முகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே! எச்சரிக்கை!

ஜூன் 16-30 2019

 

மஞ்சை வசந்தன்

மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் அனைத்து வகுப்புகளிலும் சமஸ்கிருதம் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  முக்கியமாக எளிய முறையில் சமஸ்கிருதம் கற்பதற்கான நூல்கள் இந்தக் கல்வியாண்டில் இருந்தே விநியோகிக்கவேண்டும் என்றும், இந்தி ஆங்கிலத்தோடு சமஸ்கிருதம் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

“சமஸ்கிருதம் எளிதாகக் கற்க எளிய சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாநிலமொழிகளிலும், சமஸ்கிருத பேச்சு மொழியை எழுதுவதன் மூலம் சமஸ்கிருதத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளும் முறையைப்  பயன்படுத்தவேண்டும். சமஸ்கிருதப் பாடங்களைத் தேர்வு இல்லாத முறையில் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு 8 ஆம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதப் பாடங்களுக்குத் தேர்வு வைக்க வேண்டும்“ என்றும் கூறப்பட்டுள்ளது.

“சமஸ்கிருதம் இந்தியாவை ஒற்றுமையாக்குகிறது, சமஸ்கிருதத்தின் வழியாக நாம் இந்திய மொழிகளைக் கற்கவேண்டும். பல அறிவியல் கட்டுரைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன.  மொழியானாலும், அறிவியல் ஆனாலும், கணிதமானாலும் சமஸ்கிருதம் அனைத்திலுமே சிறந்த மொழியாக உள்ளது. ஆகவே அதை அனைவரும் படிக்கவேண்டும். குழந்தைகளுக்கு சமஸ்கிருத பஞ்ச தந்திரக் கதைகள் மூலம் எளிய முறையில் சமஸ்கிருதம் கற்றுகொடுக்கலாம். அதைக் குழந்தைகள் ஆவலோடு கற்றுக் கொள்ளும். இந்தியாவின் மிகவும் பழைமையான மொழி சமஸ்கிருதம், அதைக் கற்றுக் கொள்வதில் யாரும் எந்த தயக்கமும் காட்டக்கூடாது.

இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி, ஆங்கிலத்தோடு சமஸ்கிருதமும் கற்கவேண்டும், இந்தி பேசாத மாநிலங்களில் ஆரம்பக் கல்வியில் அறிமுகப் பாடமாக இருக்க வேண்டும், பிறகு அவர்கள் மேற்கல்விக்கு வரும் போது ஏதாவது ஒரு மொழியைத் தேர்தெடுக்கும் இடத்தில் சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி சமஸ்கிருதம் கற்பதை ஊக்குவிக்கவேண்டும்.

பழைமை வாய்ந்த மொழிகளான தெலுங்கு, ஒரியா, வங்காளி, கன்னடம் போன்றவைகள் அந்தந்த மாநிலங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆகவே, மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அனைவரும் கற்பதை உறுதிப்படுத்த வேண்டும்“ என்றும், அந்தக் குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் கருத்து

இந்த அறிக்கைப் பற்றி மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள்,

“பள்ளிகள் மொழிகள் கற்பிக்கும் நிறுவனங்களல்ல!

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. 40 பக்கங்களில் சொல்லக் கூடியவற்றை 400 பக்கங்களுக்கு அலுப்பூட்டும் மொழிநடையில் தந்திருக்கிறார்கள். தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது ஆய்வு முறை. ஆனால், முடிவுகள் எடுத்த பின் அவற்றுக்கு ஆதாரங்கள் தேடும் முயற்சியாகவே அறிக்கை உள்ளது. ஆங்கிலம் 14% வீடுகளில் வீட்டு மொழியாக உள்ளதென்றும், அது பாமரர் மொழியன்று என்றும் அறிக்கை கூறுகிறது. ஆங்கிலம் கற்பதன் நோக்கம் அதை வீட்டு மொழியாக்குவதல்ல; பிற அறிவுகளைப் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே கற்பிக்கப்படுகிறது. “பள்ளிகள் மொழிகள் கற்பிக்கும் நிறுவனங்களல்ல’’. வட மொழி தொடக்கப் பள்ளி நிலையிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் என்பதும், காளிதாசரின் படைப்புகள் அறிமுகப் படுத்த வேண்டும் என்பதும் பெரும் அவலம். இந்தி கற்க விரும்புபவர் இந்தி பிரச்சார சபாவின் மூலமாகக் கற்கலாம். மத்திய அரசு நடத்தும் அஞ்சல்வழி இந்தி வகுப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். தேவைதான் உந்து சக்தியாக இருக்கும். பள்ளிப் பாடத்திட்டத்தில் அதிக மொழிகள் சேர்த்தால் கணிதம், அறிவியல் போன்ற பிற பாடங்கள் நீர்த்துப்போக வாய்ப்புண்டு. பள்ளிப் பருவம் இனிமையாக இருக்க வேண்டும். தனக்கென்று படிக்க இடமில்லாத மாணவரே பெரும்பான்மையோர் என்று அறியாது, படித்த நடுத்தர வர்க்கத்துக்கான கல்வி முறையால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கியே செல்லும்’’ என்று கூறியுள்ளார்.

பதவியேற்ற ஆறு நாள்களுக்குள்..

ஆட்சிக்கு வந்து 6 நாள்களுக்குள் இப்படி கல்விக் கண்ணைத் குத்தி, ஒரு கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொள்கிறது மோடி அரசு என்றால், மக்கள் புரிந்து கிளர்ந்தெழவேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

இந்தி மொழியை இந்தி பேசாத மாநிலங்கள் கட்டாயம் ஒரு மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்ற மறுநாள் 31.5.2019 அன்று    மனித வளத்துறை அமைச்சர்  ரமேஷ் போக்ரியாலிடம்  முதல் வேலையாக புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு கொடுக்கப்பட்டது.

இதனை மனிதவளத்துறை அமைச்சரகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. இணையத்தில் பதிவேற்றியதும் ஊடகவியலாளர்களுக்கும் குறுநூலாக அச்சடித்துக்  கொடுக்கப்பட்டது. அவ்வாறு கொடுக்கப்பட்டதில்  இந்தி மொழி நாடு முழுவதும் கட்டாயமாக வேண்டும் என்றும், இந்தி இல்லாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும், அதன் மூலம் மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தி கட்டாயம், சமஸ்கிருதம் அனைத்து பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற வரைவு அறிக்கையின் முழு விவரம் வெளியான பிறகு முதலில் தமிழகத்தில் இருந்துதான் வழக்கம்போலவே எதிர்ப்புக் கிளம்பியது.

அதனை அடுத்து மகாராஷ்ட்ர,கருநாடகா, மேற்குவங்கம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்த எதிர்ப்பை அடுத்து,

“புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற பகுதியை நாங்கள் எடுத்து விட்டோம், மும்மொழிக் கொள்கை இருக்கும், அதில் இந்தி இருக்கும், விருப்பமுள்ளவர்கள் கற்கலாம்“ என்று திருத்திவிட்டதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.  இது மத்திய அரசின் தந்திரம் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொண்டு தொடர்ந்து எதிர்ப்பை உடனடியாகத் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். முதலாவதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

‘‘தங்களைக் கேட்காமல் எப்படி திருத்தம் கொண்டு வந்தீர்கள் என்று வரைவுத்திட்டக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிரங்கனிடம் புகார் கூறினர். மேலும் ஊடகங்களுக்கும் பேட்டியளித்தனர். இந்த நிலையில், மனிதவளத்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தி கட்டாயம் என்ற வாசகம் ஜனவரி மாதம் எங்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் நிலை வரைவு அறிக்கையில்தான் இருந்தது, அதை நாங்கள் நிராகரித்துவிட்டோம்; அதனை அடுத்து சில மாற்றங்களுடன் புதிய கல்விக்கொள்கை வரைவை எங்களிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில் தவறுதலாக இந்தி கட்டாயம் என்ற பழைய அறிக்கையை ஊடகங்களுக்கு அமைச்சரக அதிகாரிகள் அனுப்பிவிட்டார்கள். அதுவே குறுநூலாக அச்சடித்தும் கொடுக்கப்பட்டது, இதனால் தான் இத்தனை சிக்கல்கள் ஏற்பட்டன” என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த ஜனவரியில் பழைய வரைவுத்திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டதும் அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் “இந்தக் குழுவின் கட்டாய இந்தி பரிந்துரையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று சமுக வலைதளத்தில் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவர்கள் கூறுவது உண்மையென்றால் குழு உறுப்பினர்கள் இருவர் கண்டித்தது ஏன்? பித்தலாட்டத்திற்கு அளவே இல்லையா?  ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்யா? வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

இவர்கள் உறுதிமொழியை நம்ப முடியாது. “திருத்தம்’’ என்று அறிவிப்பதற்குப் பதில் மும்மொழித் திட்டம் இல்லையென்று அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆரிய பார்ப்பன அமைப்பான, ஆர்.எஸ்.எஸ். ஆரியர்களும், அவர்களின் சமஸ்கிருதமும் உயர்ந்தவை. என்று கூறி வருபவர்கள் மற்றவர்களும், மற்ற மொழியும் கீழானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“We (aryans) are the good, the enlightened people. We were the people who know about the laws of nature the law of the sprit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive same was given to us. Sometimes in trying to distinguish our people from others, we were called the enlightened – the Aryas – and the rest the melachas.”

– (ஆதாரம்: Bunch of Thoughts)

அதாவது,

“நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத்திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்)’’ என்பதே கோல்வால்கர் கூறியது.

இந்த அடிப்படையில்தான், 13 மாத பி.ஜே.பி. ஆட்சி, அதுவும் நித்தம் நித்தம் செத்துப் பிழைத்த ஆட்சியிலே அவர்களின் இனப்பற்றை மொழிப்பற்றைக் காட்ட தவறவில்லை. 40 ஆயிரம் பேர் கூட பேசாத மொழி, வழக்கொழிந்த செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து ‘சமஸ்கிருத ஆண்டு’ அறிவித்து அம்மொழியை வளர்த்தார்கள். செம்மொழி, தொன்மொழியாம் தமிழுக்கு, 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்ற தமிழுக்கு ஆண்டு அறிவிக்க வேண்டும் என்றால் மவுனமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் சமஸ்கிருதப் பற்றும் தமிழ் வெறுப்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.

வி.எச்.பி.யில் தனிப் பிரிவு

வி.எச்.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்பு பல்வேறு நோக்கங்களுக்காக 18 பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுகிறது. அதில் ஒரு பிரிவு சமஸ்கிருதத்தைப் போதிக்கவென்று அமைக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களில் சமஸ்கிருதத்தை எழுதவும் பேசவும் போதிப்பது இதன் நோக்கம். இதன்மூலம் இந்து சாஸ்திரங்களையும் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தையும் உயிர்ப்பித்துவிடலாம் என்பதே அவர்களின் இலக்கு.

சமஸ்கிருதத் திணிப்பே அவர்களின் இலக்கு!

ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைத் தலைவர் எனப்படுபவர் கூறுகிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ். பச்சைப் பார்ப்பன அமைப்பு என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

மொழிப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை கர்த்தா என்று கருதப்படும் கோல்வால்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?

“As a solution to the problem of ‘lingua fanca’ till the time Sanskrit takes that place, we shall have to give priority to Hindi on the score of convenience.”
(Bunch of Thoughts  8ஆவது அத்தியாயம்-  _ பக்கம் 113)

அதாவது, மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது; சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வருகின்ற வரை ஹிந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

உலக வழக்கொழிந்த ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை) இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம். அவ்வாறு ஆட்சி மொழியாகின்ற வரை இந்தியைப் போனால் போகட்டும் என்று ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.”

இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளையும் விட சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைப் ‘பிதாமகர்’ அறிவிக்கிறார் என்றால் அந்தக் கொள்கையில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி.யின் செயல்பாடு அப்படித்தான் இருக்கும்.

இது மட்டுமல்ல, 1952ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் டாக்டர் முகர்ஜி தலைமையில் ஜனசங்கம் நிறைவேற்றிய தீர்மானம் என்ன தெரியுமா?

“நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே  பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள். ஹோலி, தீபாவளி, ரக்ஷபந்தன் ஆகியவையே தேசியப் பண்டிகைகள் என அறிவிக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் மொழிக்குத் தகுதியே இல்லாமல் போனாலும், ஒரு சதவீதம் பேர்கூட அதை பேசாமல் போனாலும், தங்களுடைய மொழியே கட்டாயம் போதிக்கப்படவேண்டும்; மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருத எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்றால் இது எப்பேர்ப்பட்ட அடாவடித்தனம்; ஆதிக்கப்போக்கு, பேட்டை ரவுடிகள்கூட இப்படிப் பேச மாட்டார்களே!

அவர்களது இராமாயணமும் மகாபாரதமுந்தான் இலக்கியங்களாம். நமது திருக்குறள் போன்ற உலக ஒப்பற்ற நூல்களெல்லாம் குப்பைகளாம்!

அவர்களது தீபாவளியும், ஹோலியுந்தான் பண்டிகைகளாம். நமது அர்த்தமுள்ள ‘பொங்கல்’ எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவையாம்.

எது தன்னுடைய அது வாழவேண்டும்; மற்றதெல்லாம் அழியவேண்டும் என்ற ஆரிய தத்துவம். அப்படியே இங்கு பிரதிபலிப்பதைப் பாருங்கள். வேதங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன. ஆரியர்கள் வாழவேண்டும். அவர்களுக்கு எதிரானவர்களெல்லாம் நாசமாகப் போகவேண்டும் என்பதுதானே! அதைத்தான் இங்கு தீர்மானமாகப் போட்டுள்ளார்கள்.

ஆக, ஆர்.எஸ்.எஸ். சொல்வதையே ஜனசங்கம் சொல்கிறது; ஜனசங்கம் சொல்வதையே பா.ஜ.க. செய்கிறது. ஆக இவை பெயரால் வேறுபட்டாலும் அனைத்தும் ஆரிய அமைப்புகளே! ஆர்.எஸ்.எஸ் ஆரியத்தின் அடிப்படைத் தத்துவத்திலே -_ அச்சிலே தான் பி.ஜே.பி ஆட்சி நடைபெறுகிறது. அதன் விளைவுதானிது.

1938இல் 2500 கிராமப்புறப் பள்ளிகளை இழுத்து மூடிய அன்றைய முதல் அமைச்சர் அதே ஆச்சாரியார் என்ன காரணம் சொன்னார்? “மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்யவே பள்ளிகளை மூட வேண்டியிருந்தது” என்று சொன்னாரே! அதே நேரத்தில் ரூபாய் பதினைந்து லட்சம் செலவில் சமஸ்கிருதக்  கல்லூரியைத் திறந்து வைத்தார்.

ஆச்சாரியாருக்கு இருந்த இந்த சமஸ்கிருதத்தின் மீதான அக்கறை எதைக் காட்டுகிறது? சமஸ்கிருதம் என்றால் ஆரியர்களின் – பார்ப்பனர்களின் தாய் மொழி – அதன் மீது அளப்பரிய பற்று – வெறி இருப்பதைத்தானே?

அதனால் தான், ஆரியத்துக்கு எதிராகப் போர்புரிந்த பெரியாரின் வழிவந்த அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 23 ஜனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்க்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தன.

1.            மும்மொழித்திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாகக் கல்வித்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டது. தமிழும், ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது.

2. தேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச் சொற்கள் விலக்கப்பட்டன.

3. அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

4. அய்ந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

5. நடுவண் அரசை இந்திக்கு  அளிக்கப்படும்  தனிநிலையை  முடிவுக்குக்  கொண்டுவந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தியது.

6. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில்  உள்ள அனைத்து  மொழிகளின் வளர்ச்சிக்கும்  நிதிஉதவி அளித்திட இந்திய அரசைக் கோரியது.

அன்றிலிருந்து தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாய் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது மிகப் பெரிய விளைவுகளுக்கே வித்திடும்.

‘நீட்’ தேர்வு என்பதும் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பே.

 ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்குவதன்மூலம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எல்லா பள்ளிகளிலும் நடப்புக்கு வரும். அப்பாடத்திட்டத்தின்படி இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமாகும். எதிர்காலத்தில் தாய்மொழிகளுக்குப் பதில் சமஸ்கிருதமே வழக்கில் வரும் அவலம் ஏற்படும்.

தலைவர்கள் கண்டனம்:

தி.க தலைவர் கி.வீரமணி

 

“மும்மொழிக் கல்விக் கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம், அவற்றுடன் வேறொரு மொழியாக இந்தி இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித் தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் – எடுத்துக் காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப் பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளதானது இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத – குறிப்பாக தமிழ் நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது. சமஸ்கிருதத்தை உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் வரை பயிற்றுவிக்க வேண்டும் என்பதெல்லாம் பார்ப்பனீயக் கலாச்சாரத் தையும், ஆர்.எஸ்.எஸ். – பிஜேபியின் அடிப்படை நோக்கமான இந்துத்துவாவையும் கல்வி மூலம் திணிக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியான ஏற்பாடாகும். இரு மொழி மட்டுமே தமிழ்நாட்டில்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான் – இரு மொழிக் கொள்கைதான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்டமே இயற்றப்பட்டு விட்டது.

இந்த நிலையில் மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.’’

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

 

“இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால், அது தமிழ் தமிழ் என்று சொல்லத் தயக்கப்பட மாட்டேன் என்று சட்டமன்றத்தில் அண்ணா முழங்கியது இன்றைக்கும் இளைஞர்களின் காதுகளில் ரீங்கார மிட்டுக் கொண்டிருக்கிறது. மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது.

அந்த ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்படத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை திமுக ஒரு போதும் சகித்துக் கொள்ளாது-கடுமையாக எதிர்த்துப் போர்தொடுக்கும்.

இந்தி வேண்டாம் என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட தமிழ் கட்டாயம் கற்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சட்ட அட்ட வணையில் உள்ள மாநில மொழிகளின் வரலாறு தெரியாமலேயே -இந்தி மொழி, சமஸ்கிருதம் போன்ற இரு மொழிகளை மட்டும் கட்டாயமாகத் திணித்து-ஒரு மும்மொழித்திட்டத்தை தமிழ்நாட்டிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் புகுத்தி, அதன் மூலம் நாட்டைப் பேதப்படுத்தவும் இந்தக் குழு பரிந்துரையைச் செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட செயலாகும்.

ஆகவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய பாஜக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும்.’’

கே.எஸ்.அழகிரி

 

“தமிழகத்தில் தற்போது இருமொழிக் கொள்கை உள்ளது. இதற்குப் பதிலாக மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது.

ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளை அவர்கள் படிக்கின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியைப் படிப்பது அவர் களுக்கு தேர்வு சுமையை அதிகரிக்கும்.

ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்ற முறையில் மத்திய அரசு எதையும் திணிக்கக் கூடாது. திணிப்பு என்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது’’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

வைகோ கண்டனம்

 

“கஸ்தூரிரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன் எம்.பி

 

‘‘இந்த சனநாயக விரோத- மேலாதிக்கப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.”

பாஜக’வின் முதன்மையான நோக்கம், இந்தியாவை இந்தி மொழியின் ஆதிக்கமும் இந்து மதத்தின் ஆதிக்கமும் நிலை நாட்டப்பெற்ற ஒரு தேசமாக மாற்றப்பட வேண்டுமென்பது தான்’’ என திருமாவளவன் கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை:

 

கல்வியை காவிமயமாக்குவது, வணிக மயமாக்குவது, கல்வியை மாநில உரிமைகளை மொத்தமாக கபளீகரம் செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க-வின் அரசு செயல்பட்டு வந்திருக்கின்றது. இது வரையிலும் இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தில் தற்போது மும்மொழித்திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இந்தியை திணிப்பதற்கான முயற்சி இது’’ எனக் கூறினார்.

இரா.முத்தரசன்

 

 

“இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழியை திணித்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *