மஞ்சை வசந்தன்
தமிழர்களின் நீண்டகால வாழ்வியலை பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆராய்கின்றபோது அவர்களின் தொன்மை வாழ்வில் _ ஆரியர் வந்து கலப்பதற்கு முன் _ ஜாதியில்லை, கடவுள் இல்லை, மூடப் பண்டிகைகளோ, மூடநம்பிக்கைகளோ இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். (பிற்கால சங்க காலத்தில் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பு ஊடுருவியது.)
பிழைக்க வந்த ஆரியச் சிறுபான்மையினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தவும் கடவுள், ஜாதி, சடங்குகள், பண்டிகைகள் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்கள் மீது திணித்தனர்.
தமிழர்கள் நன்றியின்பாற்பட்ட வணக்கத்தை மட்டுமே கொண்டிருந்தனர். நிலத் தலைவர், பத்தினிப் பெண்டிர், வீரர்கள், பயன்பாடுடையவை என்றே மதித்து நன்றி செலுத்தினர். மற்றபடி எந்த மூடநம்பிக்கைகளோ, சடங்குகளோ அவர்களின் வாழ்வில் இல்லை.
அறுவடை விழாவான பொங்கல் விழா மட்டுமே தமிழர் விழாவாகும். உற்பத்திக் காரணிகளான மழை, சூரியன், மாடு, வேலையாட்களுக்கு நன்றி சொல்லும் பண்டிகையாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.
அப்படிப்பட்ட பகுத்தறிவுடன் கூடிய பண்பாட்டு வாழ்விற்குரிய தமிழர்களிடையே, பின்னாளில் வந்த ஆரியர்கள் தங்கள் ஆதாயத்திற்கும் ஆதிக்கத்திற்கும் கடவுள், சடங்கு, பண்டிகைகளை உருவாக்கி தமிழர்கள் கொண்டாடும்படிச் செய்தனர்.
பண்பாட்டை அழித்த பண்டிகைகள்
மருத்துவம், வானியல், கடல் பயணம், கணிதம், அறிவியல், கட்டுமானம், கலை, இசை என்று எல்லாத் துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அறிவும், நுட்பமும், வளர்ச்சியும் பெற்று உலகிற்கு வழிகாட்டியாய் விளங்கிய தமிழர்கள், கடவுள், மதம், சடங்கு, பண்டிகை, புராணம், இதிகாசம் போன்ற மடமைக்குப் பலியாகி தங்கள் ஆளுமை, திறமை, வீரம் ஆகிய எல்லாவற்றையும் இழந்து ஜாதிப் பிரிவாகச் சிதறுண்டு, சாஸ்திர சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாயினர் _ சூத்திரர்களாயினர்.
இந்த இழிநிலை திராவிடர் இயக்கம் உருவாகும்வரை தொடர்ந்தது. பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான தந்தை பெரியாரின் பெரும் முயற்சியால், பிரச்சாரத்தால், போராட்டங்களால், வழிகாட்டலால், தமிழர்கள் விழிப்புப் பெற்று, ஓரளவிற்கு இழிவகற்றி, கல்வி, வேலைவாய்ப்புகளில் உயர்ந்தனர். திராவிட இயக்கத்தின் ஆட்சிக்குப் பின் இன்னும் நிலை மேம்பட, ஆரிய பார்ப்பனர்களையே கல்வி, நிருவாகம், அறிவாற்றல் போன்றவற்றில் தமிழர்கள் வென்றும் சாதித்தும் காட்டினர்.
இதனால் ஆத்திரமுற்ற ஆரிய பார்ப்பனர்கள் பல வகையாலும் முயன்று தோற்றனர். ஆரியர் அல்லாதார் பல வகையில் விழிப்புற்று உயர்ந்தாலும் கடவுள், பக்தி, சடங்கு, விழா போன்றவற்றிலிருந்து விடுபட முடியாமலே வாழ்ந்தனர்.
இராமாயணம், மகாபாரதம், தீபாவளி, நவராத்திரி என்று பண்டிகைகளை விடாமல் கொண்டாடச் செய்வதன்மூலம் ஆரியர் அல்லாதாரை தங்கள் கட்டுக்குள் வைத்து, பின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர முடியும் என்கிற சூழ்ச்சியோடு வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் ஊடகங்கள் வழியாக மதப் பண்டிகைகளை தொடர்ந்து கொண்டாடும்படிச் செய்துவருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி
இவர்கள் கூறும் சாஸ்திரப்படி கிருஷ்ணபட்சம் ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்ததை எண்ணி குழந்தைகளுக்காக விரதம் இருப்பது என்பதேயாகும். ஆனால், நடப்பது என்ன? கொண்டாடப்படும் முறை என்ன?
உறியடி கொண்டாட்டம் எனும் பெயரில் ஊரில் பொதுவெளியில் ஆர்ப்பாட்டம், அடாவடிச் செயல்கள்.
உறியடியின் தத்துவம் என்ன? கண்ணன் வீடுவீடாய் வெண்ணைத் திருடித் தின்றான் என்பதுதானே? திருட்டுத்தனத்திற்கு ஒரு விழாவா?
அனுமன் ஜெயந்தி
அனுமன் பிறப்பைக் கொண்டாட ஒரு விழா! இப்போது இந்து மதத்தின் மூலம் அரசியல் பண்ண முற்படும் இந்து பரிவார் அமைப்புகள் இதை பரப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அனுமன் பிறப்பு என்ன?
அறிவுக்கும், மாண்புக்கும் அதில் கொஞ்சமாவது இடம் உண்டா? மிகக் கேவலமான ஒரு பிறப்பை கொண்டாடுவதை விட கேடு வேறு இருக்க முடியுமா?
அஞ்சனை என்னும் பெண் கேசரி என்பவனை மணந்து வாழ்ந்தாள். அப்போது ஒருநாள் வாயு இவளது அழகில் மயங்கி அவளுடன் உடலுறவு கொள்ள அதில் பிறந்தவன் அனுமன் என்கிறது இந்துமத புராணம்.
ஆக, வேறு ஒருவன் பெண்டாட்டி அழகாய் இருந்தாள் என்பதற்காக வாயு அவளைப் புணருகிறான். இதுவே அயோக்கியத்தனம். அடுத்தவன் பெண்டாட்டியைப் புணர்வதுதான் வாயு பகவானுக்கு அழகா? அது மட்டுமல்ல. வாயு என்றால் காற்று. காற்று ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டு பிள்ளை பிறக்கிறது என்பது எவ்வளவு பெரிய மடமை. இந்த ஒழுக்கக் கேட்டிற்கும், மானக் கேட்டிற்கும், அறிவுக் கேட்டிற்கும் ஒரு விழா வேண்டுமா?
இந்த விழாவைக் கொண்டாடி இந்தச் சீர்கேடுகளையெல்லாம் பரப்பப் போகிறார்களா?
இப்படிப்பட்ட கேவலத்தைக் கூட பாராமல் அவர்கள் விழா கொண்டாடுவதன் நோக்கம் என்ன? 100அடி, 150 அடியில் அனுமன் சிலை வைத்து, அதை வைத்து மக்களைக் கவர்ந்து அவர்களை முட்டாளாக்குவதற்குத்தானே?
நாரதர் ஜெயந்தி
வால்மீகி பிரம்மாவுக்குப் பிறந்தவன் நாரதன் என்று மட்டுமே புராணக் குறிப்புகள் உள்ளனவே தவிர நாரதர் என்றைக்குப் பிறந்தார் என்ற குறிப்புகள் இல்லை. அதேபோல் வால்மீகியின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் இல்லை. பிறந்த நாளே தெரியாத போது பிறந்த நாள் கொண்டாடுவது எந்த அடிப்படையில்? நாரதர் ஜெயந்தி வான்மீகி ஜெயந்தியெல்லாம் இதற்கு முன் இல்லை. எல்லாம் இவர்கள் திட்டமிட்டு உருவாக்குபவையே.
மகாமகத்தை மாற்றினார்கள்!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் வரும். கும்பகோணம் குளத்தில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் என்ற பிரச்சாரத்தை நம்பி மக்கள் அதில் முண்டியடித்து மூழ்குவார்கள்.
செத்துப் போன ஜெயேந்திர சங்கராச்சாரி அதையும் அவர் விருப்பப்படி மாற்றினார். ஒரு நாள் அல்ல மேலும் சில நாள்கள் குளத்தில் மூழ்கலாம் என்று அனுமதியளித்தார். இதற்கு எந்த சாஸ்திரத்தில் இடம் உள்ளது? மக்கள் கூடுகிறார்கள் என்றதும் அதை வைத்து இவர்கள் ஆதாயம் அடைய விழா நாளை நீட்டித்துக் கொள்கிறார்கள்!
அது மட்டுமல்ல; அப்படி மூழ்கும் அந்தக் குளத்தில் மலமும் மூத்திரமும் அதிக அளவில் கலந்துள்ளதை சுகாதாரத்துறையே அறிக்கையில் கூறியிருந்தது. இப்படி மலம் கலந்த மூத்திரச் சேற்றில் மூழ்குவதுதான் புண்ணியமா?
புஷ்கர விழா என்னும் புதிய இறக்குமதி
காவிரியில் மூழ்கினால் புண்ணியம்; தாமிரபரணியில் மூழ்கினால் புண்ணியம் என்று ஒரு புது கதையை புஷ்கர விழா எனும் பெயரில் உருவாக்கி அண்மைக்காலமாக ஆதாயம் அடைகின்றனர் ஆரிய பார்ப்பனர்கள்.
காவிரியில் புஷ்கர விழா நடத்தியவர்கள் அடுத்து தாமிரபரணியில் பெரிய கூட்டத்தைக் கூட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
ஆற்றிலே தண்ணீர் வர வழிசெய்ய முடியாத இந்த காவி ஆட்சியில், புஷ்கர விழா நடத்தி மக்களை மடையராக்கி இந்து மதம் என்கிற போர்வையில் வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது தமிழகத்தில் நிறைவேறவில்லை.
புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும், வாழ்வு சிறக்கும், வளம் சேரும் என்று எவனாவது சொல்லிவிட்டால் உடனே முண்டி அடித்துக்கொண்டு கூட்டம் கூடுவது பாமரன் முதல் படித்தவன் வரை எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது.
அது எப்படி புண்ணியம் ஆகும்?
எப்படி அது வாழ்வை வளமாக்கும்? ஒருவரும் சிந்திப்பது இல்லை!
புஷ்கரம் என்றால் என்ன?
குரு கிரகம் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு இராசிக்கும் இடம் பெயர்வதாய் சோதிடம் கூறும்.
ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசியை வைத்துள்ளான் நம்ம ஆள். கங்கை_மேஷம், நர்மதை_ரிஷிபம், யமுனை_கடகம், கிருஷ்ணா_கன்னி, காவிரி_துலாம் என்று 12 நதிகளுக்கும் 12 ராசிகள். குரு எந்த இராசிக்குச் செல்கிறதோ அந்த இராசிக்குரிய நதிக்கு புஷ்கர விழா. அந்த நதியில் மூழ்கினால் புண்ணியம் என்கிறார்கள்!
தற்போது துலாம் இராசியிலிருந்து குரு விருச்சிக ராசிக்குச் செல்வதை வைத்து விருச்சிக இராசிக்கு உரிய நதியான தாமிரபரணிக்கு புஷ்கர விழா.
12 இராசிக்கு குரு சென்று வர 12 ஆண்டுகள் ஆகும். எனவே, 12 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நதிக்கு புஷ்கர விழா வரும். 12 ஜ் 12 = 144 ஆண்டுக்கு ஒருமுறை வருவது மகா புஷ்கர விழா.
அண்மையில் அக்டோபர் 11 முதல் 22 வரை விழா நடந்தது. 12 நாள்களும் பிரம்மா தன் கையில் உள்ள அமிர்த கலசத்தை (புஷ்கர கலசம்) குரு பகவானிடம் தருவான். குரு பகவான் அந்தப் பாத்திரத்தில் உள்ள அமிர்தத்தை தாமிரபரணியில் ஊற்றுவார். அமிர்தம் அந்த நதியில் கலந்து ஓடும். அதில் நீராடினால் அந்த அமிர்தம் நம்மைச் சேரும் என்றனர்.
அது மட்டுமல்ல; இந்த 12 நாள்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும், சித்தர், மகான்கள், நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள் எனவெல்லாம் தாமிரபரணியில் டேரா (முகாம்) போடுவார்களாம்! எனவே, அங்கு மூழ்கினால், எல்லா பாபமும் தீருமாம்; வாழ்வு செழிக்குமாம்!
ஆக, தாமிரபரணிக்குப் போனால் எல்லோரையும் பார்த்துவிடலாம் என்கிறார்கள். இதைவிட பித்தலாட்டம் வேறு உண்டா? போய்ப் பார்த்தபோது அங்கு எந்தக் கடவுளும், தேவரும் இல்லையே! அமிர்தம் ஊற்றப்படுவதை பார்க்க முடியுமா? எவ்வளவு பெரிய மோசடி!
வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் தாமிரபரணிக்கு வந்து கூடுகிறதாம்! அப்படியென்றால் உலகமே இருண்டுவிடுமே! அண்ணாந்து பார்த்தால் எந்த நட்சத்திரமும் இருக்கக் கூடாதே! அண்ணாந்து பார்ப்போமா?
தாமிரபரணி வரலாறு உலகமகா மோசடி!
பொதிகைக்கு வந்த அகத்திய முனிவர் கழுத்திலிருந்த தாமரை மலர் மாலை அவிழ்ந்து விழுந்து அழகிய பெண் குழந்தையாகி, நதியாக உருமாறினாளாம். அதுவே தாமிரபரணியாம்.
நதியென்பது மலையிலிருந்து விழும் அருவி நீரின் ஓட்டம் என்பது உண்மை. ஆனால், தாமரை மலர் பெண்ணாகி அது நதியானது என்கிறது ஆர்.எஸ்.எஸ்., இந்து மதக் கூட்டம்!
இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு விழா? இதற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம்?
இந்த வரிசையில் அண்மையில் ஆரிய பார்ப்பனர்களால் ஆர்ப்பாட்டம் செய்யப்படுவது அத்திவரதர்.
அத்திவரதர் கதை என்ன?
ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ எனும் திருப்பெயர் கொண்டார்.
ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார். எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.
பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார். அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க அனந்தசரஸ் புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.
ஆதியில் தோன்றிய அத்தி வரதர் நீருக்கடியே துயிலில் இருக்கிறார். பிரம்மதேவருக்குப் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு பெருமாள் மேலே எழுந்தருளுவார். சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்றும், இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்று ஆசை காட்டப்படுவதால், அந்த ஆசையில் அறியாமையில் கிடக்கும் பாமரர்களும், படித்தவர்களும் அங்குக் கூடுவது நிகழ்கிறது! 1939 மற்றும் 1979ஆ-ம் ஆண்டுகளில் அத்தி வரதர் மேலே கொண்டு வரப்பட்டார். தற்போது 2019இல் மேலே கொண்டு வரப்பட்டுள்ளார்.
அத்திவரதரால் அடிதடி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அத்தி வரதர் விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள், காவல்துறையின் கெடுபிடியால், புதனன்று (ஜூலை 3) டாடா மேஜிக் வாகன ஓட்டுநர் குமார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் இறப்பிற்கு காவல்துறையின் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணமாகும். மேலும் அத்துமீறல்களை மூடிமறைக்கவும் காவல்துறையினர் முயல்வதாக தெரிகிறது.
தமிழக அரசும், மாவட்ட நிருவாகமும் இப்பிரச்சினையில் தலையிட்டு தவறிழைத்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அத்திவரதர் விழாவையொட்டி 2500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வெளியூர்களிலிருந்தும், ஆயுதப்படை பிரிவிலிருந்தும் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வருவதால், நெரிசலை சமாளிக்க போக்குவரத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால், காஞ்சிபுரம் நகரில் தேவையற்ற போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றத்தைச் சீரமைத்தாலே நெரிசலை சமாளிக்க முடியும். ஆனால், தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், பெரிய காஞ்சிபுரம் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பட்டுச்சேலை வியாபாரம், சிறு கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களுக்குச் செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆட்டோ, வேன், மினி பேருந்து வசதிகள் முறைப்படுத்தப்படவில்லை.
அத்தி வரதர் விழா ஜூலை 1 முதல் 48 நாள்கள் நடைபெறவுள்ள நிலையில், விழா துவங்கி 3 நாள்களிலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசடியை மூடிமறைக்கும் செயல்
சமணக் கோயில்களையெல்லாம் மாற்றி இந்துக் கோயில்களாக்கிய ஆரிய பார்ப்பனர்கள் அங்கு இந்துக் கடவுளை நுழைக்க ஒவ்வொரு கதைகளைக் கட்டி மக்களை ஏமாற்றினர். இது காஞ்சியில் அதிக அளவு நடந்தது. அப்படிப்பட்ட ஒரு மோசடிதான் அத்தி வரதர் மோசடியும்!
குளத்துக்குள் சிலைகளை ஒளித்து பின் கோயிலுக்குள் குடியமர்த்துவது அவர்களின் மோசடிகளில் ஒன்று.
அப்படி குடியமர்த்த முடியாமல் போனவர்தான் அத்திவரதர். ஆனால், பிரம்மதேவர் யாகத் தீயில், அத்தி மரத்தாலான திருமால் உருவம் சாம்பலாகாமல் காக்க, குளத்து நீரில் போட்டார்கள் என்பது எப்படிப்பட்ட பித்தலாட்டம்.
இவர்கள் கூறுவதுபடி பார்த்தால் அத்தி மரத்தாலான திருமால் சிலை நெருப்பில் சாம்பலாகும் என்றால் அது வெறும் மரச்சிலைதானே ஒழிய அதற்குக் கடவுள் சக்தியில்லை என்பதுதானே? கடவுள் சக்தியிருந்தால் அது நெருப்பால் பாதிக்கப்படுமா? சிந்திக்க வேண்டாமா? அப்படிப்பட்ட சக்தியில்லா சிலைக்குச் சக்தியிருப்பதாக எண்ணி ஆயிரக்கணக்கில் கூடுவது அறியாமையின் உச்சம் அல்லவா?
அது மட்டுமல்ல, அத்தி மரத்தாலான திருமால் சிலை யாகத் தீயிலிருந்து அகற்றப்பட்ட பின் அதில் சூடு தணிந்துவிடும். அதைக் குளத்தில் போட வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த சிலையை தொடர்ந்து குளத்திலே வைத்திருக்க வேண்டியதும் இல்லை. ஆனால், அச்சிலையை குளத்தில் வைத்து அதற்கு மகத்துவம் காட்டுகிறார்கள் என்றால் அது மோசடியா இல்லையா?
அது மட்டுமல்ல அக்குளம் வற்றாது என்று கடவுளால் வரம் அளிக்கப்பட்டது என்பதும் மோசடி. காரணம், அக்குளம் 1709ல் சொட்டு நீர் கூட இல்லாமல் வற்றிப் போனது என்பது உண்மை. ( ஆதாரம் : தமிழ் இந்து 30-06-2019) வள்ளலார் கூறுவது போல பார்ப்பனச் சடங்குகள் எல்லாம் பிள்ளை விளையாட்டே (பொம்மை விளையாட்டே)!
அறிவின் பயன் என்ன? பொறியியல் படித்தவன், மருத்துவம் படித்தவன் எல்லாம் வரிசையில் நிற்கிறான். படித்தவனே சிந்திக்கவில்லையென்றால் பாமரன் என்ன செய்வான்? பெரியாரின் தேவை இப்போது புரிகிறதா?