நிகழ்வுகள்: நாடாளுமன்ற முழக்கங்கள் நமக்கு உணர்ததும் உண்மைகள்!

ஜுலை 01-15 2019

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தபோது,  தி.மு.கழக, கழகக் கூட்டணியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர். பதவி ஏற்று முடிந்ததும் கழக உறுப்பினர்கள் _ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டனர். கூட்டணிக் கட்சியினரும் அவர்களுக்குரிய முழக்கங்களை முழங்கினர். ஜெய்பீம், அல்லாஹீ அக்பர், ஜெய்பெங்கால், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன.

தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமல்ல; காங்கிரசைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களும் தந்தை பெரியார் வாழ்க என்று உச்சரித்தது  தமிழ்நாடு கட்சிகளைக் கடந்து தந்தை பெரியாரைப் போற்றுகிறது _ மதிக்கிறது என்பதை உணர்த்தியது. தந்தை பெரியாரை சீண்டினால்  ஒட்டு மொத்த தமிழகமே எரிமலையாகும் என்பதை எதிரிகள் மீண்டும் புரிந்து கொள்ளச் செய்தது இந்நிகழ்வு.

வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கணிசமானோர் தத்தமது தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்பதில் ஆர்வம் காட்டினர். ஒடியா, பஞ்சாபி, டோக்ரி, அசாமி, கொங்கணி, காஷ்மீரி, மைதிலி என்று வெவ்வேறு மொழிகளில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருந்தபோது, இந்தி பிராந்தியங்களிலிருந்து வந்திருந்த உறுப்பினர்களில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத சிலருக்கு அவர்களுடைய தாய்மொழியில் உறுதிமொழி ஏற்கும் ஆசை வந்தது. நீண்ட பாரம்பரியம் கொண்ட தங்களுடைய மொழியிலேயே உறுதிமொழி ஏற்கும் விருப்பத்தை மக்களவைச் செயலரிடம் தெரிவித்தனர்.பிஹாரிலிருந்து வந்திருந்த ஜனார்தன் சிங் சிக்ரிவால், போஜ்புரி மொழியில் உறுதிமொழி ஏற்க விரும்புவதைத்  தெரிவித்தபோது, “போஜ்புரி மொழி எட்டாவது அட்டவணையில் இல்லை” என்ற காரணத்தைச் சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஜனார்தன் மிஸ்ரா, பெஹேலி மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவர் இந்தியில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருமே பாஜக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியின் பெயரால் நம் மொழியின் அடையாள இழப்பையும், அழிவையும் வேடிக்கை பார்த்திருப்பதா? என்பது இன்று இம்மொழி மக்களிடையே விவாதம் ஆகியிருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி போஜ்புரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5.05 கோடி. சத்தீஸ்கரியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.62 கோடி. மஹதியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 1.27 கோடி. வெறும் 24,821 பேரால் தாய்மொழியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க முடியும் என்றால், ஏன் நமக்கு அந்த உரிமை கிடையாது என்று ஒரு போஜ்புரிக்காரர் எழுப்பக்கூடிய கேள்வி உரிமை சார்ந்த ஆழமான ஒன்றாகும்.

சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றுக் கொண்டபோது எந்தவித எதிர் முழக்கங்களும் அவையில் எழுப்பப்படவில்லை. தமிழ் வாழ்க! என்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் பெயரையும், அம்பேத்கர் பெயரையும் கூறி வாழ்க என்று முழங்கியபோது, பா.ஜ.கவினர் எதிர்முழக்கம் எழுப்பி இருக்கின்றனர். இதிலிருந்து தமிழ்நாட்டின் அரசியல் என்பது பா.ஜ.க. எதிர்ப்பு அரசியல் மட்டுமிலலை. அது சிந்து சமவெளி காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வரும் தாக்குதல் குரலாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருமைக் கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது. சமஸ்கிருதம், இந்தி என்று மொழிகளைத் திணித்துவிட முடியாது. அவரவர் தாய்மொழிப் பற்று இவை இரண்டு மொழிகளை விடவும் உயர்ந்து நிற்கிறது. ஆகவே, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கடவுள் என்கிற வாதம் இதன் மூலம் பொய் என்பது தெளிவாயிற்று. பன்முகத்தன்மையில் அரசியல் ஒருமையுணர்வைப் பேணுவது ஒன்றே வழி என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

-மகிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *