எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா?

ஜூலை 16-31 2019

நேயன்

பெரியார் என்றாலே கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாய் மூன்று முறை சொல்லி உறுதிபடக் கூறியவர்; பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்பதைச் சின்னக் குழந்தைக்கூட சொல்லும். உண்மை அப்படியிருக்க இந்த அயோக்கிய சிகாமணி எப்பேர்ப்பட்ட அபாண்டப் புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் பாருங்கள்.

இதற்கு அவர் காட்டும் ஆதாரமே மோசடியானது என்ன ஆதாரம்?

கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை, ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு என்றார் என்று பெரியார் கூறியதாக விடுதலையை ஆதாரமாகக் காட்டி கூறுகிறார்.

ஆரிய ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதிகளின் பித்தலாட்ட மோசடிப் பிரச்சாரத்திற்கு இது ஒரு சரியான சான்று. பெரியார் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பில் 24.5.1959இல் பேசியபோது குறிப்பிட்டவற்றில் முக்கியமான பகுதியை நீக்கிவிட்டு தனக்குத் தேவையான பகுதியைக் கத்தரித்து ஒட்டி இம்மோசடிப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார்.

உண்மையில் பெரியார் பேசியது என்ன? “இந்து மதத்தில் ஒழுக்கமான கடவுள் ஏதாவது இருக்கிறதா? அன்பான சிவன் என்கிறாய் எது அன்பானது? கையிலே வேலாயுதம், இடுப்பிலே புலித்தோல், கழுத்திலே பாம்பு, மண்டை ஓடு பல பேரைக் கொன்றது, எப்படி அன்பான சிவன் ஆக இருக்க முடியும்?

பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள்! உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் என்ன செய்வாய்? சம்மதிப்பாயா? உதைக்க மாட்டாயா? அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுள்தானே இருக்கிறது? பிள்ளைக்கறி கேட்கிறது சாமி! பெற்ற பிள்ளையை கொல்வது பக்தியா?

அனுசுயா பத்தினியாக இருக்கிறாள். அவளைக் கற்பழிக்க வேண்டும் என்று நாரதர், சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லோரும் போகிறார்கள். அவள் இவர்களை குழந்தையாக மாற்றி தொட்டிலில் போட்டுவிட்டாள்! அடுத்தவன் மனைவி பத்தினியாய் இருப்பதைக் கெடுக்க கற்பழிக்கப் போனவர்களெல்லாம் கடவுளா?

இப்படிப்பட்ட கடவுளை ஏற்கலாமா? வணங்கலாமா? என்று பலவாறு கேட்டுவிட்டு, பக்தியை விடமுடியவில்லை. கடவுளை வணங்கித்தான் தீருவேன் என்று கடவுளை நம்புவதில் பிடிவாதமாய் இருப்பவர்களைப் பார்த்து, கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன் மாதிரி, முஸ்லீம் மாதிரி கும்பிடு. தொலையட்டும், பரவாயில்லை. இப்படிக் காட்டுமிராண்டித்தனமான கடவுளை வைத்துக்கொண்டு அதற்கு பல சடங்கு பூசைகளை இந்த 1959ஆம் ஆண்டில் செய்யலாமா?’’ என்று பேசினார்.

இந்தப் பேச்சில் தனக்குத் தேவையானதைக் கத்தரித்து எடுத்துக்காட்டி, பொருத்தம் இல்லாதவைகளை அங்கொன்றும் இங்கொன்றும் பற்பல வெட்டல் ஒட்டல் வேலைகளைச் செய்து பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக்கொண்டது போலவும், அதுவே அவர் கொள்கை போலவும் காட்ட முயலும் இந்த மோசடிப் பேர்வழி எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தியுங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்.

அவர், கடவுளை கும்பிட்டே தீருவேன் என்பவர்களை பார்த்து, “அப்படி கடவுளை வணங்கித்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து, அயோக்கிய கடவுளை விட்டுவிட்டு யோக்கியமான ஒரு கடவுளை வணங்கித் தொலை’’ என்றதான் கூறினார். ஒரேயடியாக எல்லா மக்களும் ஒரே நாளில் கடவுளை மறுத்துவிட மாட்டார்கள். அப்படியிருக்க, சீர்கேட்டை அகற்றி முட்டாள்தனத்தை முடிந்த மட்டும் குறைக்கும் முயற்சியில் அவர் கூறியதைக் காட்டி அவர் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டார் என்பது திரிபுவாதமல்லவா?

பெரியார் சொன்னதில் ‘தொலையட்டும், பரவாயில்லை’ என்ற வார்த்தைகளே முதன்மையானவை. ஒரு கடவுளை வணங்கித் தொலை என்றால் ஏற்றுக்கொண்டார் என்று பொருளா? அவர் ஏற்கவில்லை என்றாலும் பிடிவாதமான மக்களுக்கு அவர் சொன்ன அறிவுரை. அவ்வளவுவே!

கடவுள் கருத்தில் பெரியாருக்குள்ள கருத்துகளையே அம்பேத்கரும் கொண்டிருந்தால் அதனால்தான் இந்து மதத்தை விட்டு, கடவுளை மறுக்கும் புத்த மதத்தை ஏற்றார். மற்றவர்களையும் ஏற்கும்படி பிரச்சாரம் செய்தார். உண்மை இப்படியாக அம்பேத்கர் பல கடவுளை ஏற்றுக்கொண்டது போல இவர் காட்ட முயல்வது மோசடியானது. (கடவுள் ம-றுப்பு பற்றி புத்த தம்மம் நூலில் விரிவாகக் காணலாம்.)

ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதியல்ல. ஆனால், அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி என்பது மூன்றாவது மோசடிப் பிரச்சாரம்.

இப்படியொரு கருத்தைச் சொல்லி இருவரும் முரண்பட்டக் கொள்கையையுடையவர்கள் என்று காட்ட முயலுகிறார் இவர். இதற்கு பெரியார் குடியரசில் எழுதிய கட்டுரையைக் காட்டுகிறார்.

பெரியார் அக்கட்டுரையை எழுதியது ரஷ்யாவின் கம்யூனிச தாக்கத்தால் கவரப்பட்டு, கம்யுனிசக் கொள்கைகளை பரப்ப முயன்ற நேரம். எனவே, இரஷ்யாவில் உள்ளது போன்ற ஆட்சி முறையை விரும்பி,

லெனின் ஆட்சிதான் மனித தர்மத்திற்கு உகந்த மனித நாயக ஆட்சியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்த சீர்திருத்தம் கொடுத்து எந்த ஜனநாயக ஆட்சி கொடுத்து நடத்தினாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சியாக இருக்க முடியாது என்று கூறுகிறார்.

இரஷ்ய ஆட்சி முறையில் ஏற்பட்ட புரட்சிகர மாறுதலால் கவரப்பட்டே பெரியார் இரஷ்யா சென்றார். இரஷ்யா செல்லும் முன்னமே பெரியாருக்கு கம்யூனிசம் பற்றியும், ரஷ்யா பற்றியும் உயர் எண்ணம் இருந்தது.

அப்படியொரு ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே ஜனநாயகம் வேண்டாம் என்றார். சின்னாபின்னமாக்கப்பட்டு, சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ, சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜனநாயகம் என்பது ஏற்றதல்ல. பல மதமாய், ஜாதியாய், வகுப்பாய் பிரிந்து கிடக்கும் 100க்கு 10 பேருக்குக் கூட கல்வியறிவு இல்லாமலிருக்கும் இந்தியாவிற்கு இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்றார்.

இந்திய நாட்டில் உள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாக மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடாதவர்களாக -_ தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோவில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ, சில பொதுவிடங்களில் சென்று படிக்கவோ, கூலிவேலை செய்யவோ, உத்தியோகம் பார்க்கவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் உரிய விடிவை ஜனநாயகம் மனித வர்க்கத்திற்குக் கொடுக்கக் கூடியதா? அல்லது அடிமைத்தனத்தைக் கொடுக்கக் கூடியதா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இன்று நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது நமது தேசம், நமது மதம், நமது ஜாதி என்ற தத்துவத்தின் மீதும், முதலில் தேசம் என்ற பலரும், முதலில் மதம் என்று பலரும், முதலில் ஜாதி என்ற அநேகரும் கருதியே ஜனநாயகத் திட்டங்களை வகுக்கின்றனர். முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்நாட்டில் மகாத்மா முதல் மாணவர்கள் வரையில் யாருக்காவது இருக்கிறதா?

                                                                  (தொடரும்…)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *