கி.வீரமணி
இந்திய அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் 06.11.1987 அன்று பாரிமுனையிலிருந்து – சைதாப்பேட்டை வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கைகோர்த்து அணிவகுத்து நின்று மனிதச் சங்கிலி அறப்போர் நடத்தப்பட்டது. இந்த மனிதச் சங்கிலி அறப்போர் சுமார் 10 கிலோ மீட்டம் தூரம் சாலை முழுவதும் ஒலி முழக்கங்களுடன் 4.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற்றது இந்த அறப்போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட எல்லோருமே கைகோர்த்து நின்று குரல் கொடுத்த உணர்ச்சிபூர்வமான காட்சியை அன்று காண முடிந்தது.
தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காமராஜ் காங்கிரஸ் உள்ளிட்ட உள்ள ஏராளமான தமிழர் அமைப்புகள், மாணவர்கள், பேராசிரியர்கள், கலைத்துறையினர், கவிஞர்கள், அறிஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்றார்கள். என்னுடன் அன்றைய தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், சிங்கப்பூர் டி.வி.நடிகர் ஆரூர் சபாபதி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஜானகிராமன், திராவிடர் கழக மகளிர் அணிச் செயலாளர் க.பார்வதி, திருச்சி ஆளவந்தார், பெரியார் பேருரையாளர் புலவர் ந.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
15.11.1987 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்துக் கல்லூரி மாணவர்கள் எழுச்சி மாநாடு ஒன்று நடத்தினார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். இந்த மாநாடு தமிழர் பாதுகாப்புப் பேரவையின் சார்பில் மாநாட்டுக்கு தமிழ் மன்னன் தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் ராவணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நான் சிறப்புரையாற்றினேன்.
திருமாவளவன்
சட்டக்கல்லூரி மாணவர்கள் பழனிச்சாமி, புண்ணியக்கோடி, சவுந்தர்ராசன், திருமாவளவன் (இன்றைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்) முதலானோர் கலந்துகொண்டனர்.
01.12.1987 திருச்சியில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடந்த நிறுவனர் நாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். தந்தை பெரியார் -_ அன்னை மணியம்மையார் இலவச மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சந்திரன் _ பிரேமா ஆகியோரும், தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலின் தலைவர் சி.ஏ.வாசுதேவன் அவர்களும் வந்திருந்தனர். பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையை சிங்கப்பூர் திருமதி பிரேமா சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நான் உரையாற்றினேன்.
03.12.1987 அன்று ஆலந்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திரு.ஆபிரகாம் திடீர் மறைவு நமக்கு மிகுந்த வேதனை அளிக்கும் கொடுமையான செய்தியாகும். மிசாவில் நம் அனைவருடன் உறுதியாக அடக்குமுறையை ஏற்ற அவர், மிசாவில் சிறப்பான கொள்கை வீரர் ஆவார்!
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க முழங்கிய, மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் நீத்தார் என்பதல்ல, ஈழத் தமிழர்களைக் காக்க களப்பலியான வீரர் என்றே வரலாற்றில் இடம் பெறுவார் அவர்! இரங்கல் அறிக்கையை அன்றே விடுதலை 03.12.1987 அன்று முதல் பக்கத்தில் விடுத்தேன்.
06.12.1987 அன்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் எஸ்.ஏ.எம்.உசேனின் மகன் அப்துல் காதர் பஷரா மற்றும் மகள் நபீசா _ அப்துல் குத்தூஸ் எழும்பூரிலுள்ள இம்பீரியல் ஓட்டலில் திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினேன். அப்போது, தமிழர்கள் இணைந்து நிற்கிறோம் என்பதற்கு அடையாளமாக இந்த மணவிழா இருக்கின்றது என்று நான் குறிப்பிட்டேன். மணவிழாவில், டாக்டர் கலைஞர், தலைவருடன் வந்து விழாவில் ரகுமான்கான் எம்.எல்.ஏ., நீலநாராயணன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
1982ஆம் ஆண்டு மதுரை, கடலூர் சிறைச்சாலைகளில் விடுதலை படிப்பதற்குத் தடை விதித்து சிறைச்சாலைகளின் அய்.ஜி. ஒரு ஆணை பிறப்பித்திருந்தார். இதனை நான் எதிர்த்து. ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன். மதுரை, கடலூர் ஆகிய சிறைச்சாலைகளில் இருக்கக்கூடிய கழகத்தினர், ஆதரவாளர்கள் விடுதலை படிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. விடுதலை பத்திரிகையை அனுமதிக்கக் கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தன்னிச்சையான சட்டவிரோதமான செயலாகும் என்பதோடு அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். சிறை அதிகாரிகள் சிறைக் கைதியான நிர்வாக அதிகாரம், சிறைக் கைதிகளுடைய நலனைப் பற்றிய அதிகாரம் இவைகளைப் பெற்றிருக்கிறார்களே தவிர, ஒரு சிறைச்சாலைக்கு வரும் பத்திரிகையை நிறுத்துவதற்கு அதிகாரம் கிடையாது. அவர்களது அதிகாரத்திற்கு இது அப்பாற்பட்டது ஆகும் என்று நான் ரிட் மனுவில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த வழக்கு 07.12.1987 அன்று, உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியதேவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் இதுபற்றிக் கூறும்போது, 27.11.1987 அன்று உள்துறை தனிச் செயலாளர் ஆணையின்படி மேற்கூறப்பட்ட தடை நீக்கப்பட்டது என்று கூறினார். விடுதலையை சிறைச்சாலைக்கு அனுப்பலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் வெற்றிபெற்று விடுதலையை விடுதலை வென்று எடுத்தது எனலாம்.
15.12.1987 அன்று காலை 8 மணி அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய தோழர் பி.இராமமூர்த்தி அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அரசு பொது மருத்துவமனையில் காலமானார். அவர் இயற்கை எய்திய செய்தியை அறிந்தவுடன் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
இவர் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் முழுமையாக சாய்ந்தபோது, அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 1964ஆம் ஆண்டில் உருவாக்கியதில் முக்கிய பங்கு கொண்டவர் தோழர் பி.ஆர். என்று இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தேன்.
திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும், அண்ணா தி.மு.க.வின் நிறுவனத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் 24.12.1987 அன்று அதிகாலை மூன்று மணிக்கு இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி கேட்டு விடுதலையில் முதல் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதில், தி.மு.க.வைத் தொடர்ந்து திராவிடப் பாரம்பரிய ஆட்சியை நிறுவி கட்டிக்காத்த அந்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த அதே நாளில் மறைந்து சரித்திரத்தில் நிரந்தரமாக ஏறி நிற்கும் முக்கிய வரலாற்று குறிப்பு ஆகும்.
அவரது மறைவு திராவிட பாரம்பரியத்தில் ஒரு பெரும் சூன்யத்தை உருவாக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத இழப்புக்கு தமிழ்நாடும் மக்களும், திராவிட இயக்கத்தினரும் ஆளாகியுள்ள அவதிநிலை ஏற்பட்டுள்ளது. மூலதார தாய்க்கழகமான திராவிடர் இயக்கத்தின் சார்பில் அவருக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டேன். திராவிடர் கழகம் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு திராவிடர் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதையும் செலுத்தினோம். முதல்நாள் மற்றும் இரண்டாம் நாள் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதையை செலுத்தினேன். என்னுடன் திருச்சி ஆளவந்தார் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.
முதல்வர் ஜானகி அம்மையார், ஆர்.எம்.வீரப்பன் உடன் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கவிஞர் கலி.பூங்குன்றன்
25.12.1987 அன்று எம்.ஜி.ஆர் உடல் இறுதி ஊர்வலத்திற்கு முன்பே சமூக விரோதிகளால், கலைஞர் சிலையை சில காலிகள் திட்டமிட்டு உடைத்தெறிந்தனர். இது குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில் சிலை சின்னாபின்னப்படுத்தப்பட்டாலும் விரைவில் புதிய சிலையை அங்கு நிறுவிட அனைத்து மக்கள் ஆதரவில் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், அரசும் தனது துப்பறியும் துறையின் மூலம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக 02.01.1988 அன்று தேர்நதெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வி.என்.ஜானகி தலைமையிலான புதிய அமைச்சரவை 07.01.1988 அன்று பதவி ஏற்றது. தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற ஜானகி அம்மையாரும், மற்ற அமைச்சர்களும் 07.01.1988 அன்று காலை பதவி ஏற்றுக் கொண்டு பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவு இடத்தில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர் ஜானகி அம்மையாரும், மற்ற அமைச்சர்களும் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்
முன்னதாகவே 11 மணிக்கு பெரியார் திடலுக்கு வருகை புரிந்த முதல்வர் மாண்புமிகு ஜானகி இராமச்சந்திரன் அவர்களையும் அவர்களுடன் பதவி ஏற்றுக் கொண்ட ஏழு அமைச்சர்களையும் மிக்க அன்புடன் வரவேற்றேன். அவர்கள் அனைவரும் அய்யா, அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், சி.பொன்னையன், ப.உ.சண்முகம், வி.வி.சாமிநாதன், எஸ்.முத்துசாமி, டி.ராமசாமி, எ.அருணாசலம் ஆகிய அமைச்சர்களும், தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் சுலோசனா சம்பத், ராமலிங்கம் எம்.எல்.ஏ, பாவலர் முத்துசாமி மற்றும் அ.இ.அ.தி.மு.க. முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சித் தோழர்கள் வந்திருந்தனர்.
நினைவிடத்திலிருந்து நேராக அய்யா அருங்காட்சியகத்திற்கு முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் வந்தனர்.
முதலமைச்சர் அவர்களுக்கு மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்கள். நான் முதலமைச்சர் ஜானகி இராமச்சந்திரன் அவர்களிடம், தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னிலையில் வரவேண்டும் என்று கூறினார்கள். அந்த வகையிலே நீங்கள் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக வந்திருக்கிறீர்கள். எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்களிடம் கூறினேன்.
அமைச்சர்கள் அனைவருக்கும் நான் சால்வை அணிவித்தேன். என்னுடன் பண்டரிநாதன் அய்.ஏ.எஸ்., பேராசிரியர் அய்யாசாமி, தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரும் அருங்காட்சியகத்தில் உடன் இருந்தனர். மேலும் விடுதலை சி.ஆளவந்தார், பேராசிரியர் ராமநாதன், நாகை என்.பி.காளியப்பன், எமரால்டு கோபாலகிருஷ்ணன், க.பார்வதி, க.பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக திருமதி ஜானகி அம்மையார் பதவியேற்று விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்கவில்லை. உளமார என்று கூறியே பதவி ஏற்றனர். அனைவரும் தமிழிலே பதவி ஏற்றார்கள்!
09.01.1988 அன்று சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி தலைவர்களான டாக்டர் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) நூற்றாண்டு விழா கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீதிக்கட்சி தலைவர்களான டாக்டர் ஏ.இராமசாமி மற்றும் ஏ.இலட்சுமணசாமி நூற்றாண்டு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி, ஜஸ்டிஸ் நாராயணசாமி மற்றும் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நான் வரவேற்று உரையாற்றினேன். தமிழக மூதறிஞர் குழு தலைவர் ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி துவக்க உரையாற்றினார். டாக்டர் ஏ.இராமசாமி (முதலியார்) அவர்களுடைய படத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஏ.வரதராஜன் அவர்கள் திறந்து வைத்தார். ஜஸ்டிஸ் நாராயணசாமி முதலியார் உரையாற்றினார். டாக்டர் ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) படத்தை டாக்டர் பி.எம்.சுந்தரவதனம் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். கழகத்தின் சார்பில் ஆர்காடு இரட்டையர்கள் பற்றி தயாரிக்கப்பட்ட மலரை ஜஸ்டிஸ் நாராயணசாமி முதலியார் வெளியிட அதை அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு பெற்றுக்கொண்டார்.
டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி பங்கேற்று உரையாற்றினார். விழாவில் பேசிய டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் ஆர்க்காடு இரட்டையர்கள் பேரில் ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்து மேடையிலே ரூபாய் பத்தாயிரத்து ஒரு ரூபாயை வழங்கினார். இந்த அறக்கட்டளையை ஒரு குழு மூலம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். நான் அதனை ஏற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினேன். அப்போது ஆற்காடு இரட்டையர் என்று சொன்னால் இளம் தலைமுறைக்கும் சரி; இனி வரக்கூடிய தலைமுறைக்கும் சரி; ரொம்பவும் அரிதாகத் தெரியக்கூடிய ஒரு நிலையிலே இன்றைக்கு சமுதாய அரசியல், பொருளாதார நிலை தமிழகத்திலே இருக்கிறது. ஆனால், வெகு குறைவாகத்தான் மற்றவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்காக அதன் மதிப்பு குறைந்துவிடாது.
வயிரமும், நவமணிகளும் எல்லா இடங்களிலும் கிடைத்துவிடாது. அதுபோல் கூழாங்கற்களைப் போல் என்று எள்ளி நகையாடப்பட்ட சமுதாயத்திலே வைர ஒளிகளாக வரலாற்றிலே மிளிர்ந்து திகழக்கூடிய இவருக்கு நாங்கள் விழா எடுக்கிறோம் என்ற பெருமையோடு உங்கள் முன்னாலே நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.
ஒரு நடுத்தரக் குடும்பத்திலே பிறந்து அதிலே உழைப்பால் உயர்ந்து அறிவிலே, ஆற்றலிலே நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய தந்தை பெரியாரது தத்துவத்தின் சிகரங்களாக இந்த இரட்டையர்கள் திகழ்ந்தார்கள்.
உலகத்திலேயே இப்படி ஒரு வரலாறு கிடையாது. மேலை நாட்டவர்களாக இருந்தாலும், அல்லது வேறு எந்த நாட்டவராக இருந்தாலும் அதிசயப்படுவார்கள் என்று எடுத்துரைத்தேன். விழாவில் கழக குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
எல்லைகாந்தி என்ற அன்போடு எல்லோராலும் அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் அவர்கள் 20.01.1988 அன்ற 98ஆம் வயதில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெஷாவர் நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கான் அப்துல் கபார்கான்
அவரது அரும்பெரும் தன்மைகளைக் குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டேன். அவர் தேசப்பற்றைவிட மானுடப்பற்று மிக்கவர் என்று அதில் குறிப்பிட்டேன்.
25.01.1988 அன்று ஜெயவர்த்தனா இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. தோழர்கள் சாரை சாரையாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், என் தலைமையில் பெரியார் திடலிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயவர்த்தனாவே ஒழிக என்று முழக்கப்பட்டு கழகத் தோழர்கள் வந்தபோது, திடீரென்ற போலீசு கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியது. இதனைத் தடுக்க நான் கூட்டத்தின் நடுவில் புகுந்து தடுக்க, என் மீது அடித்து அடிபட்டு, தரையில் விழுந்து என் கால் காயம் ஏற்பட்டது. உடனே கழகத் தோழர்கள் என்னைக் காப்பாற்ற சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்பு தோழர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் திடீரென்று இப்படி நடந்துகொண்டது ஏதோ உள்நோக்கத்தோடு எங்கள் மீது தடியடி நடத்தியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் முத்துசாமி தடியடி சம்பவத்தை முன்னிட்டு தோழர்களிடத்திலும் என்னிடத்திலும் மன்னிப்புக் கோரினார்.
இலங்கை அதிபர் ஜெயவர்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்டரல் ரயில் நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் மறியல் செய்யும் கழகத்தினர்.
இந்த தடியடி சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
மலேசியா பயணம்
மலேசிய திராவிடர் கழகத்தின் 40ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, மலேசிய திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று 05.02.1988 அன்று இரவு 11.40 மணிக்கு சியா விமானம் மூலம் மலேசியா புறப்பட்டு சென்றேன். என்னுடன் மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயமும் வந்திருந்தார். நாங்கள் மலேசியா சென்றபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 07.02.1988 அன்று மாலை கோலாலம்பூர் ஃபெடரல் ஓட்டலில் நடந்த மாபெரும் சிறப்பு விருந்தில் டத்தோ சாமிவேலுக்கு மலேசியா திராவிடர் கழகம் சார்பில் மூதறிஞர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா இந்தப் பட்டத்தினை வழங்கினார்.
நானும், மலேசியா திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமியையும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ந.லட்சுமணன் அந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் நான் உரையாற்றும்போது, உலகில் எங்கெல்லாம் தமிழினம் வாய்ப்பும் உரிமையும், வசதியும் குன்றியிருக்கிறதோ அங்கெல்லாம் எழுச்சித்தலைவர் டத்தோ சாமிவேலின் பணிகள் வேண்டுமென்று டத்தோ சாமிவேலுவிற்கு எழுச்சித் தலைவர் பட்டம் வழங்கப்பட்டது. மலேசிய திராவிடர் கழகம் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கேக் வெட்டப்பட்டு எழுச்சித் தலைவரால் எனக்கு ஊட்டப்பட்டது. அப்போது, நான் என் இறுதி மூச்சு இருக்கும்வரை நம் சமுதாயத்துக்குப் பணி செய்வேன். துரோகமிழைக்காமல் பெரியார் லட்சியங்களைப் பின்பற்றி மனித குலம் உயர உழைப்பேன். தமிழினமும் தமிழும் வாழ கருவியாகப் பணிபுரிய வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டு என் உரையை நிறைவு செய்தேன். விழாவில் ரெ.சு.முத்தையா, ம.இ.கா.பொதுச் செயலாளர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் டி.பி.வி.விஜேந்திரன், கே.ஆர்.சோமசுந்தரம், செனட்டர் சி.கிருஷ்ணன், எஸ்.எஸ்.மணியம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)