த்தன்மையை இழக்கிறது. அந்த உயிர் ஆவியாக அலைவது இல்லை. விளக்கை அணைத்தால் அந்த நெருப்பு மறைவதுபோல உயிரும் நீங்கும். அணைந்த விளக்கின் நெருப்பு அலையாது.
உலகில் எல்லா நாட்டு மக்களும் இறந்தவர்களுக்கு உத்திரகிரியை செய்வதில்லை. அவர்கள் உயிரெல்லாம் ஆவியாகவா அலைகிறது? இல்லையே! அப்படியிருக்க உத்திகிரியை செய்யாததால் இறந்தவர் உயிர் பேயாக வந்து, வைசியனை உத்திரகிரியை செய்யச் சொன்னது என்பது அறிவுக்குப் பொருந்தா மூடக் கருத்தல்லவா? இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
இறந்தவர் சாம்பலில் கங்கை நீர் பட்டால் உயிர் பெறுவார்களா?
சகரன் புவிச் சக்கரவர்த்தியாகச் சிறப்புடன் ஆட்சி நடத்தினான். அசுவமேத யாகம் பல நடத்தினான். அப்பொழுது இந்திரன் யாகக் குதிரையைத் திருடிச் சென்றான், சுமதி என்ற மனைவியிடம் சகரனுக்கு அறுபதினாயிரம் மைந்தர்கள் பிறந்திருந்தார்கள். தந்தை சொல் முன்னிட்டு அவர்கள் அனைவரும் குதிரையைப் பூ மண்டலமெல்லாம் தேடிக்காணாமல் பூமியைத் தோண்டத் தொடங்கினர். கீழ் தரை மட்டத்துக்குப் பள்ளம் பறித்தார்கள். இவ்வாறு கீழ்நோக்கி வெகுதூரம் தோண்டிய பிறகு வடகிழக்கு பாகத்தில் ஓரிடத்தில் கபிலர் என்ற முனிவர் அருகாமையில் குதிரையைக் கண்டனர். “இதோ இவன்தான் குதிரையைத் திருடினவன், கண் மூடிப் பாசாங்கு செய்கிறான். இப்பொழுதே இவனைக் கொன்றுவிடுவோம்’’ என்று கூக்குரல் இட்டுக்கொண்டு அவரை முன்னோக்கிப் பாய்ந்தனர். அச்சமயம் முனிவர் கண் திறந்தார். முன்னமேயே இந்திரனால் சபிக்கப்பட்டு முனிவரையும் அவமதித்த அரசகுமாரர்கள் தங்களுடைய உடலிலிருந்த நெருப்பினாலேயே சாம்பலாகி நசித்துப் போனார்கள். கபிலர் கோபங்கொண்டு அவர்களை எரித்தார் என்பது தவறு. வானத்துக்குப் புழுதியுடன் தொடர்பு ஏது? தமோ குணத்தைத் தவிர்த்து முற்றிலும் சத்துவமாய்த் துலங்கும் முனிவருக்குச் சினமென்பது ஏது?
அஸமஞ்சன் மகன் அம்சுமானனை சகரன் அழைத்து வெகுநாட்களுக்கு முன் காணாமற்போன குதிரையைத் தேடிப் பிடித்து வரும்படி கட்டளை இட்டான். அரசகுமாரனும் தனது மாமன்மார்கள் குறித்த பாதையைப் பின்பற்றிச் சென்றான். சாம்பல் குவியலுக்கு அருகில் குதிரை நிற்பதைக் கண்டான். தவம் இருக்கும் கபிலரையும் கண்ணுற்றான். அப்பெரியாரைப் பலவாறு தோத்திரம் செய்தான். அம்சுமானனுடைய மனப் பான்மையைத் தெரிந்த கபிலர் களிப்படைந்தார். அவனிடம் பேசலுற்றார்.
“குழந்தாய்! உன் பாட்டனார் ஆரம்பித்த அசுவமேதயாகத்துக்குரிய இந்தக் குதிரையை இழுத்துச் செல்வாய். இங்கு சாம்பலாய்க் கிடக்கும் உனது மாமன்மார்கள் கங்கையின் நீர்பட்டால் உயிர்பெற்று எழுவார்கள்’’ என்றார் என்கிறது இந்துமதம். சாம்பலான உடலில் கங்கை நீர் பட்டால் மீண்டும் உயிர் பெறுவர் என்பது முதல்தர மூடக் கருத்தல்லவா? இது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா?
இது உண்மையென்றால் இறந்தவர்கள் சாம்பலை இந்துக்கள் பலர் கங்கையில் கரைக்கின்றபோது, அந்த சாம்பல் உயிர் பெற வேண்டும் அல்லவா? அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடக் கருத்துகள் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்கவோம்)