அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?(47): வாயில் பிள்ளை பிறக்குமா?

ஜுலை 01-15 2019

சிகரம்

ஒரு சமயம் பாஞ்சால மன்னன் விப்ரஜன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். அவனால் கொல்லப்பட்ட ஒரு பறவை அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க விரும்பியது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறக்க ஆசை கொண்டன.

மன்னனாக விரும்பிய பறவை மன்னன் விப்ரஜன் மகனாகப் பிறந்தது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறந்தன. அந்த மந்திரிகளின் பெயர்கள் புண்டரீகன், சுவலகன் ஆகும்.

இவர்கள் மன்னனுடன் இருந்த மந்திரிகளின் மகன்களாகப் பிறந்தனர்.

அவர்களால் கொல்லப்பட்ட பசு கல்யாணி என்ற பெயரில் தோன்றியது. பிரம்மதத்தன் கல்யாணியை மணந்தான் என்கிறது இந்து மதம் (மச்ச புராணம்)

வேட்டையில் கொல்லப்பட்ட பறவை எப்படி பேசும்? அடுத்த பிறவியில் எப்படி பிறக்க வேண்டும் என்று எப்படி கேட்கும்?

இறந்த பறவை மன்னனாக, மந்திரியாக பிறக்க முடியுமா? அறிவியல்படி அடுத்த பிறவி, முற்பிறவி என்பதெல்லாம் இல்லை. அப்படியிருக்க அடுத்த பிறவியில் பிறப்பது, அதுவும் விருப்பப்படி பிறப்பது என்பது முட்டாள்தனமான மடமைக் கருத்தல்லவா? இப்படிப்பட்ட மடமைக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? தக்ஷயாகத்தின் காரணமாக தாக்ஷாயினி உயிரைவிட்டு அடுத்து பார்வதியாகப் பிறந்து சிவனையே மணக்கிறாள்.

இந்நிகழ்ச்சிகளால் கோபம் கொண்ட சிவன், தக்ஷணை உலகில் பிராசீன பர்ஹி, மாரீஷர்களுக்கு மகனாகப் பிறக்குமாறு சபித்தார்.

தக்ஷனும் சிவனுக்கு முனிவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் அளிக்க மாட்டார்கள். சொர்க்கத்தில் இல்லாமல் பூமியில் மட்டுமே உறைவிடம் ஆகும் என்று சபித்தான்.

அப்போது சிவபெருமான் தக்ஷ சாபத்தினால் அல்ல, பூமியே உறைவதற்கு ஏற்ற இடம்; எனவே அங்கேயே என் உறைவிடம். நான் மற்ற தேவர்களுடன் உணவு உட்கொள்ள மாட்டேன். ஏனெனில் பிராமணர்கள் எனக்குத் தனியாக உணவு படைப்பர். அதேபோல் நான் தனியாகவே பூசிக்கப்படுவேன், மற்றவர்களுடன் அல்ல என்று கூறினார்.

மறு பிறவியிலும் தக்ஷன் தக்ஷனாகவே பிறந்து இமயமலையில் கங்கைத் துவாரம் என்ற இடத்தில் சிவன் தவிர மற்றவர்களை அழைத்து ஒரு யாகம் செய்தார். சிவனில்லாத யாகம் வெற்றி தராது என்று கூறி ததீசி முனிவர் அதில் பங்கு கொள்ளவில்லை.

மேரு மலை மீதிலிருந்து சிவனும், உமையும் அனைவரும் தக்ஷனின் யாகத்திற்குச் செல்வதைக் கண்டனர். அப்போது சிவபெருமான் தன் வாயிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவிக்க பரமன் ஆணைப்படி தக்ஷன் யாகத்தையும், அங்கிருந்தோர்களையும் வீரபத்திரன் அழித்தான். தக்ஷன் மறுபடியும் தலையும், உயிரும் பெற்றான். மேலும் பரமன் அவன் ஆயிரம் அசுவமேத யாகங்கள், நூறு வாஜ்பேய யாகங்கள் வெற்றியுடன் நடத்துமாறு ஆசீர்வதித்தார் என்கிறது இந்துமதம். (ஸ்ரீ பிரம்மாண்ட புராணம்)

குழந்தை பெற ஆண் பெண் இருவரும் பருவம் அடைய வேண்டும். அவர்கள் இருவரும் மலடாக இருக்கக் கூடாது. ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும். அதில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் உயிரணுவும் சேர்ந்தே கரு உருவாகும். அதுவே குழந்தையாகும். இதுவே அறிவியல் உண்மை. அறிவியல் உண்மை இப்படியிருக்க வாயிலிருந்து பிள்ளை (வீரபத்திரன்) பிறந்ததாய் இந்து மதம் கூறுகிறது. இப்படி அறிவியலுக்கு எதிராகக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும். உருத்திரன்

பிரம்மா தன்னைப் போன்ற ஒரு மகன் பெற விரும்பினார். அப்போது அவர் மடி மீது ஒரு பாலன் நீலமும், சிவப்பும் கலந்த நீலலோஹிதன் தோன்றி, அழ ஆரம்பித்தது. அப்பாலன் அழுதவன் காரணத்தைக் கேட்க அது தனக்கொரு பெயர் வைக்குமாறு கேட்கிறது எனக்கூற, (ருத் = கத்தி அழுதல்) அப்பாலனுக்கு ருத்திரன் என்று பிரம்மா பெயர் வைத்தார்.

திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை மற்றொரு பெயர் வேண்டும் என்று அழ, அந்த நீலலோஹிதனுக்கு பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று எட்டு பெயர்கள் கொடுத்தார். (இதுபற்றி விஷ்ணு புராணம், பத்ம புராணங்களிலும் காண்க.)

நான் எங்கே வசிப்பது? என்று ருத்திரர் கேட்க பிரம்மா கூறினார் சூரியனில் ருத்திரனாக, நீரில் பாவனாக, பூமியில் சிவனாக, தீயில் பசுபதியாக, காற்றில் ஈசனாக, விண்ணில் பீமனாக, அந்தணர் உடலில் உக்கிரனாக, சந்திரனில் மகா தேவனாக வசிப்பாயாக என்றார் என்கிறது இந்துமதம். (ஸ்ரீபிரமாண்ட புராணம்)

சூரியன் ஒரு நெருப்புக் கோளம். அங்கு எந்த உயிரினமும் வாழ முடியாது. இதுவே அறிவியல். ஆனால், சூரியனில் வசிக்கச் சொல்லும் இந்து மதம், அடிப்படை அறிவுகூட இல்லாத மூடக் கருத்தைக் கூறுகிறது. அப்படியிருக்க அது எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *