கி.வீரமணி
சமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு! இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு! ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு! பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும் புதிய தூதுவன் விடுதலை நாளேடு!
அடக்கு முறைகளைச் சந்தித்த ஏடு
ஊமைகளாய், ஆமைகளாய் வாழும் மனிதர்களாம் நம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போர்க் குரலாய் – உரிமை முழக்கமாய்த் திகழுவது நமது விடுதலை நாளேடு!
பெண்கள் எல்லாம் அடுப்பூதவோ, பிள்ளை பெறும் யந்திரங்களாகவோ, அலங்காரப் பொம்மைகளாகவோ இல்லாமல் – மானுடச் சக்தியின் மகத்தான வார்ப்புகளாக ஒளி வீசித்திகழ்ந்திட அவர்களைப் புலி போத்துகளாக்கி புதிய உலகின் புரட்சிச் சின்னங்களாக்கி செதுக்கிடும் ஏடு விடுதலை நாளேடு! அநீதியை எந்த ரூபத்தில் கண்டாலும் அஞ்சாது, அயராது அதனை எதிர்த்து ஓயாது குரல் கொடுத்து, அதனால் விளைந்த ஆயிரமாயிரம் அடக்குமுறைகளையெல்லாம் விழுப்புண்களாகப் பெற்று வீறு நடைபோடுவது விடுதலை நாளேடு!
இது தனியாரின் உடைமையல்ல – தமிழ்ப் பெருங்குடி மக்களின் பொதுச் சொத்து – திராவிடர்களின் தெளிந்த நல் பாதுகாப்பு அரண்! மக்கள் நலம் பார்த்தே! தன்னலம் கருதாது, தனது இழப்புகள் எது வாயினும் அதை இன்முகத்தோடு ஏற்று வீறு நடைபோடும் ஏடு விடுதலை நாளேடு!
அய்யாவின் அறிவுக்கொடை!
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற மகத்தான சமூக விஞ்ஞானியின் ஆய்வுகள் அறிவுக் கொடை சாய்க்க முடியாதவை என்று சரித்திரத்தில் தம்பட்டம் அடித்த ஆட்சிகளைக்கூட குடைச் சாய்த்து, எளிய மக்களின் ஏழைப் பேராளர்களை ஆட்சியில் அமர்த்திடும் காட்சியை பலமுறை கண்டு களித்திட்டது விடுதலை நாளேடே!
எல்லாவற்றையும்விட இதன் சிறப்பு – தமிழ் போல் சீரிளமையோடு செயல்திறம் மிக்கது இந்த 85ஆ-ம் ஆண்டில் அது அடியெடுத்து வைக்கும் நிலையிலும்! வலிவுடனும் பொலிவுடனும் திகழும் நாளேடு.
95 வயதிலும்கூட, தொய்வில்லாத் தொண்டறம் நிகழ்த்தியே வரலாறு படைத்திட்ட வைக்கம் வீரர், வலிமை குறையாத வாளாக நம் இனத்தின் பாதுகாப்புக்கு விட்டுச் சென்ற நாளேடு விடுதலை நாளேடு
உலகத்தில் நடைபெறும் ஒரே நாத்திக நாளேடு – விடுதலை தான் என்று உலகப் பகுத்தறிவாளர் கழகத்தின் மே நாள் தலைவர் நார்வே நாட்டினைச் சார்ந்த லெவிஃபிராகல் சொன்னாரே!
அந்த விடுதலை கடந்து வந்த பாதையை அரிமாநோக்குடன் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிறது!
தமிழன் வீடு என்பதற்கான அறிவிப்புப் பலகை
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலையைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால் அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல் மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய விடுதலையினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
– ‘விடுதலை’ பணிமனை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் (‘விடுதலை’ 02.11.1965)
எத்தனையெத்தனை நெருப்பாறுகள்!
எத்தனையெத்தனை புயல்கள், சுனாமிகள் என்ற ஆழிப்பேரலைகள்! அடக்கு முறைகள் ரூபத்தில்!
அவசர காலத்தின் எத்தனை எத்தனை பூட்டுக்கள் இந்த ஏட்டின் எழுத்திற்கு!
சிறுநரிகள் எல்லாம் சிங்கவேடம் போட்டு ஆடிய காலம் ஆயிற்றே!
சிறையிலேகூட தார் அடித்து தரப்பட்ட ஏடுகளின் பக்கங்கள் தான் எத்தனை எத்தனை!!
நெஞ்சம் குமுறுகிறது
எண்ணினால் இன்னமும் நெஞ்சு குமுறுகிறது! அத்தனையும் தாண்டி அதன் பணி ஓயாது! என்று காட்டி இப்போது 85ஆ-ம் ஆண்டில் அடியெடுத்து தலை தாழாச் சிங்கமாம் தந்தை பெரியார்தம் கர்ச்சனையாக இன்னமும் முழங்குகிறது கம்பீரக் குரலில்!
ஏழரை மணிக்கு வந்தால் பத்தரை மணி வரை பணி!
காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப் பயணம், இந்த நிலைமையில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு இந்த மாதிரித் தொல்லையில் இறக்கி விட்டது. காசு, பணம் எதிர்பார்த்து இவற்றை எழுதவில்லை என்பது அய்யா மடலின் ஒரு பகுதி!
….இச்சொற்களின் வாய்மையும் வலிமையும் தான் என்னே! நம்மை அறியாமல் கண்ணீரை வரவழைக்கவில்லையா?
விடுதலை – உங்கள் பிள்ளை!
எனது பாசமிகு விடுதலை வாசகர்களே, நேசமிகு இனவுணர்வாளர்களே, உறுதிமிகு சமூக நீதிப் போராளர்களே, பற்றுமிகு பகுத்தறிவாளர்களே,
விடுதலையை உங்கள் பெற்ற பிள்ளையைவிடப் பெரிதாகக் கருதி அதன் வளர்ச்சியைக் கவலையோடு நோக்குங்கள்!
உங்களது இதயமாய் கருதி அதனைக் காக்கும் விதத்தில் அதற்குத் தங்கு தடையற்ற ஆதரவு என்ற இரத்த ஓட்டம் பாய்ச்சி தடை படாது இயங்கச் செய்வீர்!
வாங்கிப் படியுங்கள் தாங்கிப் பிடியுங்கள்
சமுதாய மாற்றத்திற்கு, இரத்தம் சிந்தாத யுகப்புரட்சிக்கு இந்தக் கருவியைத் தவிர, சக்தி வாய்ந்த போர்க் கருவி வேறு உண்டா?
எனவே விடுதலையை வாங்கிப் படியுங்கள் – அதன் மூலம் தாங்கிப் பிடியுங்கள் எங்களுக்காக அல்ல; நம் இன இழிவு நீங்கிட புதியதோர் உலகு செய்ய, பூபாளம் பாடத் தொடங்குவது இதுதான்!