இயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை

ஜூலை 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

 கி.வீரமணி

11.02.1988 வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அன்பைப் பொழிந்தனர். கடல் கடந்தும் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றும், தமிழ் உணர்வும் மிகுந்து நிற்பதைக் காண முடிந்தது.

மலேசிய _ சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு 26.02.1988 அன்று ‘சியா’ விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். கடந்த 20 நாட்களாக மலேசியா _ சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுக்கூட்டங்கள், திருமணங்கள், கலந்துரையாடல், குடும்ப விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவைகளில் நாள்தோறும் தொடர்ந்து கலந்துகொண்டு தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைப் பிரச்சாரத்தை மேற்கொண்டேன். என்னுடன் மதுரை மாநகர் திராவிடர் கழகத் தலைவர் பே.தேவசகாயம் அவர்கள் வந்திருந்தனர்.

எங்களை வரவேற்க சென்னை விமானம் நிலையத்தில், தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ‘திருச்சுடர்’ கே.ஆர்.இராமசாமி, கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, வழக்கறிஞர் கோ.சாமிதுரை,  மயிலை நா.கிருஷ்ணன், தென்சென்னை எம்.பி.பாலு உள்ளிட்டோர் ஏராளமான கழகத் தோழர்கள் உடன் வந்தனர்.

1978ஆம் ஆண்டில், இந்த பத்தாண்டு இடைவெளியில் பல மாற்றங்கள். அப்போது பெரும்பாலான நமது இல்லங்களில் பெண்கள் குடும்பத் தலைவிகளாக வீட்டிலேயே இருந்தனர். ஆனால், இப்போது எல்லாம் நமது தமிழ்ப் பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பெருக்குகிற காட்சியை காண முடிந்தது.

தனி மனித பொருளாதாரம் உயரும்போது சமுதாயத்தின் பொருளாதாரமும் உயரும் என்பதை நான் தோழர்களுக்கு விளக்கினேன்.

என்னுடைய மலேசிய சுற்றுப் பயணம் குறித்து அந்த நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடு ‘தமிழ்நேசன்’ நாளேடு 21.02.1988 அன்று அதன் கட்டுரையாளர் கு.சா.பெருமாள் அவர்கள் என் பயணம் குறித்து “பயன் மிக்காரின் பயனான பயணம்’’ என்ற தலைப்பில்,

‘தமிழ்நேசன்’ நாளேடு 21.2.1988 இதழில் கட்டுரையாசிரியர் கு.சா.பெருமாள் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதியிருந்தார்.

“மலேசியத் திருநாட்டுக்கு பலரும் விருந்தினர்களாக வந்து போகிறார்கள்.

ஆனால், எல்லாருமே தளபதி வீரமணிபோல தமிழ் சுவையும் சிந்தனை விருந்தும் அளித்து இந்தச் சமுதாயத்தை தெளிவுடன் அறிந்து செல்ல காலம் ஒதுக்கி வருவதில்லை.

எப்படியும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சிந்தனை மிகுந்த சீர்திருத்தச் செம்மலின் தெள்ளு தமிழ் சுவையைப் பருகும் நிலைமையை ம.தி.க. ஏற்படுத்தி வருகிறது.

இன்று நமக்குத் தேவை எல்லாம் எது சரி? எது பிழை? எது உண்மை? எது பொய்? என்பதை அடையாளம் கண்டுகொள்ளும் மனப்போக்குதான்.

அதற்கு உணவு அளிக்கும் பயணம்தான் -_ கருத்துக்கனல், கன்னித்தமிழ்க் காவலர், தந்தை பெரியாரின் தன்மானச் சுடர், இனமானம் பேசும் ஏந்தல் தளபதி வீரமணியாருடையதாகும்.

40ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வந்த அவர் நம்மவர் கூட்டங்களில் சிந்தனைத் தெளிவுக்காக சிறப்பாக சிலவற்றைச் சொல்லி வருகிறார்.

அவர் உருப்போட்டு உரையாற்றும் பட்டி மன்றப் பேச்சாளரல்லர். 300 கற்பனைக் குட்டிக் கதைகளை மனனம் செய்து அளந்துவிடும் பட்டி மன்றக் கதையாளரல்லர்.

இந்தச் சமுதாயம் எழுச்சியுடன் வாழவேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்கச் சிந்தனையாளர்.

இன்று தமிழகத்தில் எதையும் படித்தாய்ந்து ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் ஒரே கரிபால்டி கருத்துமிக்கார்.

உலகத்தில் தமிழினம் திராவிட பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதினை உயிர் மூச்சாய்க் கொண்டு வாழும் ஒப்பற்ற ஆய்வாளர்.

அவர் உடல் வாழ்வது தமிழருக்கு

அவர் உடல் வாழ்வது தமிழர்க்கு, அவர் உணர்வுகள் பேசுவது தமிழர்க்காக, அவர் உதிரம் தமிழர் மேம்பாட்டுக்கு மட்டுமே உரியது.

தனக்கென வாழா தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து முழுமையாக வாழும் அவருக்கு  உலகத் தமிழினம் போன்றே மலேசியத் தமிழினத்தின்பால் வற்றாத பற்றும் பாசமும்.

செய்தி வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் என் கருத்துகளைக் கேட்டால் போதும்! “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்பதற் கொப்ப _ நாட்டின் பட்டிதொட்டி யெல்லாம் மலேசியா மண்ணையும் தனது தமிழ் மண்ணாக நினைத்து தமிழ் உலா _ சிந்தனை விரிவுலா நடத்திவரும் அவரது உணர்வுக்கு நாம் தலைவணங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த 6ஆம் நாள் பிப்ரவரியில் மலேசியா வந்த அவர் தற்போது எங்கிருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. ஆம்! அவர் மலேசியாவில்தான் எங்கோ ஒரு கூட்டத்தில் தேன் தமிழைப் பொழிந்து கொண்டிருக்கிறார். முன்னேறும் சிந்தனைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

எந்தப் பணி நமக்கு இடையிடையே தேவை என நாம் கருதுகின்றோமோ அப்பணிக்கு அவர் வித்தூன்றி, எருவூட்டி, நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார்.

தந்தை பெரியார் தந்த பாராட்டு

தளபதி வீரமணியை கழகத்தின் பொதுச் செயலாளராக நியமித்து வரவேற்பு அறிக்கைவிட்ட தந்தை பெரியார். “திரு.வீரமணி நல்ல வருமானமுள்ள வக்கீல் தொழிலை விட்டு கழகத்துக்கு முழுநேரப் பணியாளராய் வருகிறார். அவரைப்போல வேறு யார் வந்தாலும் வரவேற்கிறேன். ஆண்கள் வந்தாலும் சரி,  பெண்கள் வந்தாலும் சரி, உடை, உணவு பெறலாம். அப்படி வருவோருக்காகக் காத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்து விடுதலையில் தீட்டிய வரிகளைப் படிக்கும்போது எத்தகைய மாபெரும் தியாக உணர்வோடு _ தந்தை பெரியாரின் லட்சியங்களில் அவர் விரும்பிய மனிதகுல மேம்பாட்டு திராவிடர் இன நல்வாழ்வில் தம்மை இணைத்துக் கொண்டார் என்பதை நன்கு உணர முடியும்.

எந்த உயர்ந்த லட்சியங்களால் ஈர்க்கப்பட்டு கழகத்துக்கு வந்தாரோ _ அதே லட்சிய உணர்வோடு தமிழகத்தில் மட்டுமல்ல, மலேசியத் திருநாட்டிலும் வேறு எந்த சுகவாழ்வுக்கும் தம்மை அடிமைப்படுத்திக் கொள்ளாமல் எளிய உணவு, உடை, அடக்க மிக்க உணர்வுகளோடு தமிழினப் பணியாற்றும் மனப்பாங்கை பொதுத் தொண்டில் உள்ளோருக்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுத்தி வருவதைக் காணும்தோறும் உள்ளம் புல்லரிக்கிறது.

தந்தை பெரியார் இந்நாட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் எப்படி ஏழ்மைத் தமிழனைக் காண அளவளாவ _ கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பினாரோ _ தமிழ்முனி குன்றக்குடியும், தவமிகு மதுரை ஆதினமும் எப்படி பெரியார் உணர்வு போன்றே அடித்தள தமிழனைக் காண, அவனது சிந்தனைத் தேக்கத்தை தூண்டிவிட விரும்பினரோ _ அதே பணியைத்தான் தளபதி வீரமணியும் அன்றும் இன்றும் செயல்படுத்த விரும்புகிறார் என்பதை நினைக்கும்போது அவர் பெரியாரின் பெருந்தொண்டர், முதற்தொண்டர் என்பதில் அனைவருமே உளமகிழ்வு அடைய முடிகிறது.

தளபதி வீரமணியின் பயணம் சமுதாயச் சந்தையில் மாற்றத்தையும் தெளிவையும் ஏற்படுத்துவதுடன், நமது சுயமரியாதை _ தன்மான உணர்வுகளுக்கு ஒரு உந்துதலை வழங்கும் பயணமாகும் என்பதில் சந்தேகமில்லை. பயனானவரின் பயன்மிக்க பயணம் என சமுதாயம் நன்றி பாராட்டுகிறது!’’ என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் அமையக் கூடாது. அதைத் தடுத்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம். அமெரிக்க உளவு நிறுவனமான சி.அய்.ஏ.வின் ஒரு பிரிவின் அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர் நிக்சன் ஆலோசனைப்படி செய்யப்பட்டதே இந்த ஒப்பந்தம். 29.07.1987 அன்று இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு, குறிப்பாக தமிழ்ப் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் இழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம். அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவமே அக்கொடுமைகளைச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை! இவற்றைக் கண்டித்து திராவிடர் கழகம் ஒவ்வொரு நாளும் போராடி வந்தது. இதனைப் பாராட்டி மேற்கு ஜெர்மன் நாட்டில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அமைப்பு சார்பில் மேற்கு ஜெர்மன் கிளை பொறுப்பாளர் ந.சுரேந்திரகுமார் கீழ்க்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார்.

“உலகத் தமிழினத்தின் பேரன்பிற்கும், மதிப்பிற்குமுரிய வீரமணி அவர்கட்கு, மேற்கு ஜெர்மன் வாழ் தமிழீழ மக்கள் சார்பாக இம்மடலை எழுத முனைகிறேன். குறைகளை விலக்கி, நிறைவுகளைக் கண்ணோக்கி, எனது மடலை நுகர்வீர்களெனும் திடமான நம்பிக்கையில் தொடர்கின்றேன்.

இரத்தத்திலும், கண்ணீரிலும் தோய்ந்து நிற்கும் எம் தமிழீழ மக்களின் வரலாறு இன்னமும் விடிவின்றி முடிவில்லா நீண்ட பயணமாய் தொடர்ந்து செல்கின்றது. சமாதானம் என்ற முகமூடியணிந்த இந்திய மத்திய அரசின் நரவெறியாட்டம் தொடர்கிறது. விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்து வரும் இந்திய மத்திய அரசு இரத்தம் தோய்ந்த கைகளுடன் நர்த்தனமாடுகின்றது. இந்நிலையிலும்கூட இழப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றுமில்லாத தமிழீழ மக்கள், விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரண்டு விடுதலைப் புலிகளுக்குப் பூரண ஆதரவளித்து வருகின்றார்கள். விடுதலைப் புலிகள் மரணத்தின் விழிம்பில் நின்றாலும்கூட இலட்சியப் போரை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள்.

இந்திய மத்திய அரசின் மனிதாபிமானமற்ற இக்கொடுமைகளை முழு நாகரீக உலகமுமே கைகட்டிப் பார்த்து நிற்கையில், தேசாபிமான சித்தாந்தத்திற்கு பால், இன உணர்விற்கும், சுதந்திர உணர்விற்கும், மனித உணர்விற்கும் முக்கியத்துவமளித்து, தமிழீழத்தில் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க நீங்கள் அன்றும் இன்றும் நடத்திவரும் வெகுஜனப் போராட்டங்கள் _ தற்காப்பு யுத்தத்தை நடத்திவரும் விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் தமிழீழ மக்களிற்கும் நம்பிக்கை ஒளி தரும் கலங்கரை விளக்கமாக உள்ளது. தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புக் கவசமான தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தை நிச்சயமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. ஆனாலும் தமிழீழ மக்களையும், தங்களையும்  பாதுகாக்கும் உயிர்த் துடிப்பே இந்த யுத்தமாகும்.

தமிழ்நாட்டில் எமது உடன்பிறப்பான நீங்களும், உங்கள் கழகத் தொண்டர்களும், உங்களின் பின்னால் அணி திரண்டுள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்களும் இருக்கின்ற வரையில் _ தமிழீழ விடுதலைப் போரை எந்த வல்லரசு சக்தியும் அழிக்க முடியாது. ஆகவே, நீங்கள் மேற்கொள்ளும் வெகுஜனப் போர் வடிவங்கள் தமிழீழ மக்களிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மேலும் உற்சாகத்தையும், உறுதிப்பாட்டையும் அளிக்கட்டும். தமிழகத்தின் எழுச்சியானது டெல்லி ஆட்சியாளரை நிலைகுலையச் செய்யட்டும். அவர்களின் மனச் சாட்சியை உறுத்தட்டும். அந்நிலை அவர்களை சமாதானத்தின் பாதைக்குத் திருப்பட்டும்.

வாழ்க தமிழ்! “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய _ சிங்கள ராணுவத்தின் இருமுனைத் தாக்குதல்களும் தமிழர்கள் மீது துவங்கிவிட்டன. இதனைக் கடுமையாகக் கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து 7.3.1988 அன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டேன்.

பெரியார் திடலில் பொறியாளர் குமாரசாமி உருவப்படத்தை திறந்து வைக்கும்

ஆசிரியர் கி.வீரமணி உடன் கழகத்தினர்

சென்னை பெரியார் திடலில் 05.03.1988 அன்று அய்-.ஏ.எஸ்., அய்.பி.எஸ். கோச்சிங் சென்டர் தொடக்க விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினேன். அப்போது, “நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே ‘தி பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். கோச்சிங் சென்டர்’ என்று சொல்லக்கூடிய இந்தத் தேர்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சி உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்வாகும்.

முதல்முறையாக இங்கு துவக்கப்டவில்லை. ஏற்கனவே ஒருமுறை இந்த முயற்சியை காலஞ்சென்ற டாக்டர் இராமசாமி எம்.ஏ., பி.எச்.டி. அவர்கள் பொறுப்பேற்று மாணவர்களை தயாரித்தார்கள். அதிலே ஒரு மாணவர் புகுமுக அளவு வரையிலே சென்றார்கள். ஆனால், அது வளரக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்ட நிலையிலே அவர்கள் இயற்கையின் கொடுமையினால் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள்.

வளர்ந்துகொண்டிருந்த ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்ற தந்தை பெரியாருடைய அறக்கட்டளையின் சார்பாக எத்தனையோ அமைப்புகள், எங்களால் உருவாக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் பெரியார் திடலிலே ‘தந்தை பெரியார் தத்துவ கொள்கை பரப்பும் பன்னாட்டு மய்யம்’ என்று இருக்கிறது. யார் அடித்தளத்தில் இருக்கிறார்களே அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காத ஒரு நல்ல வாய்ப்பு. அதை நீங்கள் நல்லவண்ணம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளை நான் கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தேன்.

பொறியாளர் பொ.குமாரசாமி

தமிழ்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியும், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான பொறியாளர் பொ.குமாரசாமி அவர்கள் 09.03.1988 அன்று திருவனந்த புரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன். 10.03.1988 அன்று இரங்கல் அறிக்கையை வெளியிட்டேன். அதில் சீரிய பகுத்தறிவாளரான பொறியாளர் பொ.குமாரசாமி, தந்தை பெரியார் அவர்களாலும், அறிஞர் அண்ணா அவர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றவர்.

தந்தை பெரியார் அவர்களது சமுதாயப் புரட்சிக் கருத்துகளை எங்கேயும் துணிவுடன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது கூறிவந்த சுயமரியாதை வீரர். பகுத்தறிவாளர் கழக புலனாய்வுப் பிரிவுத் தலைவர் அவர் என்று அந்த இரங்கல் அறிக்கையில் தெரிவித்து இருந்தேன். அவரது உடலுக்கு நேரில் சென்ற மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். (பொறியாளர் பொ.குமாரசாமி நாவலருக்கு உறவினர்.)

ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரை சந்தித்து

ஆளுநர் ஆட்சியில் சமூகநீதித் தத்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என மனுக்கொடுக்கும் ஆசிரியருடன் கழக பொறுப்பாளர்கள்

 அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்ததையொட்டி 09.03.1988 அன்று கழகத்தின் சார்பில் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரை சந்தித்து, ஆளுநர் ஆட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளிலும் சமூகநீதித் தத்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் மனுவை கொடுத்தேன். குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு தாழ்த்தப்பட்ட _ பிற்படுத்தப்பட்ட மைனாரிட்டி சமூகத்தினருக்கு வாய்ப்புகள் தரவேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தி வந்தோம்.

சமநீதி பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் மண்ணின் மைந்தனுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும் என்ற சிந்தாந்தத்தின்படியும் தாழ்த்தப் பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினோம் என்ற அந்த மனுவில் குறிப்பிட்டோம்.

தமிழினத்தின் தன்னிகரற்ற இசை மாமன்னராக விளங்கிய, உலகின் அனைத்துப் பகுதியிலும் தமிழிசையினைப் பரப்பி, தமிழினத்தின் ஒளிமுத்தாய் விளங்கிய நம் அருமை சகோதரர் டாக்டர் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் 23.03.1988 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி நமக்குப் பேரிடியான செய்தியாகக் கிடைத்தது. 24.03.1988 அன்று காலை ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். ‘சீர்காழி’ அவர்கள் தமிழர்களின் கல்வி வாழ்வுக்கு அடித்தளமான தண்ணார் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்பு அதே இசைக் கல்லூரிக்கு முதல்வராகும் அளவிற்கு டாக்டர் பட்டம் பெற்ற மாபெரும் இசை மேதை!

தந்தை பெரியார் அவர்களிடமும், அவர்தம் இயக்கத்திடமும் பரிவும் _ பாசமும் கொண்டவர். பண்பின் உறைவிடம் _ நயத்தக்க நாகரிகம் கொண்ட செம்மல்.

நான் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். இவரது செல்வன் இன்னிசை இளவரசர் டாக்டர் சிவ.சிதம்பரம் அவர்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பினேன். தமிழ்நாட்டு மக்களிடம் தமிழன் பணத்தால் வியாபாரம் செய்யும் ஒரு பத்திரிகை  ஒரு தமிழ் இசைக் கலைஞனை சீர்காழி அவர்களை, இப்படி பச்சைப் பார்ப்பன வெறியோடு அவமானப்படுத்தியது. இதற்குப் பெயர்தான் பார்ப்பன புத்தி!

இதையும் சுட்டிக்காட்டி ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தேன். அதே வேளையில் கருநாடக இசைப் பார்ப்பனர் டாக்டர் இராமநாதன் இறப்புச் செய்தியை மட்டும் மிகப் பெரிதாக ‘இந்து’ பத்திரிகை வெளியிட்டது என்பதைப் பாருங்கள். இரண்டையும் தனித்தனியாக 24.03.1988 இந்து நாளேட்டிலிருந்து தனியாக போட்டிருந்தது. பாருங்கள்! இந்து ஏட்டின் பார்ப்பன புத்தி! என்று வன்மையாகக் கண்டித்து எழுதினேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தங்கை சுசீலா அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர். (கவிஞர் தங்கை சுசீலா)

 கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தங்கையும், அ.கார்த்திகேயன் அவர்களின் துணைவியாருமான சுசீலா எம்.ஏ., பி.எட்., அவர்கள் இயற்கை எய்தியதை ஒட்டி, அவருடைய உருவப் படத்திறப்பு விழா நிகழ்ச்சி 25.03.1988 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

24-3-1988 விடுதலையில் இந்து ஏட்டின் பார்ப்பன புத்தியை வெளிப்படுத்திய செய்தி

இப்படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் தலைமை வகித்தார். நான் சுசீலா அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, மறைந்த சகோதரி, ஆசிரியை சுசீலா மாணவப் பருவந்தோட்டே கொள்கைவாதியாகவும், பேச்சாளராகவும் விளங்கிய நல்ல தொண்டர், அவர் நம்மை விட்டு உணர்வால் மறையவில்லை. நமது கல்வி வளாகத்தில் உள்ள நர்சரிப் பள்ளிக்கு சுசீலாவின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து உரையாற்றினேன்.

02.04.1988 அன்று சென்னை பெரியார் திடலில், காஞ்சி சங்கராச்சாரி பற்றிய ‘Saint or Sectarian?’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஆங்கிலத்தில் வெளியான நூலினை கர்நாடக முன்னாள் அமைச்சர் பசுவலிங்கப்பா வெளியிட, மலேசிய ‘திருச்சுடர்’ கே.ஆர்.இராமசாமி நூலினை பெற்றுக்கொண்டார்.

‘Saint or Sectarian?’ ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி, திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி

திரு.பவசலிங்கப்பா அவர்கள் பேசும் பொழுது, ‘‘நான் காங்கிரஸ்காரன்தான்; ஆனால், பெரியார் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவன்’’ என்று குறிப்பிட்டார்கள். நான் உரையாற்றும்போது, “இந்த நூலிலே சொல்லப்படுகின்ற கருத்துகளுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்பதை முதலாவது அறிவிக்கக் கடமைபட்டிருக்கிறேன். ஏனென்றால், இது தமிழிலே வந்தவுடனே சில பேர் இதைத் தடைசெய்ய வேண்டும். நீதிமன்றத்திற்கு நாங்கள் போவோம்; அவரை நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைப்போம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆங்கிலத்தில் வரும்போது, அது அகில உலகமே போகின்ற காரணத்தால் _ சுப்ரீம் கோர்ட்டுக்கே என்னை அழைப்பார்கள் என்று நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்; அப்படி அழைத்தால் அதைவிட பொன்னான வாய்ப்பு நம்முடைய வாழ்நாளில் வேறு எதுவும் இல்லை என்ற நான் கருதுகிறேன்’’ என்று குறிப்பிட்டேன்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *