இயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்

ஜூன் 16-30 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

25.08.1987 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ராஜிவ்_ஜெயவர்த்தனே ஒப்பந்தம் குறித்து பேச நான் சென்றிருந்தேன். என்றாலும், சங்கராச்சாரி ஓடிப் போனதுபற்றி மக்கள் அறிய ஆர்வங் காட்டியதால் அது குறித்து முதலில் பேசினேன்.

“காஞ்சி சங்கராச்சாரியார் பிரச்சினைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது என்ன அவ்வளவு முக்கியமான பிரச்சினையா? என்று கேள்வியை கேட்டுவிட்டு, பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், காஞ்சி மடத்தைப் பற்றி சில நிமிடம் பேசினேன். அப்போது, கலைஞருக்கு உடல்நலம் கெடவேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக, ஜெயேந்திர சரசுவதி, பேட்டி அளித்ததை சுட்டிக்காட்டி, இதுதான் சங்கராச்சாரியின் மனிதாபிமானமா? என்று கேட்டேன்.

“ஜெயேந்திர சரசுவதி எங்கே போயிருக்கிறார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்தான், ராஜிவ்_ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்தவர். எனவே, அவர் அமைதியை நிலைநாட்ட யாழ்ப்பானத்திற்கு யாருக்கும் தெரியாமல் போயிருக்கிறார் போலும்’’ என்று நான் நக்கலாகக் கூறும்போது, கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது!

“மூத்த சங்கராச்சாரியாருக்குத்தான் ‘ஞானதிருஷ்டி’ உண்டு என்கிறார்களே, அவர் தனது ‘திருஷ்டி’ மூலம் ஜெயேந்திரர் எங்கே போயிருக்கிறார்? தனியாகப் போயிருக்கிறாரா? அல்லது வேறு யாருடனாவது போயிருக்கிறாரா என்பதைக் கண்டு பிடிக்கலாமே’’ என்று நான் கூறியபோதும் கூட்டத்தில் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ராஜிவ்_ஜெயவர்த்தனே ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில், “தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், தியாக உணர்வையும் உணர்ச்சியோடு எடுத்து விளக்கினேன். அண்மையில், விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டுவை சந்திக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வாழ்க்கையின் வசந்தத்தில் இருக்க வேண்டிய இளைஞர்கள் எல்லாம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு களத்தில் நிற்கிறார்கள் என்பதை  வேதனையுடன் எடுத்துக் கூறி விளக்கினேன்.’’

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் 28.8.1987 அன்று இரவு  பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் 27.8.1987 மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது _ அனுமதிக்கக் கூடாது என்று சொல்லியும் உள்ளனர். இதனை காவல்துறை மறுத்து திராவிடர் கழகத்தினர் முறையான அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். அவற்றை தடை செய்ய முடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் அடி ஆட்களை தயார் செய்து கொண்டு வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து பொதுமக்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வன்முறை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையைத் ‘தீ’ வைத்து எரித்தனர்.

இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து கார் மூலம் (எம்.எஸ்.எம்.1751) புறப்பட்டு தம்மம்பட்டி பொதுக்கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்தேன். காரில், சிங்.குணசேகரன், தாமோதரன், ஆத்தூர் முருகேசன், அக்கிச்செட்டிபாளையம் செல்லமுத்து உள்ளிட்டோர் என்னுடன் பயணம் செய்தனர்.

6.45 மணிக்கு உடையார்பாளையம் மெயின் ரோட்டிலுள்ள பாலத்தருகே வந்தபோது ஒரு கும்பல் திடீரென்று நான் வந்த காரை மடக்கி கடுமையான ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்கி, சூழ்ந்துகொண்டு காரை தாக்கினார்கள். “அடி! கொல்லு!’’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக் கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு குறி வைத்துத் தாக்கினர். “இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவானுங்கடா! வீரமணியைக் கொல்லுங்கடா!’’ என்று துரத்தியபடியே காரை அடித்து நொறுக்கினார்கள்.

கார் டிரைவர் வெகு சாமர்த்தியமாக வண்டியைப் பின்னாலே கொண்டு வந்து திருப்பி வெகு விரைவாக தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அன்று கார் டிரைவரின் சாமர்த்தியம்தான் என்னை ஆர்.எஸ்.எஸ். காலிகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிக்க வைத்தது.

காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட தி.க. துணைத் தலைவர் ஆத்தூர் முருகேசனும், தம்மம்பட்டியைச் சேர்ந்த தோழர் செயராமனும் புகார் கொடுத்தனர்.

ஊரில் பதட்டநிலையும், பரபரப்பும் ஏற்பட்டது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் இந்த ஊரை விட்டுப் புறப்படுவேன். மேடை இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும் பேசி விட்டுத்தான் செல்வேன் என்று, மிகத் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே 75 நிமிடம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து 11.45 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டேன்.

என் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துவது 3ஆவது முறையாகும், இம்முறை உயிருக்குக் குறி வைத்தனர். இதையெல்லாம் முறியடித்துவிட்டுத்தான் இன்றுவரை என் பயணம் தொய்வின்றி பெரியார் போட்டுத்தந்த பாதையில் தொடர்கிறது.

கழகத் தோழர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்

என்னைப் பார்த்து, ‘வணக்கம்’ என்று கூறும்போது கத்தியோடுதான் ‘வணக்கம்’ என்று கூறவேண்டும்.

இனி யாரையும் நம்பி நாம் வாழ முடியாது, வாழக் கூடாது! என்று 31.8.1987 அன்று ‘தம்மம்பட்டி கலவரம்’ குறித்து மன வேதனையுடன் கழகத் தோழர்களுக்கு அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன்.

மயிலாடுதுறை, நாகலாந்து அருள்ஜோதி அவர்கள் தம்பியும் திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடைய மைத்துனருமான மா.சிற்றரசு _வை.விஜயலட்சுமி ஆகியோர்களுடைய வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா நிகழ்ச்சி 06.09.1987 அன்று காலை 10.30 மணிக்கு என்.வி.ஆர்.ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன். திருமணத்தில் மயிலாடுதுறை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் வடிவேல், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பேராசிரியர் இறையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

வன்னியர் சமுகத்திற்கு தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்காக டாக்டர் இராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தியது.  16.09.1987 அன்று இரவு துவக்கப்பெற்ற சாலை மறியல் கிளர்ச்சி நீண்ட நாட்களாக ஓயவில்லை. 

இப்போராட்டத்தில் பேருந்துகள் எரிப்பு, மரங்கள் வெட்டிச் சாய்ப்பு, சாலைகள் துண்டிப்பு என கலவரச் சூழல் ஆனதுடன், அது ஜாதிக் கலவரமாகவும் மாறும் சூழல் ஏற்பட்டது. அன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதனைக் கண்டித்து 22.09.1987 அன்று ஒரு அறிக்கை விடுத்தேன்.

அந்த அறிக்கையில், இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதத்தை 21 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து கிளர்ச்சி நடத்தும் வன்னியர் சங்கம், ஒரு பக்கம் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்த்திடக் கிளர்ச்சி என்று கூறிவிட்டு _ மறுபக்கம் அவர்களைத் தாக்குவது, கொளுத்துவது என்றால் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? உண்மையாகவே அவர்களுக்காக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட முடியுமா?

அப்பாவி தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்குமான பெரிய ஜாதிக் கலவரமான திருப்பமும் வந்துவிட்டதே! இதன் விளைவு எங்கே போய் நிறுத்தும் தமிழ்நாட்டினை?’’ என்று குறிப்பிட்டேன். மேலும்,

“திராவிடர் கழகம் இப்பிரச்சினையில் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இணைப்புப் பாலம் என்றாலும், குற்றவாளிகள் யார் யாராக இருப்பினும் அதை ஒருபோதும் ஆதரித்து வேடிக்கை பார்க்காது, அரசு காவல்துறை தவறிடும் பட்சத்தில் கழகக் கருஞ்சட்டையினரே தவறு இழைக்கும் சமுகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காவலர்களாக மாறித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்படும்!’’ என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருந்தேன்.

வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் இருந்த வன்னியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை 07.10.1987 அன்று சிறைச்சாலையில் சந்தித்து உரையாடினேன். என்னுடன் எம்.கே.டி.சுப்ரமணியம், கவிஞர் கலி.பூங்குன்றன், ‘விடுதலை’ ராதா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை பொது மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் எஸ்.கே.சாதிக் பாட்சா அவர்களை 24.09.1987 அன்று இரவு 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தேன்.

எஸ்.கே.சாதிக் பாட்சா

இதுகுறித்து மருத்துவர்கள் அவர்களுக்கு சில நாட்கள் ஓய்வுதேவை என்று மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். என்னுடன் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தனி அலுவலராக இருந்த இராஜசேகரன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

திலீபன்

இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த தேவையற்ற மனித தன்மையற்ற செயல்பாடுகளை கண்டித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப் பிராந்தியத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி 26.09.1987 அன்று அவர் தியாக மரணம் எய்தினார்.

திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அதே வேளையில் தமிழீழத்தின் ஏனைய மாவட்டங்களான முல்லைத் தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றிலும் தமிழீழ முக்கிய விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் நீரோ, உணவோ சாப்பிடாது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். விடுதலைப் புலிகளின் நியாயமான இந்த அகிம்சைப் போராட்டத்தை மதித்து, ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத இந்தியாவின் துரோகத்தால் ஒரு மாபெரும் வீரனை இழந்து விட்டோம் என்று மக்கள் நாடு முழுவதும் கவலைப்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ‘விடுதலை’யில் 27.09.1987 அன்று “விடுதலை வீரன் திலீபனுக்கு நமது வீரவணக்கம்’’ என அறிக்கையை வெளியிட்டேன். அதனைத் தொடர்ந்து 30.09.1987 அன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் வீரவணக்கமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. 1.10.1987 அன்று பெரியார் திடலில் என் தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடெங்கும் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

ஜெயேந்திர சரஸ்வதி

சமஸ்கிருதம்தான் நாட்டின் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்துக்களின் நாடாம் இந்தியா. அதற்கு ‘இந்துஸ்தான்’ என்ற பெயர் மாற்ற வேண்டும் என்ற முழக்கங்களுடன் “ஜனகல்யான் ஜன ஜாக்ரான்’’ என்ற புதிய இயக்கத்தினை ஆர்.எஸ்.எஸி.ன் கொள்கைப் பிரகடனத்தில்  தொடங்கினார் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி. ஜாதி, மத பேதமற்ற இயக்கம் என்று ஏமாற்றி, சனாதன தர்மத்தை மேலும் திணிக்க முயலும் இயக்கமே இது  என்று ஏமாற்று விளக்கத்தை அளித்தார். அதை விசயதசமியான 2.10.1987 அன்று ஆரம்பித்தார். இது குறித்து ‘விடுதலை’யில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சங்கராச்சாரி பற்றி உண்மை விளக்க கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன்.

அதில் பழைய மடாதிபதி புதியதாக ஏதோ புரட்சிகரமான இயக்கத்தை துவக்கப் போவதாக சொல்லிக்கொண்டே இருந்தாரே என்று பார்த்தால் அதிலே புரட்சியும் இல்லை; புதுமையும் இல்லை. “பழைய மொந்தையில் புதிய கள்’’ என்பது போல “ஆர்.எஸ்.எஸ். என்பதற்குப் பதிலாக ஜனகல்யாண் ஜனஜாக்ரன்’’ என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதனை விளக்கி எழுதியிருந்தேன்.

தந்தை பெரியார் பற்றாளரும், சுயமரியாதை வீரரும், சட்டப்பேரவை தி.மு.க. கொறடாவாய் இருந்தவருமான து.ப.அழகுமுத்து அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 6.10.1987 அன்று அதிகாலை மரணமடைந்தார் என்பதனை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

திரு.அழகுமுத்து அவர்கள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்; மருத்துவமனையில் நான் அவரை அண்மையில் நலம் விசாரித்து வந்தேன். ஆனால், திரு.அழகுமுத்துவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்று, ஆழ்ந்த துயரத்தையும், இரங்கலையும் வெளியிட்டு திருமதி அழகுமுத்துவிற்கு தந்தி அனுப்பினேன்.

புதுக்கோட்டையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் 09.01.1987 அன்று என் தலைமையில் நடைபெற்றது. 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின்படி சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக தீர்மானம் இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது முக்கிய தீர்மானமாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமுகநீதி மறுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் மண்டல பிற்படுத்தப்பட்டோர் மாநாடு 11.10.1987 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாடு ஆந்திர பல்கலைக்கழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பாகவும், விசாகப்பட்டிணம் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பாகவும் மண்டல குழு அறிக்கை தொடர்பான ஒரு நாள் மாநாடாக நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, என்னுடன் ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

ஆந்திர மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர் சர்தார் கோது லட்சண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.ராவ், பேராசிரியர் டாக்டர் இராமச்சந்திரடு, டி.பாலகவுடா உள்ளிட்ட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஆத்தூர் -_ தென்னங்குடிப் பாளையத்தில் ஆத்தூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் வ.அண்ணாதுரை, அமுதா ஆகியோரின் தந்தையார் சுயமரியாதை வீரர் வெங்கடாசலம் அவர்களின் படத்தை 15.10.1987 அன்று திறந்து வைத்து நான் உரையாற்றினேன்.

அய்யா நம்முடைய வெங்கடாசலனார் அவர்களை நீண்டகாலமாக நான் அறிவேன் என்றாலும், எல்லோரையும் போல அவர்கள் வருவார்கள். கூட்டங்களில் கருத்துகளை மிகவும் சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் அழகாகச் சொல்லிவிட்டு உட்காருவார்கள்.

அய்யா வெங்கடாசலனார் அவர்கள் 71 ஆண்டுகாலம் வாழ்ந்தாரென்றால் என்றைக்கு அந்தக் கொள்கையை நெஞ்சில் தேக்கிக் கொண்டாரோ, அந்தக் கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தார். அவருடைய வழிவழியான பேரப்பிள்ளைகளெல்லாம் அந்த உணர்வை எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் முக்கியமானது என்று கூறினேன்.

ஈழத்திற்கு அமைதியை நிலைநாட்ட என்று கூறப்பட்டு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை அங்குள்ள தமிழர்களை கொடுமை செய்தது. தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியது. இதனைக் கண்டித்து, அனைத்துத் தமிழர்களின் சார்பாக நானும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் மானமிகு பழ.நெடுமாறன் அவர்களும் சேர்ந்து 16.10.1987 அன்று ஒரு முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தோம். அதில், “40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய ராணுவம் யாழ்ப்பானத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. தமிழர்களின் ரத்தம் ஆறாக ஓடுகிறது. இந்த நிலையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும் இப்பிரச்சினையில் ஒன்றுபட்டு நிற்கின்றன. வருகின்ற 17.10.1987 அன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை கடையடைப்பு அறவழியில் _ தமிழ் நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். கடையடைப்புப் போராட்டத்திற்கும் மற்றும் பேரணிகள் கண்டனக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கும் தமிழர்கள் அனைவரும் பேராதரவு தர வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம். இவற்றை யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல! எதற்காக நடத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமானது.

வரலாறு கண்டறியாத வகையில் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சோதனையிலிருந்து மீள நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம். தமிழர்களின் ஒற்றமைதான் டில்லியை சிந்திக்க வைக்கும்’’ என்று அந்தக் கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டோம்.

17.10.1987 கடையடைப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் 19.10.1989 அன்று பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் சார்பில் கூட்டினோம்.

இதில் திராவிடர் கழகம், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், லோக்தள், உழவர் உழைப்பாளர் கட்சி, அம்பேத்கர் மக்கள் முன்னணி இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அ.இ.பார்வார்டு பிளாக், கட்டிடத் தொழிலாளர் சங்கம், தமிழர் பாதுகாப்புப் பேரவை, கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

கூட்டத்தில் அமைதிப் படைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதுபற்றி அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்துவரும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் முன் அக்டோபர் 26 அன்று அய்ந்து இடங்களில் அணி அணியாக மறியல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஈழத்தில் இந்தி அமைதிப் படையின் ராணுவ அட்டுழியங்களை எதிர்த்து வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் முன் 26.10.1987 அன்று அனைத்துக் கட்சிகள் கலந்துகொள்ளும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியைச் சார்ந்தவர்களும் யார்? யார் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று பட்டியலை தயார் செய்து அறிவிக்கப்பட்டது.

சென்னை தொலைக்காட்சி முன் என் தலைமையில் மறியல்; அதேபோல் திருச்சி வானொலி நிலையம், மதுரை வானொலி நிலையம் முன், நெல்லை வானொலி நிலையம், புதுச்சேரி வானொலி நிலையம் முன் உள்ளிட்ட அனைத்து நிலையங்களின் முன் இன உணர்வின் களபரிமாணத்தை தொலைக்காட்சியும், வானொலியும் நாள்தோறும் தமிழினத்திற்கு நன்கு உணர்த்தி வருகின்றன. உச்சாணிப் பதவிகளில் உச்சிக்குடுமி கும்பல் அமர்ந்துகொண்டு ஈழத் தமிழினத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விடுகிறது; கவிழ்த்துக் கொட்டுகிறது.

அதனைத் தொடர்ந்து, நானும் நெடுமாறன் அவர்களும், தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்தோம். அதில், தி.மு.க அறிவித்துள்ள ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கும், தமிழறிஞர்கள் கவிஞர்கள், பேராசிரியர்கள் நடத்தவிருக்கும் அறப் போராட்டத்திற்கு மாணவர்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களுக்கும் சாதி; மத, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்தும் தமிழர்களும் ஆதரவு தரும்படி வேண்டிக் கொள்கிறோம் என்று அதில் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

தொலைக்காட்சி ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டபடி 6 அணி மறியலுக்குச் சென்று கைதானது. முதல் அணிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரமும், இரண்டாவது அணிக்கு நானும், மூன்றாவது அணிக்கு அண்ணா மாவட்ட கழக செயலாளர் ஆவடி மனோகரனும், நான்காவது அணிக்கு திருப்பத்தூர் ஏ.டி.கோபால், திருவத்திபுரம் ப.அருணாச்சலம் ஆகியோர் தலைமையிலும், 5ஆவது அணி திண்டிவனம் தா.கோ.சம்பந்தம் தலைமையிலும், 6ஆவது அணி ஒரத்தநாடு வை.முகிலன் தலைமையிலும் புறப்பட்டுச் சென்று 300 தோழர்களுடன் நானும் கைது செய்யப்பட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகம் கொண்டு போகப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். சிறையில் இருந்த என்னை 27.10.1987 அன்று தி.மு.க. பொதுச் செயலாளர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள்.

26.10.1987 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற “சுயமரியாதைச் சுடரொளிகள் படம் திறப்பு விழா’’ நிகழ்வு நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் காரை சி.மு.சிவம், நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிவனணைந்த பெருமாள், சென்னை திருவல்லிக்கேணி ஏ.வி.துரைசாமி, வில்லிவாக்கம் திராவிடர் கழகத் தலைவர் மு.துரைக்கண்ணு ஆகியோர் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் சே.ஏழுமலை தலைமை வகித்து உரையாற்றினார்.

இறுதியாக இரங்கல் உரையாற்றினேன். வடசென்னை மாவட்ட தி.க. மகளிரணி அமைப்பாளர் ஏமலதாதேவி, தென்சென்னை மாவட்ட தி.க. மகளிரணி அமைப்பாளர் கு.தங்கமணி, அண்ணா (கொள்கை) மாவட்ட தி.க. செயலாளர் ஆவடி மனோகரன், குணசீலன், எம்.பி.பாலு உள்ளிட்ட ஏராளமான கழக குடும்பத்தினர் கலந்துகொண்டு இயக்கத் தொண்டர்களை, பொதுநல உணர்வுகளை, தியாக மனப்பான்மைகளை பாராட்டிப் பேசினார்கள்.

(நினைவுகள் நீளும் —-)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *