முகப்புக் கட்டுரை: அனைவருக்கும் கல்விக் கொள்கையா? ஆரியத்தின் காவிக் கொள்கையா?

ஜுலை 01-15 2019

மஞ்சை வசந்தன்

2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சுப்பிரமணியன் குழு நியமிக்கப்பட்டு, குலக்கல்வியை  நினைவூட்டும் வகையிலான ஓர் அறிக்கையை அது அளித்தது. கடுமையான எதிர்ப்பால் அவ்வறிக்கை கிடப்பில் போடப்பட்டது.    தற்போது பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் ஒரு தேசியக் கல்விக் கொள்கையை விவாதத்துக்கு வைத்திருக்கிறது. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில், ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. அது அளித்த அறிக்கை இது. முதல் நாளிலேயே இவ்வறிக்கை சர்ச்சையை எழுப்பியது. ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியே மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரையே சர்ச்சைக்குக் காரணம். இதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

மும்மொழிக் கல்விக் கொள்கையானது தாய் மொழியுடன்  இணைப்பு மொழியாக ஆங்கிலம், அவற்றுடன் வேறொரு மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித் தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி  இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் _ எடுத்துக் காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று  இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில்  மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதானது இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத – குறிப்பாக தமிழ் நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதத்தை உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் வரை பயிற்றுவிக்க வேண்டும் என்பதெல்லாம் ஆரிய பார்ப்பனீயக் கலாச்சாரத்தையும், ஆர்.எஸ்.எஸ்.

_ பிஜேபியின் அடிப்படை நோக்கமான இந்துத்துவாவையும் கல்வி மூலம் திணிக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியான ஏற்பாடாகும்.

இந்தியாவின் கல்விச்சூழல் தனித்தன்மை உடையது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 லட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக்கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட கல்விச்சூழல் நிலவும் இந்நாட்டில் பொதுவான கல்வித் திட்டம் சற்றும் பொருத்தமில்லாதது மட்டுமல்ல. பல பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது.

ஜூன் 14 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக நடைபெற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 குறித்து ஆசிரியருடன் விவாதிக்கும் கல்வியாளர்கள்.

இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கையை கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

‘உலகம் முழுவதுமே, பின்லாந்து போல கல்விச்சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேர்கிறார்கள். ஏழு வயதில்தான் முறையான கல்வி தொடங்குகிறது. ஆனால், நம் தேசியக் கல்விக் கொள்கை, மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக் கல்விக்குள் கொண்டு வருகிறது. இது பிஞ்சு உள்ளத்தையும் உடலையும் கேடுறச் செய்யும்.

கிராமப்புற ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதில் அங்கன்வாடிக்குப் போய் சத்து உருண்டையும் சத்துணவும் முட்டையும் சாப்பிட்டபடி பொழுதைப் போக்குகின்றன. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பில் இந்த அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரவேண்டும் என்பதுதான் இந்த அங்கன்வாடிகளின் இலக்கே தவிர, கல்வி தருவது அல்ல! அதனால், பெயரளவில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் யாரும் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

ஒருபுறம் அங்கன்வாடியில் அடைக்கலம் புகும் ஏழைக் குழந்தைகள். இன்னொரு பக்கம் நகர்ப்புற பணக்காரக் குழந்தைகள், மூன்றரை வயதில் உயர்தரமான கான்வென்ட்டில் எல்.கே.ஜி படிக்கப் போகிறார்கள். அங்கன்வாடி குழந்தைகள் இவர்களுடன்தான் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் போட்டியிட வேண்டும்.

அங்கன்வாடிகளோ, கே.ஜி வகுப்புகளோ பள்ளிக்கல்வியின் அங்கமாக இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் தேசிய கல்விக்கொள்கை, குழந்தைகளை மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கல்வி வரம்புக்குள் கொண்டு வரச் சொல்கிறது. எனவே, கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அங்கன்வாடிகள் இனி கல்வித்துறையின் அங்கமாக ஆகிவிடும். அங்கன்வாடிகளையும் பள்ளிகளையும் இணைத்துக் கல்வி வளாகங்களை உருவாக்கச் சொல்கிறது கஸ்தூரிரங்கன் கமிட்டி.

இப்போது இருக்கும் பத்தாவது மற்றும் பிளஸ் 2 பள்ளிக்கல்வி முறையும் மாற்றப்படுகிறது. பள்ளிக்கல்வி என்பது இனி 15 ஆண்டுகள். மூன்று வயது முதல் ஐந்து ஆண்டுகள் அடிப்படைக் கல்வி. பிறகு மூன்று ஆண்டுகள் ஆரம்பக் கல்வி. மூன்று ஆண்டுகள் நடுநிலைக் கல்வி. நான்கு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வி. (5+3+3+4=15) மேல்நிலைக் கல்வி எனத் தனியாக இனி இருக்காது. அது உயர்நிலைக் கல்வியாக மாற்றப்படும் என்கிறது.

9ஆ_ம் வகுப்பு முதல் 12_ம் வகுப்பு வரை செமஸ்டர் முறை அமலுக்கு வரும். பத்தாம் வகுப்பு, 12_ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கிடையாது. அதற்குப் பதிலாக நான்கு ஆண்டுகளில் எட்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். (கல்லூரிகளில் இளநிலைப் பட்டம் படிக்கச் சேர்வதற்கே நீட் போல ஒரு தேர்வு கொண்டு வரும் உத்தேசத்தில் உள்ளது மத்திய அரசு. இனி எந்தக் கல்லூரியில் சேர்வதற்கும் தனித் தேர்வு எழுத வேண்டிய சூழல் வந்துவிடும் என்பதால், பிளஸ் 2 என்பது தனியாகத் தேவைப்படாது.)   இப்போது கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி தருவது அமலில் உள்ளது. இதை 12_ம் வகுப்பு வரை விரிவுபடுத்துமாறு தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

குருகுலப் பள்ளி முதல் சர்வதேசப் பள்ளி வரை இந்தியாவில் ஒன்பது விதமான பள்ளிகள் உள்ளன. கரும்பலகையும் ஆசிரியர்களும்கூட இல்லாத பள்ளிகள் ஒரு பக்கம்; ஸ்மார்ட் வகுப்பறைகளும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களும் கொண்ட பள்ளிகள் இன்னொரு பக்கம். இங்கு சம வாய்ப்பு எப்படி வரும்? அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைப்பது பெருமளவு நிதி தேவைப்படும் விஷயம். அதை செலவிடுவது மாநில அரசா, மத்திய அரசா? ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையே மாநில அரசுகள் குறைத்துக்கொண்டே வருகின்றன. புதிய ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்? மூன்றாம் வகுப்பு முதல் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். இதற்காக மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற பெயரையே கல்வித் துறை என மாற்றச் சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை. எனில், மாநில அரசுகள் இனி என்ன செய்யும்? இப்படி விடை தெரியாத பல கேள்விகளை அந்தரத்தில் விட்டுச் செல்கிறது இந்தப் புதிய கொள்கை.

உயர்கல்வி சார்ந்த கொள்கைகளும் இப்படித்தான் உள்ளன. ஆசிரியர்களின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் கஸ்தூரிரங்கன் கமிட்டி, புற்றீசல் போல தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை மூடச் சொல்கிறது. இளங்கலைப் படிப்பும் பி.எட் படிப்பும் இணைந்து நான்கு ஆண்டு பட்டம் புதிதாகத் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இப்படி ஏற்கனவே உள்ள பல  ஒழிக்கப்படுகின்றன.

பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படும். அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (NHERA_National Higher Education Regulatory authority) அமைக்கப்படும். உயர்கல்வியை ஒழுங்கு படுத்தும் ஒரே அமைப்பாக இது இருக்கும். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) போன்ற அமைப்புகள் வெறுமனே தொழில்நுட்பத் தரத்தை வரையறுக்கும் அமைப்புகளாக மட்டுமே இருக்கும்.

கல்லூரிகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெறும் முறை ஒழிக்கப்படும். ஒவ்வொரு உயர்கல்வி நிலையமும் சுயேச்சையாகச் செயல்படும். வரும் 2032ஆம் ஆண்டுக்குள் கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகவோ, தனி பல்கலைக்கழகமாகவோ மாறிவிட வேண்டும். அல்லது ஏதாவது பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட வேண்டும்.

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னாட்சிக் கல்லூரிகளை மட்டுமே புதிதாகத் தொடங்க முடியும். எந்த புதுக் கல்லூரியும் பல்கலைக்கழக இணைப்பு பெற முடியாது.

இளங்கலை, இளம் அறிவியல் பட்டங்கள் பலவும் நான்கு ஆண்டுகள் படிப்பதுபோல பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

எம்.ஃபில் ஆராய்ச்சிப் பட்டம் கைவிடப்படும். இனி பிஹெச்.டி மட்டுமே ஆராய்ச்சிப் படிப்பாக இருக்கும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பது இனி இருக்காது. இனி பல்கலைக்கழகங்களின் வேலை, கல்லூரிகளைக் கண்காணிப்பது அல்ல… ஆராய்ச்சி செய்வதும் பாடம் நடத்துவதும் மட்டுமே.

திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தராத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் மோடி. இப்போது ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் என்ற பெயரில், தேசிய கல்வி ஆணையம் அமைய உள்ளது. பிரதமர்தான் இதன் தலைவர். கல்லூரி அங்கீகாரம் தருவது முதல் கல்வி உதவித் தொகை தருவது வரை இந்தியாவில் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் எல்லா அமைப்புகளும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இந்த அமைப்புக்கு வழிகாட்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்படும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் இதில் இருப்பார்கள். எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப் படுவார்கள் என தேசிய கல்விக் கொள்கை எதையும் சொல்லவில்லை.

கல்லூரிகளுக்குக்கூட தன்னாட்சி வழங்கத் தயாராக இருக்கிற கல்விக் கொள்கை, கல்வி விஷயத்தில் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் தரத் தயாராக இல்லை. மாநில உரிமைகளை அறவே பறித்து ஒற்றை ஆட்சி முறைக்கு ஒத்த வகையில் இக்கல்வித் திட்டம் புனையப்பட்டுள்ளது. இனி, குழந்தைகள் பள்ளிக்கல்வியில் நான்கு கட்டத்தேர்வுகளை எழுத வேண்டும். 8ஆம் வகுப்பு முடித்த மாணவ/ மாணவியர் தான் விரும்பும் ஏதாவது ஒரு தொழிற்கல்வியைத் தேர்வு செய்துபடிக்கலாம் எனவும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மையான ஏழை, எளிய மாணவ/மாணவியர் பொதுக்கல்வி  பெறும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

இத்தகைய பரிந்துரைகள் மூலம், உயர்கல்வியை முழுவதுமாக கார்ப்பரேட் மயமாக்கிட ஏதுவாகும். அடுத்ததாக, இந்திய உயர்கல்வியை சர்வதேச உயர்கல்விச் சந்தை யோடு இணைத்திடும் பரிந்துரை ஒன்றையும் இந்த வரை வறிக்கை கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2019 அறிக்கையை தமிழில் வெளியிட்டு உரையாற்றும் ஆசிரியர் (17-6-2019)

இந்த வரைவறிக்கையில், மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் சமூக நீதியைக் காத்திடும் வகையில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இட ஒதுக்கீடு இல்லை யென்றால், பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட மாணவர்கள்  உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பது இயலாததாகிவிடும். மேலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் கட்டாய மாதலால், பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது மேலும் பாதிக்கும்.

அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டண நிர்ணயத்தில் தலையிடாது. இதன் காரணமாகவும் பலர் தரமான உயர்கல்வி படிப்பினை பெற முடியாத நிலை ஏற்படும். பழைமைவாதக் கருத்தாக்கங்கள், ஆதாரமில்லாத செய்திகள், தவறான வாதங்கள், நிரூபிக்கப்படாத தகவல்கள் போன்றவற்றோடு கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதற்கான வழிமுறைகளையும் இந்த வரைவறிக்கை முன்மொழிகிறது. இந்த அறிக்கையின் பல அம்சங்கள் இந்திய அரசின் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், சமத்துவம், அறிவியல் கண்ணோட்டம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதிக்கும் பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் அதன் விழுமியங்கள் மீதும் பற்றுக் கொண்டுள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஒருமித்து இதனை  உடனடியாக எதிர்க்க வேண்டியது கட்டாயம்.

வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார் (17-6-2019)

கால அவகாசம் கட்டாயம்:

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. மே 31_ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இந்த வரைவு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சுமார் 400 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இதைப் படித்து கருத்துச் சொல்ல போதுமான காலக்கெடு வேண்டும். தமிழ் உட்பட மாநில மொழிகளில் இதைத் தர வேண்டும் எனக் கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கஸ்தூரிரங்கன் கமிட்டி ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரிடம் கடந்த 2018 டிசம்பர் 15_ம் தேதி கொடுத்தது. ஆனால், அது ஆறு மாதங்களாக அப்படியே தூசு படிந்து கிடந்தது. இப்போது ரமேஷ் போக்ரியால் இந்தத் துறையின் அமைச்சரானதும் அவரிடம் மீண்டும் தரப்பட்டு, அவசர அவசரமாக இதைச் சட்டமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. புதிய கல்விமுறை கொண்டுவர இவ்வளவு அவசரம் காட்டுவது சூழ்ச்சி, சூது, சதி நிறைந்த அணுகுமுறையாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் கடுங்கண்டனம்

தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை மாற்றங்களைப் புகுத்த ஆயத்தமாகும் இக்கல்விக் கொள்கை முந்தைய பல்வேறு கல்வியாளர்கள் குழு அறிக்கைப் பரிந்துரைகளுக்கு நேர்மாறானதாக பல்வேறு அம்சங்களில் உள்ளது என்பதை நாட்டின் கல்வி அறிஞர்கள், கல்விப் பணியாளர்கள் ஆழ்ந்து படித்தால் தெளிவாகப் புரியும்.

ராதாகிருஷ்ணன் கமிஷன் அறிக்கை

லட்சுமணசாமி முதலியார் கமிஷன் அறிக்கை

கோத்தாரி கமிஷன் அறிக்கை

போன்ற கல்வியாளர்களின் அறிக்கைப் பரிந்துரைகளின் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு, ஆர்.எஸ்.எஸ்.  கொள்கைகளை, ஆங்கிலச் சொற்றொடர்களால் ஜோடனை (ஒப்பனை) செய்யப்பட்டுள்ள அறிக்கை இது.

மூத்த கல்வியாளர்கள் திரு.எஸ்.எஸ்.இராஜ கோபாலன் அவர்கள் குறிப்பிட்டது போல, 41  பக்கங்களில் தரவேண்டியதை, 484 பக்கங்களில் தரப்பட்டிருப்பதே, படிப்பவர்களைக் குழப்பி மயக்கமுறச் செய்யும் குளோரோபாம் கொடுத்த நிலையாகும்.

484 பக்க அறிக்கையை கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் படித்து, உணர்ந்து 30 நாள்களுக்குள் கருத்துக் கூற முடியாது.

மத்திய அரசு இந்த கால அவகாசத்தை மேலும் சில மாதங்களுக்கு _ குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் பொது விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெறுவதற்கு வாய்ப்பளித்து, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்தை அறிதல் அவசியம்.

அனைத்துக் கல்வியாளர்களே, கல்வி நிலையங்களை நடத்துவோர்களே, பெற்றோர்களே இதை வற்புறுத்த வேண்டும். இன்றேல், அவசரக் கோலம் – அள்ளித் தெளித்த அலங்கோலம் என்பதாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது.

இந்தி _ சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்லாது, பெரிய அபாயகரமான  _ அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையே உடைத்து சுக்கல் நூறாக்கி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கல்வியே இந்தியா முழுவதும் என்பதைப் பிரகடனப்படுத்துவதாக இக்கொள்கை உள்ளது.

அரசு சட்டமியற்றும் அதிகாரமுள்ள

1.            மத்திய அரசுப் பட்டியல் (Central Government List)

2.            மாநில அரசுப்பட்டியல் (State Government List)

3.            ஒத்திசைவு பட்டியல் (Concurrent List)

உள்ளவைகளையே கபளீகரம் செய்து விட்டதாகவே இந்த வரைவு அறிக்கை முழுவதும் அமைந்துள்ளது. ஆரம்பக் கல்வி தொடங்கி பல்கலைக் கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வரை பலவற்றையும் அடியோடு மாற்றும் சட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமான உறுதியளிப்புச் சட்டமான சமுகநீதி _ இட ஒதுக்கீடு _ கல்வி வேலை வாய்ப்பு 15(4), 16(4), 29 போன்ற பிரிவுகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பு உரிமைகளுக்கும், சிறுபான்மையினர் உரிமைகளுக்கும் இடம் அளிப்பதாக அந்த வரைவில் தெரியவில்லை.

தகுதி, திறமை அடிப்படை, பொருளாதார அடிப்படையெல்லாம் புகுத்தப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையோ, பல்கலைக் கழகம், கல்லூரி நியமனம்  செய்ய சமுகநீதி அடிப்படையான எந்தப் பாதுகாப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஏனோ தானோ வென்றோ, யாருக்கோ வந்த விருந்து என்றோ அலட்சியமாக இருக்கவேண்டாம். பொறியாக உள்ள தீ, பரவுவதற்கு முன் அணைப்பதற்கு ஆயத்தமாவதே அறிவுடைமை என்பதால், வருமுன்னர் காக்க ஆயத்தமாக வேண்டும்.

வரைவு தேசிய கல்விக் கொள்கை – 2019 அறிக்கையை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக 17-6-2019 அன்று வெளியிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் :

தோழர் கே.பாலகிருஷ்ணன்

(மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்)

கல்வியைத் தலைகீழாகப் புரட்டி அடிக்கிறார்கள். மூன்று வயதிலேயே பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமாம். எத்தனை எத்தனைத் தேர்வுகள் பன்னிரெண்டாம் வகுப்புவரை?

மூன்று வயதில் ஒரு குழந்தை என்ன படிக்க வேண்டும் என்று ஒரு மத்திய அரசு தீர்மானிக்குமாம் என்ன புதிய கல்வி? ஆர்.எஸ்.எஸின் வருணாசிரம சித்தாந்தத்தைத் திணிப்பதுதான் புதிய கல்வியா?

மாணவர்கள் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு போராட்டம் மாணவர்கள் கைக்குச் சென்று விட்டால், அது வெற்றியில் போய்தான் முடியும்.

இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்; மாணவர்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடத்திடவேண்டும். விழிப்புணர்வு விசுவரூபம் எடுக்கவேண்டும் என்று கூறினார்.

தோழர் இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மாநில செயலாளர்)

மக்கள் கருத்தைக் கேட்பதற்கு முன்பே அவசர அவசரமாக வரும் 22 ஆம் தேதி கல்வியாளர்கள் சார்பில் மாநாட்டைக் கூட்டுவது எப்படி சரியாகும்?

பி.ஜே.பி. என்பது எப்பொழுதுமே தந்திர மாகத்தான் நடந்துகொள்ளும். சொந்தக் கொள்கையை வெளிப்படையாக சொல்லாத அமைப்பு அது. எதையும் மறை முகமாக, தந்திரமாக செய்யக்கூடியதாகும். இந்தக் கல்விக் கொள்கையும் அந்த வகையைச் சார்ந்துதான்.

ஆ.கோபண்ணா (காங்கிரஸ் கட்சி)

வட மாநிலங்களில் முற்றிலும் தோல்வி அடைந்த திட்டம்தான் இந்த மும்மொழிக் கொள்கைத் திட்டமாகும்.

இதுவரை பார்த்த மோடியைவிட இனிமேல்தான் முழு உண்மையான மோடியைப் பார்க்கப் போகிறோம். ஆர்.எஸ்.எஸ்.தான் இந்த ஆட்சியை இயக்குகிறது. கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை என்பதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்.தான் பேசுகிறது.

புதிய கல்விக் கொள்கையையும் நீட் தேர்வையையும் நீக்கக் கோரி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (15-6-2019)

கான்ஸ்டைன் இரவீந்திரன் (தி.மு.க.)

கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை இது 13ஆவது அறிக்கையாகும். கல்விக் கொள்கையைக் கல்வியாளர்கள்தான் வகுக்க முடியும். இஸ்ரோ விஞ்ஞானிக்கும், கல்விக் கொள்கைக்கும் என்ன சம்பந்தம்?

மல்லை சத்தியா (ம.தி.மு.க.)

இந்தக் கல்வித் திட்டம் நயவஞ்சகமானது; Text Book Terrorism இந்தப் புதிய கல்வித் திட்டத்துக்கும் பொருந்தும் என்றார்.

ஜெ.ஹாஜாகனி (த.மு.மு.க.)

எல்லோர்க்கும் கல்வி என்பது சமுகநீதி; ஏன் அனைவருக்கும் கல்வி? என்று கேட்பது மனுநீதி _ ஆரியக் கொள்கை. இதுதான் புதிய கல்விக் கொள்கை.

கவுதம சன்னா (விடுதலைச் சிறுத்தைகள்)

ஜப்பானில் 6 வயதுக்கு மேல்தான் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் _ இங்கே என்னடா வென்றால், 6 வயது பிள்ளைகளுக்கு மூன்று மொழிகளைத் திணிக்கிறார்கள் _ இதற்குப் பெயர்தான் புதிய கல்விக் கொள்கையா? என்ற கேள்வியை எழுப்பினார்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ. தேசிய தலைவர்)

ஒரு புதிய கல்வித் திட்டம் அறிமுகமாகிறது என்றால், அதற்கு முன்னிருந்த கல்வித் திட்டத்தில் என்ன குறை பாடுகள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்தவர்களால் என்ன குறைபாடு நடந்துவிட்டது என்று விளக்கவேண்டும். அதெல்லாம் ஒன்றும் சொல்லாமல், போதிய அவகாசமும் இல்லாமல் அவசரத் திட்டத்தை புதிய கல்வித் திட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே இந்நிகழ்வில் கலந்து கொண்ட  தலைவர்களின் ஒருமித்த கருத்தாகவும்   இருந்தது. இவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்த்துள்ளனர். புதிய கல்வி என்ற போர்வையுள் குலக்கல்வியைக் கொண்டுவரும் முயற்சி இது.

கல்வியில் சீர்திருத்தம் செய்ய, பரிந்துரை செய்ய கல்வியாளர்களை அமர்த்த வேண்டும். அதை விட்டு அண்டவெளி ஆய்வாளரை அமர்த்தினால் அதன் நோக்கம் என்ன? ஆர்.எஸ்.எஸ். நோக்கத்திற்கு ஏற்ப அறிக்கை தர ஆள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதுதானே! ஆர்.எஸ்.எஸ் நோக்கப்படி, எதிர்பார்த்தபடி, இட்ட கட்டளைப்படி அவரும் அறிக்கை அளித்துவிட்டார்.

ஏற்கனவே எடுத்துவிட்ட செயல்திட்டங்களை அமுல்படுத்த கல்விக்குழு, அறிக்கை என்பதெல்லாம் வெறும் நாடகங்களே! மாநில மொழிகளில் அறிக்கை வெளியிடாமல், கருத்துக் கூற கால அவகாசம் அளிக்காமல் அறிக்கை வெளியிடப்படுவதும், அவசரம் காட்டுவது இதைத்தான் உறுதி செய்கின்றன.

கல்வி முறையில் மாற்றம் என்பது தலைமுறை மாற்றம், கருத்து மாற்றம், கலாச்சார மாற்றம், வளர்ச்சி மாற்றம், அறிவு மாற்றம் என்று ஆயிரமாயிரம் மாற்றங்களுக்கு அடித்தளமானது.

புதிய கல்விக் கொள்கை கல்வியை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அடித்தட்டு மக்களின் கல்வியைப் பறிப்பதையும், அவர்களைப் புறக்கணிப்பதையும், அவர்களுடைய கல்வி வாய்ப்பைத் தடை செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

கல்வியை கார்ப்பரேட் மயமாக்கி, உயர்ஜாதிக்கும், பணக்காரர்களுக்கும் உரியதாக்கி, அடித்தட்டு மக்களின் பிள்ளைகளை அடிமை வேலைக்குத் தள்ளும் வஞ்சகத் திட்டம் இது.

நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அடித்தட்டு, கிராமப்புற மாணவர்களை கல்வி வேலை வாய்ப்புகளில் நுழைய விடாமல் செய்யவும்; இடஒதுக்கீட்டு உரிமையை ஒழித்து ஒடுக்கப்பட்டோரை மேலெழாமல் செய்யவும்; சமஸ்கிருதத்தை கல்வி நிலையங்களில் நுழைத்து அதை ஆட்சி மொழியாக்கவும், மாநில மொழிகளை ஒழித்துக் ஒற்றை மொழியை நடப்பில் கொண்டுவரவும், பன்முகக் கலாச்சாரங்களை ஒழித்து ஒற்றை (ஆரிய) கலாச்சாரத்தைத் திணித்து அனைவரையும் ஏற்கச் செய்யவும்; மாநில உரிமைகளை அறவே பறித்து அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரவும் அடித்தளம் அமைத்து கட்டமைப்பதற்கான அப்பட்டமான சதித்திட்டமே இப்புதிய கல்விக் கொள்கை.

எனவே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ள மக்கள் மதம், மொழி கடந்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நின்று இந்த புதிய கல்வித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப் போராட வேண்டும்.

ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைமொழி, ஒற்றை ஆட்சி, ஒற்றை மதம் என்ற பாசிச வன்கொடுமையைத் தகர்த்து நொறுக்கி தனி மனித உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

இது தலைமுறை சார்ந்த வாழ்வா சாவா போராட்டம். எனவே, அதன் கட்டாயம் கருதி அனைவரும் உறுதியுடன் போராடி வெற்றி பெற வேண்டியது கட்டாயம்! வெற்றி பெறுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *