ஆசிரியர் பதில்கள்: ஜெகன்மோகன் ரெட்டியின் சமூகநீதி சரியானது!

ஜுலை 01-15 2019

கே: ஒரு நாத்திக இதழ் ’விடுதலை’ 85ஆம் ஆண்டு விழா! எப்படி உணர்கிறீர்கள்?

               – நெய்வேலி

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

 

ப: மலைப்பு, திகைப்பு, வியப்பு என்று எல்லாம் தாக்கவேண்டிய தருணத்திலும் தந்தை பெரியாரின் லட்சியப் பயணத் தூரம் வெகுதூரம் என்பதால், மகிழ்ச்சியே ஏற்படுகிறது! வளர்ச்சியுடனும் வாலிப முறுக்குடனும் வைதீகத்தினை எதிர்த்துப் போர்க்களத்தில் தன்னந்தனியே நின்று, வென்று காட்டுவது நிறைவளிக்கிறது!

கே: கோதாவரி  –  கிருஷ்ணா நதி இணைப்பு தமிழ்நாட்டுக்கு பயன் தருமா?

– பெ.கூத்தன்,

சிங்கிபுரம்

ப: கனவுத் திட்டங்கள், முதலில் செயல்படட்டும். பிறகு கருத்து சொல்லலாம். மற்றொரு காவிரி நதிநீர்ப் பங்கீடாக மாறாது இருந்தால் சரி _ வந்த பிறகும்கூட!

ராஜாஜி

கே: ராஜாஜி அவர்களை, குல்லுகபட்டர் என்று முதன்முதல் கூறியது யார்?  

– தி.பொ.சண்முகசுந்தரம்,

திட்டக்குடி

சர்.ஆர்.கே.சண்முகம்

ப: சர்.ஆர்.கே.சண்முகம் அவர்கள். அதைத் தொடர்ந்து அண்ணா, நமது ஏடுகள், திராவிடன், விடுதலை, முரசொலி போன்றவை.

ஜெகன்மோகன் ரெட்டி

கே: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் ஜாதிவாரியாக அய்ந்து(5) துணை முதல்வர்களை நியமித்திருப்பது பற்றி தங்கள் கருத்து?

 – பெ.கூத்தன்,

சிங்கிபுரம்

ப: வரவேற்க வேண்டிய புரட்சிகர சமூகநீதி ஏற்பாடு. மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். (ஏற்கனவே நியூஸ் 7 பேட்டியில் கூறியுள்ளோம்.)

கே: தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை அறிந்து கேரள அரசு தாமாக நாளொன்றுக்கு 20 இலட்சம் லிட்டர் தண்ணீர் தர முன் வந்ததை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளது சரியா?

  – கிருபாகரன்,

தாம்பரம்

ப: நிராகரித்துள்ளார் என்பது சரியல்ல. தானம் கொடுக்கும் மாட்டிற்குப் பல்லைப் பார்த்து ஏற்பது சரியல்ல! தேவையற்ற நிபந்தனைக்கு இப்போது உரிய சந்தர்ப்பமா?

கே: மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியின் மற்றொரு வடிவமா?

  – மகிழ்,

சென்னை-28

ப: அதிலென்ன சந்தேகம்? உள்ளே எக்ஸ்ரே கண்ணோடு அலசினால் புரியும்; பெரியார் நுண்ணாடியினால் பார்த்தால் எளிதாகத் தெரியும்.

கே: இந்தியாவில் மக்களாட்சியே கேள்விக்குரியதாகிவிட்ட நிலையில், தமிழ்த் தேசியவாதிகள் முறுக்கி முழங்கும் கற்பனைச் சித்திரங்களை உண்மையென்று மயங்கும் இளைஞர்கள் பற்றி…

– ஒளிமதி,

ஆவடி

ப: அரசியல்வா(வியா)திகள் இப்படிப் பலப்பல விசித்திரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஏமாறாதீர்!

கே:நாடாளுமன்றத்தில் திருமாவளவன் உரை, இந்திய, இலங்கை பாசிஸ்டுகளுக்கு எதிரான எச்சரிக்கைதானே?

  – தமிழ் ஓவியன்,

மதுரை

ப:  நிச்சயமாக. அவர்தம் கன்னிப் பேச்சே சிறப்புடன் அமைந்தது!

கே: மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவது மட்டுமே இனி மத்தியில் பி.ஜே.பி.க்கு மாற்றாக இருக்க முடியும் என்ற எனது கருத்து சரியா?

 – சங்கர் சுப்பிரமணியம்,

பட்டாளம்

ப:அதற்காகவேதான் _ அதைத் தடுப்பதற்காகவே ஒற்றைக் கலாச்சாரம், ஒரே தேர்தல் முறையை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வற்புறுத்தும் சூட்சமம்! புரிகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *