மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்!

ஜூன் 01-15 2019

தமிழ்நாடு பெரியார் (திராவிட) மண்

என்பது உறுதிப்படுத்தப்பட்டது!

தமிழர் தலைவர் பேட்டி

25.5.2019 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது,

தமிழகம் பெரியார் மண் – திராவிட பூமி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு மாறுபட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக இது பெரியார் மண் _ திராவிட பூமி. இந்த  பூமியில் வேறு எந்த விதையையும் விதைக்க முடியாது; விதைத்தாலும் அவை முளைக்காது, மலராது என்பதை மிகத் தெளிவாகக் காட்டிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி!

தந்தை பெரியார் _ அறிஞர் அண்ணா _ முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்!

தமிழகத்தினுடைய உரிமைகள் அத்தனையும் இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால், மத்திய அரசுக்கு, டில்லிக்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை மீட்கவேண்டும்.

பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராகிறார்; ஓட்டுப் போட்டவர் களுக்கும் அவர் பிரதமர்; ஓட்டுப் போடாதவர்களுக்கும் அவர் பிரதமர் என்கிற முறையிலே, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருந்த நிலையை அவர்கள் மாற்றியாகவேண்டும்.

வெற்றிக்குக் காரணமானவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்!

தமிழகம் எல்லாத் துறைகளிலும், விவசாய பூமியாக இருந்தாலும் வஞ்சிக்கப்படுகிறது; வேலை வாய்ப்பாக இருந்தாலும் வஞ்சிக்கப்படுகிறது. அது போலவே இன்னும் பல உரிமைகள் நீட்’ தேர்வு போன்ற பிரச்சினையில், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், மூன்று ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கிறது என்கிற நிலைமைகளையெல்லாம் மாற்ற, தி.மு.க.வின் பலம் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எடுபடும்.

தேர்தலோடு கடமை முடிந்து விடவில்லை – இப்பொழுதுதான்  தொடங்கியிருக்கிறது!

அதுபோலவே, திராவிட இயக்கத் தோழர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள், திராவிட இயக்கக் கொள்கையாளர்களின் முன்  இப்பொழுது இருக்கக்கூடிய மிகப்பெரிய கடமை தேர்தலோடு முடிந்துவிடவில்லை. தேர்தல் வெற்றியின் மூலம் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அடையாளம்.

மாற்றம் – மன மாற்றம் – சிலருக்கு ஏமாற்றம்!

செய்தியாளர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: தாராளமாக. ஜனநாயக முறையிலேயே மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மாற்றம், மன மாற்றம், சில பேருக்கு ஏமாற்றம் என்ற அளவில் வரும். அதற்குரிய நாள் தொலைவில் இல்லை. வெகு விரைவில் வரும் _ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழலில்…

செய்தியாளர்: அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்காத ஒரு சூழலில், தமிழகத்தின் குரலுக்கு அங்கே செவி சாய்க்கப்படும் என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: செவி சாய்க்காமல் இருந்தால், அது ஜனநாயகம் இல்லை என்று பொருள்.

தமிழகத்தினுடைய குரலைக் கேட்காமல், நெரிக்க ஆரம்பித்தால், தமிழகம் _ புதுவை சேர்த்து 39 உறுப்பினர்கள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் வந்திருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ஜனநாயகக் களத்தை சிப்பாய்களைப் போல் காப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *