அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்னும் வாசகத்தால் ஈர்க்கப்பட்டு விஞ்ஞானத்தின் மீது ஆசை எற்பட விண்வெளி சார்ந்த புத்தகங்களைத் தேடிப் படித்தார் தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா. வான்வெளி தொடர்பான அத்தனை போட்டிகளிலும் களம் இறங்கினார்.
எட்டாம் வகுப்பிலே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கண்டுபிடிப்பை சமர்ப்பித்து இன்ஸ்பயர் விருதைப் பெற்றுள்ளார். தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் சிறு வயதிலேயே பெற்றார்.
2012ஆம் ஆண்டு மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு என்கிற தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் இருந்து, தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவியான உதயகீர்த்திகா கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து 2014இல் மற்றொரு போட்டியிலும் பங்கேற்று, மீண்டும் முதலிடம் பெற்று அசத்தி இருக்கிறார். இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள் கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தியுள்ளனர். கீர்த்திகாவுக்கு விண்வெளி படிப்பு மீது ஈர்ப்பு அதிகரித்தது. அவரது கனவில் நட்சத்திரங்களும், நிலவும், சூரியனும், பூமியும் சுற்றிச் சுழன்று வட்டமடித்தன.
இவரின் தந்தை தாமோதரன் ஒரு ஓவியர் மற்றும் எழுத்தாளர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவரின் மாத வருமானம் மிகக் குறைவு. தாயார் அமுதா தட்டச்சராக பணிபுரிகிறார். பெற்றோரின் குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டு தன் பள்ளிப் படிப்பை முடித்து, விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர பணமின்றி தவித்துள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் கல்விக் கட்டணத்தோடு தங்கிப் படிப்பதற்கான செலவும் சேர்த்து 7 லட்சம் வரை ஆகும். மகளின் ஆசைக்கு பெற்றோர்கள் பலரிடம் பணம் திரட்டி, தெரிந்தவர்களின் உதவியோடு, உக்ரைன் நாட்டில் செயல்படும் உலகின் தலைசிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்தனர். அதில் 92.5 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார்.
போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மய்யத்தில் பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் இணைந்து பயிற்சி எடுக்கவும் விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் சர்வதேச அளவில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்வார்கள். அதில் இந்தியாவில் நம் தமிழகத்தில் இருந்து தேர்வாகிய ஆராய்ச்சி மாணவி உதயகீர்த்திகா மட்டுமே. இதில் ஜெர்மன், போலந்து, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியையும், மேற்கொண்டு ஆராய்ச்சியும் செய்ய முடியும்.
”இஸ்ரோ 2021இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் நானும் ஒருவராய் இருக்க வேண்டும் என்பதை எனது இலக்கு என லட்சியத்துடன் கூறுகிறார் உதயகீர்த்திகா. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால் மட்டும்தான் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடரமுடியும், விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து, தமிழ் வழியில் படித்தாலும் கனவுகளோடு முயன்றால் விண்ணைத் தொடலாம் என நிரூபித்திருக்கிறார் தமிழகத்தின் இந்த நட்சத்திரம், உதயகீர்த்திகா.