கே: தமிழகத்தில் பல நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமங்கள்தோறும் பரப்புரை செய்கிறார்கள். கிராமங்களை சென்றடைய திராவிடர் கழகத்தின் செயல்திட்டம் என்ன?
– புவியரசன், அடையாறு
ப: 1ஆங்காங்கு பயிற்சி முகாம்கள் _ இளைஞர்களுக்கு.
2. கிராமப் பிரச்சாரத் திட்டம்.
3. பிரச்சாரம்.
4. பெரியார் சமூக காப்பணி பயிற்சி.
5. மாநாடுகள் _- கருத்தரங்குகள் _ பொதுக்கூட்டங்கள் (நகர்ப்புறங்களிலும்கூட). –
கே: தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் பாதிப்புடைய திட்டங்களைத் தடுக்க, மாநில அரசுக்கு உரிமை உள்ளதா? அப்படி மாநில அரசும் ஏற்றுக்கொண்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
– விநாயகம், தாம்பரம்
ப: தாராளமாக. அரசியல் சட்டப்படி அதிகாரங்கள் 1. மத்தியப் பட்டியல், 2. மாநிலப் பட்டியல். 3. ஒத்திசைவுப் பட்டியல் என்பதும், பீடிகை அடிப்படை உரிமை. அரசியல் சட்ட அடிக்கட்டுமானப் பகுதியை மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதால் மாநில ஆட்சிகள் செய்ய முடியும். எதிர்க்க உரியதே. ஆனால், மடியில் கனமில்லாத மாநில அரசுகளால் மட்டும்தான் இது முடியும்.
மு.க.ஸ்டாலின்
கே: தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு உணர்த்தும் பாடம் என்ன?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: தெற்கில் உள்ள கொள்கைத் தெளிவு
1. வடபுலத்தில் இல்லை என்பதும்,
2. தமிழ்நாட்டில் தி.மு.க. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவான கட்டுப்பாடான லட்சியக் கூட்டணி போன்று அமைக்காமல் தேர்தலுக்கு முன் அமைத்த மணல் வீடு கூட்டணி.
3. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி சண்டை அதற்கு உலைவைக்கும் என்பதை அக்கட்சியினர் புரிந்து உணரவேண்டும்.
அகிலேஷ் யாதவ்
கே: மக்களிடம் வளர்ச்சிப் பணிகளைப் பேசாமல், மதப் பிரிவினையைப் பேசி தொலைக்காட்சி, செல்பேசி ஆகிய ஊடகங்களில் பெருமளவில் பொய், மோசடிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள் என்ற அகிலேஷ் யாதவின் கருத்தைப் பற்றி?
– க.காளிதாஸ், காஞ்சி
ப: அதனை எதிர்க்க அகிலேஷ் யாதவ் போன்றவர் என்ன மாற்று செய்தார்கள். வெறும் வாய்ப் பேச்சு வாக்குகளை வாங்கித் தந்துவிடுமா?
கே: இந்தித் திணிப்பை எதிர்த்து இணையம் முழுவதும் அனல் பறக்கும் நிலையில், அதனைப் பெரிதாகக் காட்டாமல் எங்கோ ஒரு மூலையில் ஒட்டப்பட்டுள்ள இந்தி ஆதரவு சுவரொட்டிகளை பெரிதாக ஊடகங்கள் காட்டுவது ஏன்?
– க.கலைமணி, முடப்பள்ளி, விருத்தாச்சலம்
ப: நம் நாட்டு ஊடகங்கள் பலவும் அதன் முதலாளிகளுக்குக் கட்டுப்பட்டவைகள். முதலாளிகள் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு கட்டுப்பட்டவர்கள். எனவே, பரிதாபத்திற்குரியவர்கள் இங்குள்ள ஊடக ஆசிரியர்கள்!
கே: தமிழக அரசு அலுவலகத்தில் அண்மையில் அறிவித்த உடைக் கட்டுப்பாடு சரியா?
– மதி, சைதை
ப: அடிப்படை உரிமைக்கு மாறானது. டீசென்சி வேறு; கட்டுப்பாடு வேறு! உண்ணுவது உடுப்பது அவரவர் உரிமை. தலையிடுவதோ, மூக்கை நுழைப்பதோ கூடாது.
கே: மத்திய அமைச்சரவையில் தமிழ்நாடு சார்பாக என்று சொல்லி இரண்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் மோடி அரசு பற்றித் தங்கள் கருத்து என்ன?
– இன்குலாப், மதுரை
ப: மோடி அமைச்சரவையே உயர்ஜாதி அதிகம் 32/57 உள்ள அமைச்சரவை. 13 பிற்படுத்தப்பட்டோர். சிறுபான்மையினர் மிகவும் அரிது. (ஒன்றே ஒன்று). தலித்துகள் 6 பேர்கள். புரிகிறதா?
கே: வரும் ஐந்தாண்டுகளில் பாசிச மோடி அரசுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்?
– மித்திரன், காட்பாடி
ப: அரசின் திட்டங்களை வரவேற்கத்தக்கதாக இருந்தால் வரவேற்கும்; கண்டிக்க வேண்டியவையாக இருந்தால் கண்டித்துப் போராட்டம் நடத்தவும் தயங்காது! கண்ணை மூடிய வெறுப்பு _ எதிர்ப்பு தேவையில்லை. கண்ணை மூடிய ஆதரவும் இருக்க முடியாதவை. பிரச்சினைகளையொட்டியே அமையும்.
கே: நீட் தேர்வுக்கு விலக்கு பெற சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்?
– கல.சங்கத்தமிழன், செங்கை
ப: தளபதி மு.க.ஸ்டாலின் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முந்தைய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர அழுத்தம் நாடாளுமன்றத்தின் மூலம் தரப்படும்.