திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்

ஜூன் 01-15 2019

என்.வி.நடராசன்

பிறப்பு: 12.06.1912

இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை  பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர். கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஆனந்தபோதினியில் அச்சுக் கோப்பவராகயிருந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர். இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறினார், இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும்  (Sincere) இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ! இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு.

அவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார், அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.

என்.வி.என்னை நினைப்போம், இலட்சியத்திற்கே முதல் இடம் கொடுப்போம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *