(குறும்படம்)
கதைகளை சொல்லும் விதத்தில் இன்னும் ஆயிரமாயிரம் உத்திகள் இருப்பது போலவே தோன்றுகிறது. பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற இந்த அஞ்சா நெறி குறும்படம், கதையாடலை இல்பொருள் உவமை அணி என்ற புது உத்தியைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மனிதர்களை மிருகங்கள் என்றும், மிருகங்களை மனிதர்கள் என்றும் உவமித்து கதை சொல்லப்பட்டுள்ளது. தந்தையையிழந்த சிறு வயது பேத்திக்கு, மகனை இழந்த அவளது தாத்தா சொல்லும் கதை. வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள பெண்ணை மானாகவும், வக்கிரம் பிடித்த மூன்று ஆண்களை நரிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் அந்த மான் மூன்று நரிகளையும் வென்று விடுகிறது! அதாவது கொன்றுவிடுகிறது! இதுதான் கதை. உன்னையறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று பாடலுடன்தான் கதை தொடங்குகிறது. தாத்தா கதை சொல்வதும், நேரிடையாக கதை நிகழ்வதும் மாறிமாறி காட்டப்பட்டுள்ளது. இறுதியில் அதெப்படி தாத்தா, ஒரு மான் மூன்று நரிகளைக் கொன்றது? என்று பேத்தி கேட்கும் போது, நரிக்கு நகம் இருக்கிற மாதிரி, மானுக்கும் கொம்பு இருக்கும்மா என்று தாத்தா கூறும் பதிலில் நாம் முழுமையாக சமாதானமாகிவிடுகிறோம். இக்குறும்படம் 7 Shot Studio தயாரிப்பில் இந்த ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும் குறுகிய காலத்தில் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறது. எழுதி இயக்கியிருப்பவர் வேணுகோபால். சொல்லப்பட வேண்டிய விசயத்தை; சரியாகச் சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
– உடுமலை