பிறந்த நாள்: 07.07.1860
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர். தலித் சாகித்ய அகாடமி திவான் பஹதூர் இரட்டை மலை ஸ்ரீனிவாசன் அவர்களின் ஜீவிய சரித்திர சுருக்கம் என்ற 68 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூலை வெளியிட்டது (டிசம்பர் 1999). இந்நூல் அவரே எழுதிய சுயசரித்திரம் என்ற சிறப்புக்குரியது.
1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார். திராவிடர்களின் இழிவை வெளிப்படுத்த கறுஞ்சட்டையை எப்படி தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்தினார்களோ, அதே கண்ணோட்டம்தான் இதிலும்!
அவர் காலத்தில் சமூக நிலையைத் தன் சுயசரிதையில் இவ்வாறாக வெளிப்படுத்தியுள்ளார்: நான் செங்கற்பட்டு கிராமங்களிலொன்றில் 1860 ஆம் வருடம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்த போது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். ஜாதிக் கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகிதத்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளை தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் ஒட்டாதபடி வீட்டுக்கு கடுகென நடந்து செல்வேன் என்று கண்ணீர் மல்க எழுதியுள்ளார். என்னே பார்ப்பனீயக் கொடுமை!
1891 இல் ஆதிதிராவிட மகாசபையில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். 1923 இல் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நீதிக் கட்சி ஆட்சியைப் பயன்படுத்தி பொதுச்சாலைகள், பொதுக் கிணறுகள் ஆகியவற்றில் தாராளமாக தாழ்த்தப்பட்டவர்கள் புழங்கிட வழிவகை செய்தார். என்னே புத்தி கூர்மை! பார்ப்பனீயத்தின் ஆபத்தை எந்த அளவு புரிந்து கொண்டிருந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.